முசுமுசுக்கை தோசை www.youtube.com
உணவு / சமையல்

ஆரோக்கியம் தரும் முசுமுசுக்கை தோசை, மூலிகை துவையல்!

கே.எஸ்.கிருஷ்ணவேனி

முசுமுசுக்கை கீரை ஒரு கொடி வகையாகும். இந்த கீரையில் நார்ச்சத்து, இரும்பு சத்து, கால்சியம், விட்டமின் சி நிறைந்துள்ளது. இந்த கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள சளி, இருமல், மூக்கடைப்பு, சுவாசப் பிரச்சனைகளை தீர்க்கும். அடிக்கடி ஏற்படும் தும்மல், குறட்டை பிரச்சினைகளை சரி பண்ணும்.

இந்தக் கீரையை கொண்டு ரசம் வைக்கலாம். தோசை செய்யலாம். துவையல், சூப் என செய்து கொடுக்க சளி கரைந்து வெளியேறி  விடும்.

முசுமுசுக்கை தோசை:

புழுங்கல் அரிசி 2 கப் 

உளுந்து. 1/4 கப்

முசுமுசுக்கை இலை 2 கைப்பிடிகள் 

காய்ந்த மிளகாய் 1 

மிளகு ஒரு ஸ்பூன் 

சீரகம் ஒரு ஸ்பூன் 

உப்பு தேவையானது

அரிசி, உளுந்து இரண்டையும் சேர்த்து இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். இதற்கு உளுந்து நிறைய தேவையில்லை. நன்கு ஊறியதும் இரண்டு கைப்பிடி அளவு முசுமுசுக்கை இலைகளை தண்ணீரில் நன்கு அலசி சேர்க்கவும். மிளகாய், மிளகு, சீரகம், தேவையான அளவு உப்பு அனைத்தையும் போட்டு நன்றாக அரைக்கவும். உடனடியாக தோசை வார்க்கலாம். இதனை புளிக்க வைக்க வேண்டிய அவசியம் இல்லை. சாம்பார் அல்லது சட்னியுடன் சேர்த்து சாப்பிட ருசியாக இருக்கும் இந்த மூலிகை தோசை.

முசுமுசுக்கை துவையல்:

துவரம் பருப்பு 2 ஸ்பூன் 

மிளகாய் வற்றல் 2 

மிளகு ஒரு ஸ்பூன் 

சீரகம் அரை ஸ்பூன்

சின்ன வெங்காயம் 10 

பூண்டு 5 பற்கள் 

முசுமுசுக்கை இலை 2 கைப்பிடி

புளி சிறிது 

உப்பு தேவையானது

முசுமுசுக்கை துவையல்

வாணலியில் துவரம் பருப்பு, மிளகாய் ,மிளகு ,சீரகம் ஆகியவற்றை போட்டு சிறிது நல்லெண்ணெய் விட்டு சிவக்க வறுத்து எடுக்கவும். அடுத்ததாக ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு சின்ன வெங்காயம், பூண்டு, புளி சிறிது சேர்த்து வதக்கி அத்துடன் கடைசியாக முசுமுசுக்கை இலை இரண்டு கைப்பிடி அளவு தண்ணீரில் அலசி போட்டு நன்கு வதக்கவும். சிறிது ஆறியதும் தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்க சத்தான ருசியான முசுமுசுக்கை துவையல் தயார். இந்த மூலிகை துவையலை சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட சளி இருமல் ஜலதோஷத்திற்கு நல்லது.

மாப்பிள்ளை வீடு சென்னை... அதனால போட்டும், துடுப்பும்தான்!

சாம்பியன் ஆஸ்திரேலியாவின் கொட்டத்தை அடக்கிய தென் ஆப்பிரிக்கா!

பெண்களுக்கு ஏற்படும் மெனோபாஸ்: Hot Flashes என்றால் என்ன? கையாள்வது எப்படி?

இந்த சின்னஞ்சிறு காயில் ஒளிந்திருக்கும் சூப்பர் நன்மைகள் தெரியுமா?

குழந்தைகளுக்கு வளர்ச்சி மொழிக் கோளாறு ஏற்படுத்தும் சிக்கல்கள்!

SCROLL FOR NEXT