உணவு / சமையல்

வெஜிடபிள் மிக்ஸ் வெரைட்டி டிஷ்!

மங்கையர் மலர்

ரைத்து வைத்த மாவையே தினமும் இட்லி மாற்றி தோசை மாற்றி ஊத்தப்பமாகச் செய்தால் –

“போர்... இந்த டிபன் வேண்டாம். வெரைட்டியாக ஏதாவது செய்து தா...” கூச்சல்கள்.

ஆனால் – மணிக்கணக்கில் அடுக்களையில் உழலுவதோ உங்களுக்கு அலர்ஜி. அப்படியும் 5 ஸ்டார் ஹோட்டலுக்குப் போட்டியாக சட்டென்று விதவிதமான ஐட்டங்கள் உங்கள் அட்சய பாத்திரத்திலிருந்து வர வேண்டுமா?

இதோ... ஒரு சுலபமான வழி இருக்கிறது.

எப்படி என்கிறீர்களா?

இட்லிக்கு மாவு அரைத்து வைப்பதற்கான (க்ரைண்டரில்தான்) சிரமம் கூட பட வேண்டாம். இந்த வெஜிடபிள் மிக்ஸைத் தயார் செய்து வைப்பதற்கு:

தேவையான பொருட்கள்: மூன்று பங்கு உருளைக்கிழங்கு, ஒரு பங்கு வெங்காயம், 2 பங்கு காலிஃப்ளவர், 1 பங்கு காரட், பட்டாணி வகையறாக்களை எடுத்துக்கொள்ளுங்கள். (உங்கள் வீட்டுத் தேவைக்கேற்ப.)

செய்முறை: வெங்காயத்தை பொடிப் பொடியாக அரிந்து கொள்ளுங்கள். மற்ற காய்களை தோல் நீக்கி, துண்டாக்கி ப்ரெஷர் குக்கரில் வேகவைத்துக் கொள்ளுங்கள்.

வெந்த காய்களை மசித்து உப்பு, காரம் சேர்த்து வைக்கவும்.

ஒரு வாணலியில் சிறிது எண்ணெயைக் காயவிட்டு அதில் சிறிது சீரகத்தை வெடிக்க விட்டு அதில் வெங்காயத்தை வதக்கவும். அதில் மசித்த காய்கறிகளை கலந்து 5 நிமிடங்கள் வேக வைக்கவும்.)

(தேவைப்பட்டால் இக்கலவையில் முந்திரித் துண்டுகள், பனீர் போன்றவைகளையும் சேர்க்கலாம்.)

இதோ, உங்கள் வெஜிடபிள் மிக்ஸ் தயார்.

இதை உங்கள் வசதிக்கேற்ப ஃப்ரிட்ஜ் அல்லது ஃப்ரீசரில் வைத்துத் தேவைப்படும்போது வேண்டிய அளவு எடுத்துச் சமைத்தால் ஒரு வாரம் வரை உபயோகிக்கலாம்.

* இக்கலவையை வட்ட வடிவில் தட்டி கடலை மாவுக்கரைசல் அல்லது முட்டைக் கரைசலில் தோய்த்து எடுத்து ரொட்டித் தூளில் புரட்டி எண்ணெயில் பொரித்தெடுத்தால் சுடச்சுட வெஜடபிள் கட்லெட்கள் பத்தே நிமிடங்களில் ரெடி!

* இந்தக் கட்லெட்களையே உள்ளங்கை அகலம் தட்டிப் பொரித்து இரண்டாகப் பிளக்கப்பட்டு தோசைக்கல்லில் டோஸ்ட் செய்த ‘பன்’களுக்க நடுவே சாண்ட்விச் போல வைத்துக்கொண்டால் அருமையான வெஜிடபிள் பர்கர் ரெடி!. வெங்காயம், தக்காளி, வெள்ளரி வில்லைகளுடன் பரிமாறினால் ஃபாஸ்ட் ஃபுட் ஐயிட்டங்கள் பிச்சை வாங்க வேண்டும்!

* ப்ரெட் ஸ்லைஸ்களை லேசாக ஈரமாக்கிக்கொண்டு இரு கைகளால் அழுத்திவிட்டு அதில் சிறிது வெஜிடபிள் மிக்ஸை வைத்து மூடி ஓரங்கள் பிரியாது மைதாமாவைப் பூசிவிட்டுப் பொரித்தெடுங்கள். சுடச்சுட ப்ரெட் ரோல்ஸ் தயார். தக்காளி சாஸ்ஸுடன் சாப்பிட சூப்பர் போங்க.

* சப்பாத்தியை கனமாக இட்டு அதனுள் இந்த வெஜடபிள் மிக்ஸ்சை வைத்து மூடி பிய்ந்து போகாமல் இடவும். தோசைக் கல்லில் இரண்டு பக்கத்தையும் வேகவிட்டு எடுத்தால் நிமிடங்களில் வெஜிடபிள் பராத்தா ரெடி. தொட்டுக்கொள்ள தயிர் பச்சடியே போதும்.

வெங்காயம், பூண்டு, தக்காளி, தயிர் ஆகியவற்றைச் சேர்த்து செய்த க்ரேவியில் உப்பு, காரம், மசாலா பொடிகளைச் சேர்த்துக் கொதிக்கவிடவும். இதில் வெஜிடபிள் மிக்ஸை சிறிய உருண்டைகளாக்கிப் பொரித்துப் போட்டுப் பரிமாறினால் “அட... எப்படி இவ்வளவு சீக்கிரம் வெஜிடபிள் கோஃப்தா ரெடியாச்சு!” என்று அனைவரும் ஆச்சரியப்படுவார்கள்.

சுத்தப்படுத்திய குடமிளகாயின் உட்புறத்தில் இந்த வெஜிடபிள் மிக்ஸ்ஸை அடைத்துவிட்டு மிளகாயை சூடான தோசைக்கல்லில் திருப்பிப் போட்டு எடுத்து வெங்காயம், தக்காளி க்ரேவிக்குள் போட்டால் ஸ்டஃப்டு காப்சிகம் ரெடி.

இதே கலவை வெஜிடபிள் போண்டாவாகவும், சமோசாவாகவும், சாண்ட்விச்சாகவும்கூட உங்கள் கற்பனைக்கும் ருசிக்கும் ஏற்றபடி நொடியில் உருமாறும். எந்த டிஷ்’ஷாகச் செய்தாலும் சுவையாக இருக்கும்.

- உஷா

வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் 8 மாலை நேரப் பழக்க வழக்கங்கள்!

மருத்துவத்துறையில் ஆக்டிவேட்டட் சார்க்கோலின் பயன்பாடுகள்!

இந்தியாவில் நடக்கும் மிகப்பெரிய மோசடி… ஜாக்கிரதை மக்களே!

இது மட்டும் தெரிஞ்சா அதிக நேரம் கழிவறையில் இருக்க மாட்டீங்க! 

விளையாட்டு வீரரைப் போர் வீரராக மாற்றிய கம்பீர்… என்னாவா இருக்கும்???

SCROLL FOR NEXT