சப்பாத்தி, ரொட்டி, புல்கா, பராத்தா, பூரி என எல்லா வகையான ரொட்டிகளுடனும், சாதத்துடனும் சாப்பிட அருமையான சைடிஷ் இது.
கட்டே கி சப்ஜி:
கடலை மாவு ஒரு கப்
மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
ஓமம் (அ) சீரகம்1/4 ஸ்பூன்
மிளகாய்த்தூள் 1/2 ஸ்பூன்
கரம் மசாலா 1/2 ஸ்பூன்
உப்பு தேவையானது
கிரேவிக்கு:
கடுகு
சீரகம் 1/2 ஸ்பூன்
பெருங்காயத்தூள்1/4 ஸ்பூன்
வெங்காயம் 1
இஞ்சி சிறிது
பச்சை மிளகாய் 1
மிளகாய் தூள் 1/2 ஸ்பூன்
தனியா தூள் 1/2 ஸ்பூன்
கரம் மசாலா 1/2 ஸ்பூன்
தயிர் 1/2 கப்
உப்பு தேவையானது
கொத்தமல்லி சிறிது
ஒரு அகலமான பாத்திரத்தில் கடலை மாவு, உப்பு, மஞ்சள் தூள், ஓமம், கரம் மசாலாத் தூள், மிளகாய் தூள் ஆகியவற்றை போட்டு பிசிறிக் கொள்ளவும். சமையல் எண்ணெய் 2 ஸ்பூன் சேர்த்து நன்றாக கலந்து தேவையான தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசையவும். உள்ளங்கையில் எண்ணெய் தடவிக் கொண்டு மாவை ஏழு எட்டு பாகங்களாக பிரித்து கையால் உருளை வடிவில் (சூப் ஸ்டிக் போல்) உருட்டிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் நான்கு கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். நீர் கொதிக்கும் சமயம் உருட்டி வைத்துள்ள உருளைகளை சேர்த்து வேக விடவும். நன்கு வெந்ததும் நீரை வடித்து ஆறவிடவும். நீண்ட உருளைகளை 1/2 அங்குள்ள நீளத் துண்டுகளாக வெட்டிக் கொண்டு வாணலியில் நான்கு ஸ்பூன் எண்ணெய் விட்டு நறுக்கிய உருளைகளை சேர்த்து மிதமான தீயில் சிறிது நேரம் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
கிரேவி செய்ய:
கடுகை எண்ணெயில் தாளித்து கடுகு பொரிந்ததும் சீரகம், பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, அத்துடன் நறுக்கிய வெங்காயத்தையும் போட்டு நன்கு வதக்கவும். தனியா தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு, பெருங்காயத்தூள், 2 ஸ்பூன் அரிசி மாவு சேர்த்து கலந்த தயிர் சேர்த்து கொதிக்க விடவும். ஒரு கொதி வந்ததும் தீயைக் குறைத்து வறுத்த உருளைகளை சேர்த்து ஒரு கப் தண்ணீர் விட்டு மிதமான தீயில் கிரேவி கெட்டியாகும் வரை வைத்து பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தூவி இறக்கவும். ருசியான கட்டே கி சப்ஜி தயார்.
ராஜஸ்தானி ரவா பூரி:
ரவை ஒரு கப்
கோதுமை மாவு
உருளைக்கிழங்கு 1
உப்பு சிறிது
சீரகப்பொடி 1 ஸ்பூன்
சில்லி ஃப்ளேக்ஸ் 11/2 ஸ்பூன்
சர்க்கரை 1/2 ஸ்பூன்
கொத்தமல்லி
ஒரு பாத்திரத்தில் ஒரு கப் ரவையை சேர்த்து சூடான நீர் விட்டு கலந்து 15 நிமிடங்கள் ஊறவிடவும். அதில் கோதுமை மாவு, வேகவைத்த மீடியம் சைஸ் உருளைக்கிழங்கை நன்கு மசித்து சேர்க்கவும். உப்பு, சீரகப்பொடி, சில்லி ஃப்ளேக்ஸ், 1/2 ஸ்பூன் சர்க்கரை, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து பூரி செய்ய மாவு பிசைந்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் வைத்து சூடானதும், சிறிய எலுமிச்சை அளவு மாவு எடுத்து பூரிகளாகத் தேய்த்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்க ரவா பூரி தயார்.