உருளை இடித்த மசாலா பொரியல்
தேவையான பொருட்கள்;
உருளை கிழங்கு _2
முழு மல்லி _2 ஸ்பூன்
பச்சை மிளகாய் _3
இஞ்சி _சிறியத்துண்டு
மல்லி கீரையின் தண்டு பகுதி துண்டுகள் _3/4 கப்
மஞ்சள் தூள் _1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் _1 ஸ்பூன்
சீரகத்தூள் _1/2 ஸ்பூன்
கரம் மசாலா _1 ஸ்பூன்
தேவையான உப்பு
எண்ணெய் _11/2 ஸ்பூன்
செய்முறை:
உருளைக் கிழங்கை நன்கு கழுவி வேகவைத்து தோல் உரித்து துண்டுகளாக வெட்டி கொள்ளவும். துண்டுகள் ஆறிய பிறகு 1/2 மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து குளிர்ச்சியாக எடுத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு மிக்ஸி ஜார் எடுத்து அதில் முழு மல்லியை போட்டு ஒரு சுற்று சுற்றிவிட்டு அதில் மிளகாய், இஞ்சித்துண்டு முதலியவற்றை போட்டு கரகரப்பாக அரைத்து விட்டு அத்துடன் மல்லி கீரை தண்டு துண்டுகளைப்போட்டு அரைத்து பிறகு அதில் மிளகாய் தூள், மஞ்சள்தூள், உப்பு, சீரகத்தூள், கரம் மசாலா அனைத்தையும் சேர்த்து ஒரு ஸ்பூன் தண்ணீர் ஊற்றி அரைத்து தனியாக எடுத்துக் கொள்வோம்.
ஒரு அடி கனமான வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்த பொருட்களை போட்டு பொரிந்ததும் மிதமான தீயில் வைத்து அரைத்த மசாலாவை போட்டு 1 ஸ்பூன் தண்ணீர் சேர்த்து நன்கு வதக்கிவிட்டு வெட்டி வைத்த உருளைக்கிழங்கை இத்துடன் போட்டு மசாலாவோடு ஒன்று சேர வதக்கி தீயை குறைத்து வைத்து வேக வைக்கவும். உப்பு சரி பார்த்து தேவை என்றால் சேர்த்துக் கொள்ளலாம். மிகுந்த சுவையுடன் உருளை இடித்த மசாலா பொரியல் ரெடி. சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதத்துடன் சாப்பிட சுவை அள்ளும்.
பச்சை பயறு சீராளம்
தேவையான பொருட்கள்:
முழு பச்சை பயறு _1/4 கிலோ
வற்றல் _6
இஞ்சி _ 1துண்டு
பூண்டு _2 பல்
மல்லி கீரை _சிறிதளவு
உப்பு _தேவைக்கு
பொடியாக நறுக்கிய வெங்காயம் _1/2 கப்
மஞ்சள் தூள் _1/2 ஸ்பூன்
சோம்பு _1/2 ஸ்பூன்
தாளிக்க:
தேங்காய் எண்ணெய் 2_ ஸ்பூன்
கடுகு 1/2 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு_1/2 ஸ்பூன்
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் _2
பெருங்காயத்தூள் 1/4 ஸ்பூன்
செய்முறை:
முதலில் பயிறை நன்கு கழுவி வற்றலையும் சேர்த்து 8 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறியதும் மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றாமல் கரகரப்பாக அரைத்து எடுத்து கொள்ளவும். இத்துடன், உப்பு, மஞ்சள், பொடியாக வெட்டிய பூண்டு, மல்லி கீரை, இஞ்சி, வெங்காயம், கருவேப்பிலை மற்றும் சோம்பு இவற்றை சேர்த்து நன்கு பிசைந்து ஒரு தட்டில் இந்த கலவையை தட்டி சம படுத்தி விடவும்.
பின்னர் இதை இட்லி பாத்திரத்தில் வைத்து ஆவியில் நன்றாக வேகவைத்து இறக்கி ஆறவிடவும்.
ஆறியதும் கத்தியால் துண்டு துண்டாக வெட்டி வைத்து விட்டு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு தாளிக்க கொடுத்த பொருட்களை போட்டு தாளித்து இறக்கி இத்துடன் வெட்டி வைத்த பயறு கேக் துண்டுகளை கலந்து கிண்டி பரிமாறலாம். மிகவும் சுவையான பச்சை பயிறு சீராளம் ரெடி.
இத்துடன் தயிர் ஊற்றி ஊறவைத்து சாப்பிட்டால் மேலும் சுவையாக இருக்கும்.