Book
Book https://ta.quora.com
வீடு / குடும்பம்

புத்தக வாசிப்பின் சிறப்புகள்!

எஸ்.விஜயலட்சுமி

வ்வொரு ஆண்டும் ஏப்ரல் 23ம் தேதி உலக புத்தக தினம் கொண்டாடப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள எழுத்தாளர்களின் சிறந்த படைப்புகளை கௌரவிப்பதற்காக யுனெஸ்கோ இந்த நாளை உலக புத்தக தினமாக அறிவித்திருக்கிறது.

புத்தகங்கள் மனிதனின் மிகச்சிறந்த நண்பர்கள். ஒரு நல்ல புத்தகம் 100 நல்ல நண்பர்களுக்கு சமம் என்றார் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல் கலாம். ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக்கொள்ளும்போது வரும் முன்பணத்தில் முதல் 100 டாலர்களுக்கு புத்தகம் வாங்குவாராம் மேலை நாட்டு நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின். நாமும் குழந்தைகளுக்கு புத்தகம் வாங்கிக் கொடுத்து புத்தக வாசிப்பை சிறு வயதிலிருந்தே அவர்களுக்கு ஒரு பழக்கமாகக் கொண்டு வர வேண்டும்.

புத்தக வாசிப்பின் சிறப்புகள் பற்றி பால புரஸ்கார் சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் உதயசங்கர் அவர்கள் கூறிய கருத்துக்களை இந்தப் பதிவில் பார்ப்போம்.

1. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது நமக்கு அதுவரை தெரியாத விடயங்கள் தெரியவரும்.

2. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது நம்முடைய பொதுப்புத்தியில் அதுவரை தெரிந்த தகவல்கள், உண்மைகள், விழுமியங்கள், எல்லாவற்றைப் பற்றியும் கேள்விகள் உருவாகும்.

3. நமது அறிவுப்பரப்பு ஒரு மில்லிமீட்டராவது விசாலமாகும். நம்முடைய உணர்வுகள் கூர்மையடையும்.

4. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது நாம் அதுவரை நம்பியிருந்த உண்மைகள் பொய்களாக மாறும்.

5. நம்முடைய வீடு, ஊர், மாவட்டம், மாநிலம், நாடு, இனம், மதம், சாதி, மொழி இவை யாவும் மறைந்துபோகும். பிரபஞ்ச மனிதனாக உணர முடியும்.

6. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது உலகின் எந்த மொழி பேசும் மனிதர்களின் வாழ்வை, அவர்களுடைய பண்பாட்டை, பழக்க வழக்கங்களை, அந்த மொழி தெரியாமலேயே புரிந்துகொள்ள முடியும்.

7. நம்முடைய மூடநம்பிக்கைகள் ஒழிந்து அறிவியல் பார்வை உருவாகும். மரபுக்கும் நவீனத்துக்கும் உள்ள வேறுபாடுகள் தெரியும்.

8. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது வரலாற்றுக்கும் புராண, இதிகாசங்களுக்கும் உள்ள வித்தியாசம் புரியும்.

9. நாம் வாழும் சமூகத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆவல் ஏற்படும். காக்கை, குருவி, கடல், மலை என்று இயற்கையை ஆராதிக்கத் தோன்றும்.

10. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது காதல் ஊற்றெடுத்துப் பெருகும். சாதி, மதத்தின் பின்னுள்ள சதி வலையைப் புரிந்துகொள்ள முடியும்.

11. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது இந்த உலகத்தின் மீது விரிந்துள்ள ஏகாதிபத்தியத்தின் சதி வலையைத் தெரிந்துகொள்ள முடியும். பார்க்கிற அத்தனை ஜீவராசிகள் மீதும் அன்பு கொள்ளத் தோன்றும். சமத்துவமற்ற, ஏற்றத்தாழ்வுகளுள்ள இந்த சமூகத்தின்மீது கோபம் பொங்கும்.

12. மனிதனை மனிதன் சுரண்டும் அமைப்பினை மாற்றத் தோன்றும். இந்த உலகினை மாற்றப் புரட்சி செய்யவும், அதற்காக ஆயுதம் ஏந்தவும் தோன்றும்.

13. புத்தகம் மனித குலத்தின் அறிவுச் சொத்து. வாசியுங்கள்! வாசியுங்கள்! வாசியுங்கள்!

இதய மாற்று அறுவை சிகிச்சையில் ஒரு புதிய மைல்கல்!

பெண்களுக்கு கைமேல் பலன் தரும் கன்னிகா பரமேஸ்வரி வழிபாடு!

ஹரியானாவில் தீப்பிடித்து எரிந்த சுற்றுலா பேருந்து… 8 பேர் பலி!

தொலைதூரப் பயணங்கள் முடிவதில்லை… தொடரும்…!

பிக்மேலியன் விளைவால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரியுமா?

SCROLL FOR NEXT