வெண்டைக்காயின் ஆரோக்கிய நன்மைகள் காரணமாக தென்னிந்தியாவில் பல உணவு வகைகளில் இது பயன்படுத்தப்படுகிறது. வெண்டைக்காயை வெறும் பொரியலாக மட்டுமே செய்து சாப்பிட வேண்டும் என்பதில்லை. இதைக் கொண்டு பல சுவையான சிற்றுண்டிகளும் செய்யலாம். அவற்றில் மிகவும் பிரபலமான ஒன்றுதான் மொறு மொறு வெண்டைக்காய் சிப்ஸ்.
இதன் சுவை உண்மையிலேயே அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் இந்த சிப்ஸ் டீ, காபி போன்ற எந்த ஒரு பானத்துடனும் சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும். இந்தப் பதிவில் வெண்டைக்காய் சிப்ஸ் எப்படி செய்வது எனப் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
வெண்டைக்காய் - 250 கிராம்
கடலை மாவு - 1/2 கப்
அரிசி மாவு - 1/4 கப்
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா - 1/4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
செய்முறை:
முதலில் வெண்டைக்காயை நன்றாகக் கழுவி உலர்த்தி சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். பின்னர், ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், கரம் மசாலா தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
வெட்டிய வெண்டைக்காயை மாவில் போட்டு நன்றாகக் கிளறி அனைத்து துண்டுகளும் மாவில் ஒட்டும்படி செய்யவும்.
இப்போது ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்றாகக் காய்ந்ததும், மாவு பூசப்பட்ட வெண்டைக்காய் துண்டுகளை எண்ணெயில் போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்து எடுத்தால், வேற லெவல் சுவையில் வெண்டைக்காய் சிப்ஸ் தயார்.
இது சூடாக சாப்பிடுவதற்கு சூப்பராக இருக்கும். குறிப்பாக, டீ காபியுடன் சேர்த்து சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும். இது வெறும் நொறுக்கு தீனி என்பதையும் தாண்டி, வெண்டைக்காயில் உள்ள நார்ச்சத்து, விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உடலுக்கு ஆரோக்கியத்தையும் அள்ளித் தரும். எனவே, இந்த அட்டகாசமான ரெசிபியை இன்றே முயற்சித்துப் பார்த்து உங்களது கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.