Food Museum 
உணவு / சமையல்

உணவு அருங்காட்சியகம் - இந்தியாவில் இருக்கிறதா?

தேனி மு.சுப்பிரமணி

உணவு (Food) என்பது ஒர் உயிரினத்திற்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைப்பதற்காக உண்ணப்படும் எந்தவொரு பொருளையும் குறிக்கும். உணவு என்பது பொதுவாக, தாவரங்கள் அல்லது விலங்குகளிலிருந்து தோன்றுகிறது. கார்போஹைட்ரெட்டுகள், கொழுப்புகள், புரதங்கள், உயிர்ச்சத்துக்கள், தாதுக்கள் போன்ற அவசியமான சத்துகளை உணவு பெற்றுள்ளது. மனிதர்கள் பொதுவாக, வேட்டை மற்றும் விவசாயத்தின் மூலம் உணவு சேகரித்துக் கொண்டனர்.

பெரும்பாலான உணவுகள் தாவரங்களில் இருந்து தோன்றுகின்றன. சில உணவுகள் நேரடியாகத் தாவரங்களிடமிருந்தும், சில உணவுகள் மறைமுகமாகத் தாவரங்களைச் சார்ந்தும் பெறப்படுகின்றன. பல தாவரங்கள் மற்றும் தாவர பகுதிகள் உணவாக உண்ணப்படுகின்றன. சுமார் 2,000 தாவர இனங்கள் உணவுக்காக பயிரிடப்படுகின்றன. தாவரங்களின் விதைகள் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் ஆதாரமான உணவாக இருக்கின்றன. உண்மையில், மனிதர்கள் உட்கொள்ளும் பெரும்பாலான உணவுகள் அனைத்தும் விதை அடிப்படையிலான உணவுகளே ஆகும். சாதாரணமாக விதைகள் ஒர் ஆரோக்கியமான உணவு என்று கருதப்படுகின்றன.

எல்லா விதைகளும் சாப்பிடக்கூடிய உணவுகளாக இருப்பதில்லை. எலுமிச்சை விதைகள் மூச்சடைப்பையும், ஆப்பிள், செர்ரி போன்றவற்றின் விதைகளில் சயனைடு நச்சும் காணப்படுகின்றன. இவ்விதைகளை அதிகமான அளவில் உட்கொண்டால் நச்சின் பாதிப்பு உண்டாகலாம்.

காய்கறிகளானது இரண்டாவது வகை தாவர உணவுகளாக பொதுவாக உட்கொள்ளப்படுகின்றன. இவற்றில் வேர் காய்கறிகள் (உருளைக்கிழங்கு மற்றும் கேரட்), வேர் மூண்டுகள் (வெங்காயம் குடும்பம்), இலை காய்கறிகள் (கீரைகள்), தண்டு காய்கறிகள் (மூங்கில் தளிர்கள்) மற்றும் மஞ்சள் காய்கறிகள் முட்டைக்கோசு, காலிஃபிளவர் போன்றவை சில.

விலங்குகள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அவை உற்பத்தி செய்யும் பொருட்களால் உணவாகின்றன. உதாரணமாக, மாமிச உணவானது விலங்குகளின் தசைகளிலிருந்து அல்லது அவற்றின் உறுப்புகளிலிருந்து நேரடியாக உணவாகக் கிடைக்கிறது. பாலூட்டிகளின் சுரப்பிகளிலிருந்து பால் உள்ளிட்ட சில வகை உணவுகள் விலங்குகளால் உற்பத்தி செய்யப்படுகின்றன. பாலில் இருந்து பல்வேறு வகையான பால் உணவுப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. பறவைகளால் உற்பத்தி செய்யப்படும் முட்டைகளும் உணவுப் பொருட்களாகப் பயன்படுகின்றன. தேனீக்கள் உற்பத்தி செய்யும் தேன் ஒரு நல்ல மருந்துணவாகவும் பயன்படுகிறது. சில வேளைகளில் விலங்குகளின் இரத்தமும் உணவாகப் பயன்படுத்தப்படுகிறது.

மனிதர்களின் உணவுகள் நாடு, மாநிலம், ஊர், இனம் என்று எத்தனையோ வகைகளில் மாறுபட்டதாக இருக்கின்றன. உலகில் பல இடங்களில், உணவுகள் குறித்த கதையைச் சொல்லும் அருங்காட்சியகமாக, உணவு அருங்காட்சியகம் (Food Museum) அமைக்கப்பட்டிருக்கிறது.

சில வேளைகளில், உணவு அருங்காட்சியகங்களானது, உலகு எவ்வாறு சாப்பிடுகின்றது என்பதைக் கவனத்தில் கொள்கின்றன. இதற்கு எடுத்துக்காட்டு பிரான்சின், மான்ட்பில்லியில் உள்ள அக்ரோபோலிஸ் அருங்காட்சியகம், சுவிட்சர்லாந்தின், நெஸ்லே பவுண்டேசனின் அருங்காட்சியகம் போன்றவை ஆகும்.

ஜப்பான் நாட்டின் றாமென் அருங்காட்சியகம் என்பது ஒரு புதுமையான உணவு அருங்காட்சியகம் ஆகும். இங்கு றாமென் உணவு வரலாறும், பல்வேறு நூடுல்ஸ் உணவகங்களும், பேரங்காடி வடிவில் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. உணவு அருங்காட்சியகங்கள் வளர்ந்து வரும் உணவு பாரம்பரிய இயக்கத்தின் ஒரு பகுதியாகும்.

இந்தியாவில் முதன்முதலாக 1965 ஆம் ஆண்டு தஞ்சாவூரில் இந்திய உணவுக் கழக அலுவலகம் தொடங்கப்பட்டது. பின்னர் இவை நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, உணவு மேம்பாட்டில் பல்வேறு நிறுவனங்கள் இந்திய அரசினால் ஏற்படுத்தப்பட்டன. இந்திய உணவுக் கழகத்தின் முதல் அருங்காட்சியகம் தஞ்சாவூரில் அமைக்கத் தீர்மானிக்கப்பட்டு 2015 மே மாதம் அப்போதைய அரசின் இத்துறை அமைச்சர் இராம் விலாசு பாசுவானால் அடிக்கல் நாட்டப்பட்டது. இப்பணிகள் முடிவடைந்த நிலையில், 2021 ஆம் ஆண்டு 15 நவம்பர் அன்று மத்திய வணிகத்துறை மற்றும் தொழிற்துறை அமைச்சர் பியூஷ் கோயல் காணொளி காட்சி மூலம் இந்த அருங்காட்சியகத்தினை துவக்கி வைத்தார்.

இந்த அருங்காட்சியகம் உணவு எனும் கருப்பொருள் அடிப்படையிலானது. மீசோலெதிக் காலத்திலிருந்து உணவு எவ்வாறு சேகரிக்கப்பட்டது என்பதை பல்வேறு சேமிப்பு முறைகள் மற்றும் ஆரம்பகால மனிதன் எதிர்கொண்ட சவால்கள் வரை பகிர்ந்து கொள்கிறது. இந்திய உணவுக் கழக வரலாறு, கொள்முதல், சேமிப்பு மற்றும் பாதுகாப்பு, மற்றும் விநியோகம் தொடர்பான பற்றிய முக்கிய தகவல்களை காட்சிப்பொருளாக இந்த அருங்காட்சியகம் உள்ளடக்கியுள்ளது. இந்திய உணவுக் கழகம் குறித்த ஒரு முப்பரிமாணத் திரைப்படமும் மெய்நிகர் திரைப்படமும் குழந்தைகளுக்கான வினாடி வினா வசதியும் பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் உள்ளன.

மாதச் சம்பளம் வாங்குபவர்கள் செய்யும் 6 நிதித் தவறுகள்! 

ஆரஞ்சு Vs சாத்துக்குடி: எது சிறந்தது?

Alia bhatt beauty tips: நடிகை ஆலியா பட் அழகின் ரகசியம் இதுதான்!

6 Super Cool Facts About The Moon!

சிறுகதை - தன்மானக் கவிஞன் ராஜாமணி!

SCROLL FOR NEXT