பாரம்பரிய தேங்காய்ப் பால் ஜவ்வரிசி உருண்டை!
ஜவ்வரிசி 1/4 கிலோ
தேங்காய் 1
உப்பு 2 சிட்டிகை
ஏலக்காய் பொடி 1/2 ஸ்பூன்
நாட்டு சர்க்கரை. 1/2 கப்
நாட்டு சக்கரை (அ) வெல்லம் (அ) சர்க்கரை எது வேண்டுமோ அவரவர் விருப்பம்போல் எடுத்துக் கொள்ளலாம். வெறும் வாணலியில் ஜவ்வரிசியைப் போட்டு சூடு வர வறுத்து ஒரு பாத்திரத்தில் கொட்டவும். அதில் இரண்டு சிட்டிகை உப்பு சேர்த்து கொதிக்க வைத்த சூடான நீரை கொஞ்சம் கொஞ்சமாக விட்டு கரண்டியால் கிளறவும். தயிர் சாதம் பதத்திற்கு வந்ததும் ஜவ்வரிசியை தட்டு போட்டு மூடி 20 நிமிடங்கள் வைத்துவிடவும். அரை மூடி தேங்காயைத் துருவி அத்துடன் ஏலக்காய் பொடி, நாட்டு சர்க்கரை அல்லது சர்க்கரை கலந்து கொள்ளவும். கையை தண்ணீரில் நனைத்துக்கொண்டு ஜவ்வரிசியை கையளவு எடுத்து உருண்டையாக பிடித்து அதன் நடுவில் தயார் செய்து வைத்துள்ள தேங்காய், ஏலக்காய் பொடி, நாட்டு சர்க்கரை கலந்த பூரணத்தை வைத்து உருண்டையாக பிடித்துக் கொள்ளவும்.
ஒரு இட்லி பாத்திரத்தில் தண்ணீர் வைத்து நன்கு சூடானதும் இட்லி தட்டை வைத்து ஒவ்வொரு குழியிலும் பிடித்து வைத்துள்ள ஜவ்வரிசி உருண்டைகளை வைத்து இட்லி வேக வைப்பது போல் 5-7 நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும். மீதமுள்ள ஒரு மூடித் தேங்காயை இரண்டு ஏலக்காய், சிறிது சர்க்கரை சேர்த்து அரைத்து சூடான தண்ணீர் விட்டு பிழிய தேங்காய்ப்பால் தயார். இதனை ஜவ்வரிசி உருண்டையின் மேல் விட்டு சாப்பிட அட்டகாசமான சுவையில் இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் அட்டகாசமான பலகாரமாகும்.
ஜவ்வரிசி பால் கஞ்சி:
ஜவ்வரிசி 50 கிராம்
நாட்டுச்சக்கரை தேவையானது
பால் ஒரு கப்
ஏலக்காய் பொடி அரை ஸ்பூன்
ஜவ்வரிசியை வாணலியில் போட்டு நன்கு பொரியும் வரை வறுக்கவும். பிறகு மிக்ஸியில் போட்டு பொடித்துக் கொள்ளவும். பொடித்த மாவுடன் அரை கப் தண்ணீர்விட்டு கட்டி இல்லாமல் கரைத்துக் கொள்ளவும். ஒரு கப் பால் விட்டு அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும். அடியில் தங்கி விடாமல் இருக்க அடிக்கடி கரண்டியால் கிளறவும். ஜவ்வரிசி வெந்து கண்ணாடி போல் ஆனதும் தேவையான அளவு நாட்டுச்சக்கரை, ஏலக்காய் தூள் கலந்து பரிமாறவும். ஜவ்வரிசியில் புரதம் அதிகம் இருப்பதால் தசைகளை வலுவூட்டவும், செல்களை புதுப்பிக்கவும், ரத்த ஓட்டத்தை சீராக்கவும் உதவும்.