வரலக்ஷ்மி விரதம் கடைப்பிடிக்கும்போது மகாலக்ஷ்மியின் அம்சமான வரலக்ஷ்மிக்கு படைப்பதற்காக எளிமையான பிரசாதமாக அரிசிபருப்பு பால் பாயாசமும், கோவில் சுண்டலும் வீட்டிலேயே எளிமையாக எப்படி செய்வது என்று பார்ப்போம்.
அரிசி பருப்பு பால் பாயாசம் செய்ய தேவையான பொருட்கள்;
அரிசி-1/4 கப்.
பயித்தம் பருப்பு-2 தேக்கரண்டி.
ஏலக்காய்-1
வெல்லம்- 1 கப்.
பால்-5 கப்.
நெய்- தேவையான அளவு.
முந்திரி-10.
அரிசி பருப்பு பால் பாயாசம் செய்முறை விளக்கம்;
முதலில் கடாயில் 1 தேக்கரண்டி நெய் விட்டு ¼ கப் அரிசி, 1 ஏலக்காய் சேர்த்து நன்றாக வறுத்து எடுத்து மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது 2 தேக்கரண்டி பயித்தம் பருப்பை வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும். 1 கப் வெல்லத்தில் தண்ணீர் விட்டு வெல்லத் தண்ணீரை தயார் செய்துக்கொள்ளவும்.
இப்போது ஃபேனில் 4 கப் பாலை ஊற்றி அதில் பயித்தம் பருப்பை சேர்த்து வேகவிடவும். பிறகு அரைத்து வைத்த அரிசியை சேர்த்து மூடி நன்றாக வேகவைக்கவும். சாதம் நன்றாக வெந்ததும் இதில் இப்போது 1 கப் பால் சேர்த்து அத்துடன் கரைத்து வைத்த வெல்லத் தண்ணீரையும் வடிகட்டி சேர்க்கவும். இப்போது ஒரு கொதி வந்ததும் அடுப்பில் ஃபேனை வைத்து தாராளமாக நெய்விட்டு 10 முந்திரியை பொன்னிறமாக வறுத்து பாயாசத்தில் சேர்த்து கலந்துவிட்டு இறக்கினால் சுவையான அரிசி பருப்பு பால் பாயாசம் தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பாருங்கள்.
தேவையான பொருட்கள்;
சுண்டல் பொடி செய்வதற்கு,
நல்லெண்ணெய்-1/2 தேக்கரண்டி.
கடலைப்பருப்பு-1/4 கப்.
தனியா-1/4 கப்.
உளுந்தம்பருப்பு-2 தேக்கரண்டி.
வரமிளகாய்-8
வெந்தயம்-1/4 தேக்கரண்டி.
மிளகு-1/4 தேக்கரண்டி.
வெள்ளை எள்-1தேக்கரண்டி.
சீரகம்-1 தேக்கரண்டி.
பெருங்காயத்தூள்-1/2 தேக்கரண்டி.
இஞ்சி பொடி- 1தேக்கரண்டி.
உப்பு-1/2 தேக்கரண்டி.
சுண்டல் தாளிக்க,
கொண்டைக்கடலை-2கப்.
உப்பு-1 தேக்கரண்டி.
தேங்காய் எண்ணெய்-1 தேக்கரண்டி.
கடுகு-1 தேக்கரண்டி.
கடலைப்பருப்பு-1 தேக்கரண்டி.
உளுத்தம் பருப்பு-1 தேக்கரண்டி.
வரமிளகாய்-1
கருவேப்பிலை-சிறிதளவு.
சுக்குப்பொடி-1/2 தேக்கரண்டி.
பெருங்காயத்தூள்-1/2 தேக்கரண்டி.
துருவிய தேங்காய்-1 கப்.
கோவில் சுண்டல் செய்முறை விளக்கம்.
முதலில் ஃபேனில் ½ தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து ¼ கப் கடலைப்பருப்பு, ¼ கப் தனியா, 2 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, 8 வரமிளகாய், வெந்தயம் ¼ தேக்கரண்டி, மிளகு ¼ தேக்கரண்டி, வெள்ளை எள் 1 தேக்கரண்டி, 1 தேக்கரண்டி சீரகம், பெருங்காயத்தூள் ½ தேக்கரண்டி, இஞ்சி தூள் 1 தேக்கரண்டி இது அனைத்தையும் நன்றாக வறுத்து ½ தேக்கரண்டி உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள். இப்போது சுண்டலுக்கான மசாலா தயார்.
இப்போது இரவு ஊறவைத்த 2 கப் கொண்டைக் கடலையை குக்கரில் சேர்த்து அத்துடன் 1 தேக்கரண்டி உப்பு சேர்த்து 6 விசில் விட்டு எடுக்கவும். இப்போது ஃபேனில் 1 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்த்து கடுகு 1 தேக்கரண்டி, உளுத்தம் பருப்பு 1 தேக்கரண்டி, கடலைப் பருப்பு 1 தேக்கரண்டி, வரமிளகாய் 1, கருவேப்பிலை சிறிதறவு சேர்த்து பொரிய விட்டு பெருங்காயத்தூள் ½ தேக்கரண்டி, சுக்குப்பொடி ½ தேக்கரண்டி வேகவைத்த கொண்டைக் கடலையை சேர்த்து அத்துடன் 1 கப் துருவிய தேங்காய் அரைத்து வைத்திருக்கும் சுண்டல் பொடி 1 தேக்கரண்டி சேர்த்து கலந்து விட்டால் மணக்கும் கோவில் சுண்டல் தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.