Ayudha Puja 
வீடு / குடும்பம்

உற்பத்தி கருவிகளை போற்றும் ஆயுத பூஜை நன்னாள் - பாரம்பரியமும் வழிபாட்டு முறைகளும்!

ராதா ரமேஷ்

மனித குலம் தோன்றிய வரலாற்றின் முன்னோடியாக வாழ்ந்த ஆதி மனிதன் நாடோடிகளாகவே வாழ்ந்து வந்தான். தன்னுடைய உழைப்பை பயன்படுத்தி எப்பொழுது ஒரு கருவியை உருவாக்க கற்றுக் கொண்டானோ அன்றிலிருந்து தான் தனது நாடோடி வாழ்க்கைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து நிலையாக ஓரிடத்தில் வாழ்வதற்கான அஸ்திவாரத்தை கட்ட ஆரம்பித்தான். நாம் குரங்கிலிருந்து தான் மனிதர்களாக மாறினோம் என்பது அனைவரும் அறிந்ததே. அவ்வாறு குரங்கிலிருந்து மனிதனாக மாற்றம் அடைவதில் முதல் பணி ஒரு கருவியை உருவாக்க கற்றுக் கொண்டதும், அந்தக் கருவியை பயன்படுத்த கற்றுக் கொண்டதுமே என்று அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். ஆக குரங்கிலிருந்து மனிதனாக மாறிய இந்தத் தொடர் பணியில் கருவிகளின் பங்களிப்பு மிகவும் முக்கியம்.

பொதுவாகவே இந்தியா விவசாயத்தை அடித்தளமாகக் கொண்ட ஒரு நாடு. அதனால் மக்கள் மத்தியில் பல்வேறு வகையான கருவிகள் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளன. எனவே மனிதர்களோடும் மனிதர்களின் வாழ்க்கையோடும் பின்னிப் பிணைந்த பல்வேறு கருவிகளை போற்றும் விதமாகத்தான் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டு வந்திருக்கிறது. இன்று நம்மிடையே புழக்கத்தில் இருப்பதைப் போன்று பல்வேறு கருவிகள் நமக்கு முன் வாழ்ந்த மன்னர்கள் காலத்தில் புழக்கத்தில் இருந்திருக்கின்றன. நாகரிக வளர்ச்சியால் அவற்றின் பயன்பாடுகளில் மேம்பாடு ஏற்பட்டு இன்று அவற்றில் பல வெவ்வேறு வடிவங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

அதனால்தான் தலைமுறை தலைமுறையாக நம்முடைய வாழ்வாதாரத்திற்கு அடிப்படையாக இருக்கக் கூடிய பல்வேறு உற்பத்தி கருவிகளை இந்நாளில் நாம் வழிபடுகிறோம். வாழ்வாதாரத்துக்கு ஆதாரமாக இருக்கக்கூடிய இந்த கருவிகளை போற்றுவதும், கௌரவிப்பதும், விழா எடுப்பதும் நம் நாட்டில் அதிலும் குறிப்பாக தென்னிந்தியாவில் தொன்று தொட்டு வரும் ஒரு மரபாக இருந்து வருகிறது.

தென்னிந்தியாவில் ஆயுத பூஜை என்ற பெயரில் இவ்விழாவானது சிறப்பாக கொண்டாடப்படுவதோடு, இந்தியாவின் வடக்கு பகுதியில் ராமநவமி என்ற பெயரிலும், ஒடிசாவில் அஸ்திர பூஜை என்ற பெயரிலும் இவ்விழா கொண்டாடப்படுகிறது. இதனை மேலோட்டமாக பார்த்து இவை கருவிகள் தானே என நாம் மிக எளிதாக புரிந்து கொள்கிறோம். ஆனால் இதற்கென ஒரு விழாவை கொண்டாடும்போது தான் நம்மைச் சுற்றியுள்ள பல்வேறு கருவிகளையும் அவற்றின் பயன்பாடுகளையும் நம்மால் ஆழமாக புரிந்து கொள்ள முடிகிறது.

இந்நாளில் மக்கள் அனைவரும் தாங்கள் செய்யும் தொழில் எதுவாக இருந்தாலும் அத்தொழிலுக்கு பயன்படும் அனைத்து கருவிகளையும் கழுவி,சுத்தப்படுத்தி, அவற்றிற்கு சந்தனம், விபூதி, மஞ்சள் பூசி தெய்வத்திற்கு முன்வைத்து, கற்பூரம் ஏற்றி வழிபடுகிறார்கள். இக்கருவிகளில் சிறிய அளவில் இருக்கக்கூடிய ஸ்பேனர், ஊசி கத்திரிக்கோல், புத்தகங்கள் முதல் வாகனங்கள் வரை என அனைத்து கருவிகளும் அடங்கும். உழைப்பு சக்தியால் உருவாக்கம் பெற்ற இத்தகைய கருவிகளின் பயன்பாடுகளால் பல்வேறு வேலைகளில் இருந்து நாம் விடுதலை அடைந்ததை நினைவு கூறும் விதமாகவும், அத்தகைய இயந்திரங்களை இயக்கும்போது பழுது, விபத்து போன்ற அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவும், இத்தகைய இயந்திரங்களின் உதவியால் கல்வி அறிவும் தொழில் வளமும் மேம்பட்டு மக்கள் அமைதியுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ வேண்டும் என்பதற்காகவும் மக்கள் இதனை மனப்பூர்வமாக கொண்டாடி வருகிறார்கள்.

அன்றைய நாட்களில் தேங்காய், பழங்கள், பூக்கள், அவல், சுண்டல், பொரி, நாட்டு சக்கரை, கரும்பு, மஞ்சள் கொத்து, வாழைக்கன்று என பல்வேறு உணவு பதார்த்தங்களை படைத்து, அதனை உற்றார்க்கும் உறவினர்களுக்கும் கொடுத்து மகிழ்கிறார்கள். பெரும் நிறுவனங்களை நடத்துபவர்கள் அந்நாட்களில் தங்களுடைய ஊழியர்கள் அனைவருக்கும் பல்வேறு பரிசு பொருட்களை கொடுத்து மகிழ்கிறார்கள். எனவே ஆயுத பூஜையை நாம் கொண்டாடுவதன் மூலமாக மனித வாழ்க்கையை மையமாகக் கொண்டிருக்க கூடிய கல்வி அறிவையும் தொழில் வளத்தையும் நம்மால் முழுமையாக உணர்ந்து கொள்ள முடிகிறது.

உழைப்பு கருவிகளான கற்கருவியில் தொடங்கி ஏர் கலப்பை என்று வளர்ந்த மனிதனின் வாழ்க்கை தற்போது மேம்பட்டு ஆகாய விமானம் வரை வளர்ந்துவிட்டது. இதனோடு சேர்ந்து அபரிதமான தொழில் வளர்ச்சிகளும் மேம்பட்டு செயற்கை நுண்ணறிவு என்ற நிலையை எட்டிவிட்டது. எனவே வளர்ச்சி என்பது எவ்வளவு உச்சபட்ச நிலையை அடைந்தாலும் கருவிகளைக் கொண்டாட வேண்டியது மிகவும் அவசியம். கருவிகளின் தேவை என்பது முற்காலத்திலும் இருந்தது, இக்காலத்திலும் இருக்கிறது, எதிர்காலத்திலும் அது இருக்கும்! எனவே மனிதனை விடுதலை பெறச் செய்யும் கருவிகளை போற்றும் கலாச்சாரம் மென்மேலும் தொடரட்டும்......

உங்க ஸ்மார்ட்போனில் இருக்கும் PDF File-களை உடனே டெலிட் பண்ணுங்க! 

ஸ்டீவ் ஜாப்ஸ் கூறிய 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்! 

இயர் பட்ஸ் வாங்கும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

கருப்பைத் தொற்று அறிகுறிகள், காரணங்கள் மற்றும் தீர்வுகள்!

3-2-1 Rule: இந்த விதியைப் பின்பற்றினால் விரைவாக தூக்கம் வரும்! 

SCROLL FOR NEXT