உழைத்து சம்பாதிப்பது பெரிதல்ல. இன்றைய சூழலில் நம் உழைப்பினால் நமக்குக் கிடைத்த பணத்தை பாதுகாப்பது அதை விட கடினமான செயலாகும். ஒருவரிடம் பணம் இருக்கிறது என்று தெரிந்தால், அதை நேரடியாகவோ இணையத்தின் வழியாகவோ எப்படியாவது தங்கள் வசமாக்கிக் கொள்ள, ஒரு கூட்டம் திட்டமிட்டுக் கொண்டே இருக்கிறது.
வங்கிக்குப் பணம் எடுக்கச் சென்றால் அதைத் தெரிந்து கொண்ட சிலர் பணம் எடுத்தவரைத் தொடர்ந்து சென்று தக்க சமயத்தில் அவருடைய கவனத்தை திசை திருப்பி பணத்தைக் களவாடும் செயலை நாம் அன்றாடம் செய்தித்தாள்களின் மூலமாக அறிந்து கொள்ளுகிறோம். மேலும் இணைய வழியாக நமது வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை அபகரிப்பதும் நடைபெறுகிறது. இதில் நாம் மிக கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும்.
வங்கிக்குச் சென்று பணம் எடுக்கும் போது நம்பகமான ஒருவரை உடன் அழைத்துச் செல்லுங்கள். பணத்தை எடுத்து முடித்ததும் அங்கேயே அமர்ந்து அதை எண்ணிக் கொண்டிருக்காமல் அதை உடனே பத்திரப்படுத்தி நேராக வீட்டிற்கு வந்து சேர வேண்டும். அதே போல ஏடிஎம்மில் பணம் எடுக்கும் போது மிக கவனமாக பணத்தை எடுத்துக் கொண்டு திரும்ப வேண்டும். உங்களுக்கு பணம் எடுக்கத் தெரியவில்லை என்றால் உங்களுக்கு நம்பகமான ஒருவரை அழைத்துச் சென்று அவர் மூலமாக பணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். முன்பின் தெரியாதவரிடம் ஏடிஎம் கார்டைக் கொடுத்து பணத்தை எடுக்கச் சொல்லவே சொல்லாதீர்கள். இதன் மூலமும் உங்கள் பணம் களவாடப்படும் அபாயம் மிகவும் அதிகம்.
தற்காலத்தில் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பணத்தை முதலீடு செய்து அதில் ஏமாறுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்லுகிறது. நம்பகத்தன்மை இல்லாத நபர்களிடம் தீபாவளி பண்டு போடுதல், சீட்டு கட்டுதல் போன்றவற்றைக் கூடுமானவரைத் தவிர்க்க வேண்டும். அதிக வட்டி தருகிறேன் என்று சொல்பவரை நம்பி பணத்தை முதலீடு செய்யாதீர்கள். இதனால் அவதிப்படப் போவது நீங்கள்தான் என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.
தற்காலத்தில் நாட்டுடமையாக்கப்பட்ட வங்கிகளில் மூத்தோர்களுக்கு (Senior Citizens) எட்டு சதவீதம் வரை வட்டி வழங்குகிறார்கள். இத்தகைய நாட்டுடமையாக்கப்பட்ட வங்கிகளில் நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை முதலீடு செய்யுங்கள். சற்று வசதி உள்ள முதியோர்கள் முதலீட்டிலிருநது வரும் வட்டி வருவாயை மீண்டும் மறுமுதலீடு செய்து சற்று அதிக அளவில் பணத்தை ஈட்டலாம். இது மிகவும் பாதுகாப்பான வழியாகும்.
சில நிதி நிறுவனங்கள் அதிக வட்டி தருவதாக விளம்பரம் செய்வார்கள். அத்தகைய நிறுவனங்களின் பாதுகாப்பை உறுதி செய்வது மிகவும் கடினம். அதிக வட்டிக்கு ஆசைப்படுவானேன். பிறகு பணத்தை இழந்து அல்லல்படுவானேன்.
அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் நாட்டுடமையாக்கப்பட்ட வங்கிகளில் முதலீடு செய்தால் உங்கள் பணம் நூறு சதவிகிதம் பாதுகாப்பாக இருக்கும். ஓரளவிற்கு கணிசமான வட்டியும் கிடைக்கும். நீங்களும் நமது பணம் பத்திரமாக இருக்கிறது என்று தினம் தினம் நிம்மதியாக காலத்தைக் கழிக்கலாம். இத்தகைய நாட்டுடமையாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் அஞ்சல் அலுவலகங்களில் செய்யப்பட்ட உங்கள் முதலீட்டை அவசரத் தேவை ஏற்படும் போது உரிய முறையில் விதிகளுக்கு உட்பட்டு பணத்தைத் திரும்பவும் பெறலாம்.
நமது பணத்தைப் பாதுகாப்பாக வைத்திருந்து அதை உரிய நேரத்தில் நமது அத்தியாவசியத் தேவைகளுக்குப் பயன்படுத்தும் பொறுப்பும் கடமையும் நமக்கு இருக்கிறது. அதிக வட்டிக்கு ஆசைப்படாதீர்கள். அனுபவமிக்க நிதி ஆலோசகர்களிடம் ஆலோசித்து அவர்கள் கூறும் நிறுவனங்களில் பாதுகாப்பாக முதலீடு செய்யுங்கள். ஒரே நிறுவனத்தில் மொத்த தொகையையும் முதலீடு செய்யாதீர்கள். அதிக ஆசை அதிக வட்டி நிச்சயம் ஆபத்தானது என்பது நமக்கு நன்றாகவே தெரியும். அப்படித் தெரிந்தும் நம்மில் பலர் ஏமாந்து போகிறோம். போனது போகட்டும். இனி நாம் ஏமாறாமல் இருப்போம்.