Rasam Podi Image credit - youtube.com
உணவு / சமையல்

செட்டிநாட்டு பூண்டு ரசம், ஆல் இன் ஒன் டேஸ்டி ஆம்லா பொடி செய்யலாம் வாங்க!

கே.எஸ்.கிருஷ்ணவேனி

செட்டிநாட்டு சமையலுக்கு எப்பொழுதுமே தனி ருசி உண்டு!

செட்டிநாடு பூண்டு ரசம்:

புளி சிறிய எலுமிச்சை அளவு 

தக்காளி 2 

துவரம் பருப்பு 1/4 கப் 

பூண்டு 10 பற்கள் 

மிளகு 1/2 ஸ்பூன்

சீரகம் 1/2 ஸ்பூன்

தனியாத் தூள் 1 ஸ்பூன்

மிளகாய் தூள் 1/2 ஸ்பூன்

உப்பு தேவையானது

சர்க்கரை 1 ஸ்பூன்

கொத்தமல்லி சிறிது

தாளிக்க: கடுகு, கருவேப்பிலை, நெய், சீரகம்

துவரம் பருப்பை அரை கப் தண்ணீர் விட்டு குக்கரில் நன்கு குழைவாக வெந்தெடுக்கவும். மிளகு, சீரகம், பூண்டு மூன்றையும் மிக்ஸியில் போட்டு ஒன்றிரண்டாக பொடித்தெடுக்கவும். புளியை சிறிது சூடான நீரில் ஐந்து நிமிடம் ஊறவைத்து நன்கு கரைக்கவும். அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து கையால் நன்கு கசக்கவும். தேவையான உப்பு, தனியாத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து அடுப்பில் கொதிக்க விடவும். புளி வாசனை போனதும் வெந்த துவரம் பருப்பை தேவையான அளவு தண்ணீர் விட்டு நன்கு கரைத்து விடவும். 

வாணலியில் கடுகு, சீரகம், கருவேப்பிலை சிறிது உருவிப் போட்டு நெய் விட்டு கடுகு பொரிந்ததும் பொடித்து வைத்துள்ள மிளகு, சீரகம், பூண்டுப் பொடி சேர்த்து பூண்டு வாசனை வரும் வரை வறுத்து ரசத்தில் கொட்டவும். ரசம் மொச்சு வந்ததும் (கொதிக்க விடவேண்டாம்) இறக்கி பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

ஆல் இன் ஒன் டேஸ்டி ஆம்லா பொடி:

பொடியை செய்து வைத்துக்கொண்டால் ஆறு மாதங்கள் வரை கெடாததுடன் சூடான சாதத்தில் சிறிது நெய் விட்டு பிசைந்து சாப்பிட அமிர்தமாக இருக்கும். இந்த சத்து நிறைந்த நெல்லிக்காய் பொடியை நல்லெண்ணெய் விட்டு குழைத்து இட்லி பொடியாக சாப்பிடலாம். செய்வதும் எளிது. சத்தும் நிறைய. பெரிய நெல்லிக்காயில் செய்வதால் உடலுக்கு மிகவும் நல்லது.

பெரிய நெல்லிக்காய் 20

உளுத்தம் பருப்பு 1/2 கப் கடலைப்பருப்பு 1/4 கப் 

உப்பு தேவையானது

மிளகாய் 6

காஷ்மீரி மிளகாய் 4

வெள்ளை எள் 2 ஸ்பூன்

புளி சிறிய எலுமிச்சை அளவு

நல்லெண்ணெய் 2 ஸ்பூன்

பெரிய நெல்லிக்காயை அலம்பி கேரட் துருவலில் துருவி எடுத்துக் கொள்ளவும். இதனை இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு ஈரப்பதம் போக நன்கு மொறுமொறுப்பாக வறுத்தெடுக்கவும்.

வாணலியில் கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகாய், காஷ்மீரி மிளகாய் ஆகியவற்றை சிறிது நல்லெண்ணெய் விட்டு சிவக்க வறுத்தெடுக்கவும். கடைசியாக எள்ளையும் சேர்த்து பொரிந்து வந்ததும் தூசி தும்பு நீக்கிய புளியை சேர்த்து இரண்டு வதக்கு வதக்கி எடுத்து விடவும்.

இப்பொழுது மிக்ஸியில் முதலில் வறுத்த பருப்பு, மிளகாய் ஆகியவற்றை பொடித்துக் கொண்டு அத்துடன் வறுத்து வைத்துள்ள நெல்லிக்காய், புளியையும் சேர்த்து தேவையான உப்பும் போட்டு கொரகொரப்பாக பொடித்து எடுக்கவும்.

இந்த ருசியான பொடியை சூடான சாதத்தில் சிறிது நெய் விட்டு பிசைந்து தயிர் பச்சடியுடன் சாப்பிட நன்றாக இருக்கும். இட்லி, தோசைக்கும் மிளகாய்ப்பொடி போல் நல்லெண்ணெய் குழைத்து சாப்பிடலாம்.

பெற்றோர்கள் பெறும் விவாகரத்து; பிள்ளைகளுக்குத் தரும் தண்டனை!

ஸ்கிசோஃப்ரினியா காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சைகள்!

நீங்கள் சாப்பிடுவது தூய்மையான கோதுமையே இல்லை… உண்மைய முதலில் தெரிஞ்சுக்கோங்க!

நீங்கள் தினமும் Mouth wash பயன்படுத்துபவரா? அச்சச்சோ ஜாக்கிரதை!

நாட்டைக் காக்கும் ராணுவ வீரர்களுக்கு சொத்தை எழுதிக் கொடுத்த நடிகர்! அடடே யாருப்பா அவர்?

SCROLL FOR NEXT