நாவில் வைத்தவுடனே கரையும், கராச்சி பிஸ்கட்டுகளை நீங்கள் சுவைத்திருப்பீர்கள். நமக்கு மிகவும் பிடித்த ஒரு நொறுக்குத் தீனி அது. அந்த கராச்சி பிஸ்கட்டில் பல வகைகள் உண்டு. மிக்ஸ்டு நட்ஸ் கொண்டு, டூட்டி ப்ரூட்டி கொண்டு, சாதாரண பிஸ்கட் என்று பல வகைகள் உண்டு. ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவை. அத்தகைய கராச்சி பிஸ்கட்டுகளை வீட்டிலேயே தவாவில் நம்மால் தயாரிக்க முடியும் என்றால் நம்ப முடிகிறதா? அதனை இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.
இந்தக் கட்டுரையில் டூட்டி ப்ரூட்டி கொண்டு கராச்சி பிஸ்கட் தயாரிக்கும் முறையைப் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
இளகிய வெண்ணை - 1/4 கப்
சர்க்கரை - 1/3 கப்
வெண்ணிலா எசன்ஸ் - 1/2 தேக்கரண்டி
மைதா மாவு - 1 கப்
பேக்கிங் பவுடர் - 1 தேக்கரண்டி
டூட்டி ப்ரூட்டி - 1/4 கப்
கஸ்டட் பவுடர் - 3 மேசைக் கரண்டி
பால் - 3 முதல் 4 மேசைக் கரண்டி
செய்முறை:
1. 1/4 கப் வெண்ணையுடன், 1/3 கப் சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும். 5 நிமிடங்கள் இதனைப் போல் செய்யவும். வெண்ணை மஞ்சள் நிறத்திலிருந்து வெண்மை நிறத்திற்கு மாறிவிடும்.
2. இத்துடன் 1/2 தேக்கரண்டி வெண்ணிலா எசன்ஸ், 1 கப் மைதா மாவு, 1 தேக்கரண்டி பேக்கிங் பவுடர், 3 மேசைக்கரண்டி கஸ்டட் பவுடர், 1/4 கப் டூட்டி ப்ரூட்டி சேர்த்து நன்கு பிசைந்து, சப்பாத்தி மாவு பதத்திற்கு கொண்டு வர வேண்டும். தேவைப்பட்டால், பால் சேர்த்துக் கொள்ளலாம். மாவு மிகவும் இளகி இருந்தால், 10 முதல் 15 நிமிடங்கள் குளிர்பதனப்பெட்டியில் ப்ரீசரில் வைத்து விட்டு இறுக்கி, சப்பாத்தி மாவு பதத்திற்கு கொண்டு வரலாம்.
3. பிசைந்த மாவை, நீளமாக கட்டை வடிவத்தில் உருட்டி, பிஸ்கட் வில்லைகள் போடவும்.
4. ஒரு பேக்கிங் தட்டு அல்லது அலுமினியத் தட்டு அல்லது எவர்சில்வர் தட்டில் , எண்ணைத் தடவி, வெட்டிய பிஸ்கட் வில்லைகளை சிறிது இடைவெளிகள் விட்டு படுக்க வைக்கவும்.
5. ஒரு தவா அல்லது கடாயில் அல்லது குக்கரில் (காஸ்கட் மற்றும் வெயிட் நீக்கி) ஸ்டாண்டு வைத்து, 5 நிமிடங்கள் முன் சூடுபடுத்தல் (pre-heat) செய்யவும்.
6. முன்சூடுபடுத்தல் முடிந்தவுடன், பிஸ்கட் வில்லைகள் வைத்த தட்டினை வைத்து, ஒரு மூடி போட்டு, 15 முதல் 20 நிமிடங்கள் மிதமான சூட்டில் வேக வைக்கவும்.
7. சுவையான கராச்சி பிஸ்கட்டுகள் தயாராகி விட்டன.
குறிப்பு: மேலே குறிப்பிட்ட செய்முறையில், டூட்டி ப்ரூட்டிக்கு பதிலாக மிக்ஸ்டு நட்ஸ் பயன்படுத்தி, மிக்ஸ்ட் நட்ஸ் கராச்சி பிஸ்கட்டுகள் தயார் செய்யலாம்.