வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வது ஒன்றும் அவ்வளவு எளிதான விஷயமல்ல. நாம் என்னதான் சுத்தம் செய்தாலும், நமக்கே தெரியாமல் தூசிகளும் குப்பைகளும் சேர்ந்து கொண்டே இருக்கும். மேலும் சிலர் வீட்டை வருடத்திற்கு ஒருமுறை பொங்கல் வந்தால் மட்டுமே சுத்தம் செய்வதை வழக்கமாக வைத்திருப்பார்கள். அத்தகைய வீடுகளில் நாள்தோறும் தூசிகள் அங்கும் இங்குமாக பறந்து கொண்டிருக்கும். அப்படி தூசி அதிகமாகப் படிந்திருக்கும் நாம் அதிகம் கண்டுகொள்ளாத பொருள் எதுவென்றால், அது சீலிங் ஃபேன்தான்.
மற்ற பொருட்களைப் போல சீலிங் ஃபேனை அவ்வளவு எளிதில் சுத்தம் செய்ய முடியாது. அப்படியே சுத்தம் செய்தாலும் உடனடியாக அதில் தூசிகள் படிந்துவிடும். இப்படி சீலிங் பேனை சுத்தம் செய்ய சிரமப்படுபவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், அதை ஈசியாக சுத்தம் செய்வதற்கு நான் சொல்லும் சில டிப்ஸ்களை பாலோ செய்யுங்கள்.
முதலில் உங்கள் வீட்டில் வாக்யூம் கிளீனர் இருந்தால் அதைப் பயன்படுத்தி சீலிங் ஃபேன் எளிதாக சுத்தம் செய்யலாம். ஒரு சிறிய குச்சியில் வாக்யூம் கிளீனர் பைப்பை கட்டி, முகத்திலும் கண்ணிலும் தூசி படாதவாறு மறைத்துக்கொண்டு, ஃபேன் இறக்கையின் மீது வைத்தால், அதில் உள்ள தூசிகள் இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும்.
அடுத்ததாக நீங்கள் கை வைத்து துடைக்கும் நபராக இருந்தால், உங்கள் வீட்டில் பயன்படுத்தாத சாக்ஸை ஃபேனை சுத்தம் செய்ய பயன்படுத்தலாம். சாக்ஸில் தண்ணீரைத் தொட்டு ஃபேனை துடைக்கும்போது, பள பளவென மாறிவிடும். சாக்ஸின் மிருதுவான அமைப்பு பேனில் உள்ள தூசிகளை சுத்தமாக துடைத்து எடுத்துவிடும். ஃபேனின் மேல்புறத்தை சுத்தம் செய்ய, ஃபேனில் ரெக்கையின்மேல் சாக்ஸை வைத்து, இரு முனைகளையும் கைகளால் பிடித்து அப்படியே இழுத்தால், மேலே உள்ள தூசிகள் சுத்தமாக வந்துவிடும்.
அப்படி இல்லையெனில், உங்கள் வீட்டில் தலையணை உரை இருந்தால், ஃபேனை சுத்தம் செய்வது மிகச் சுலபம். சீலிங் ஃபேனில் இருக்கும் தூசி உங்கள் முகத்தில் படாமல் துடைக்க விரும்பினால் தலையணை உரையை பயன்படுத்தலாம். வீட்டில் உள்ள பழைய தலையணை உரையை எடுத்துக்கொண்டு, அதை பேன் இறக்கையில் மாட்டி அப்படியே அழுத்தி இழுத்தால், பேன் இறக்கைகளில் உள்ள அழுக்கு துளிகூட வெளியே பறக்காமல் அப்படியே வந்துவிடும்.
சீலிங் பேனை சுத்தம் செய்யும்போது கட்டாயம் முகத்தில் தூசி படாதவாறு ஏதேனும் துணியை கட்டிக் கொள்ளுங்கள். ஏனெனில் அந்த தூசியால் உங்களுக்கு அலர்ஜி பிரச்சனை ஏற்படலாம். மேலே கூறிய வழிமுறைகளைப் பின்பற்றி சீலிங் ஃபேனை எளிதாக நீங்கள் சுத்தம் செய்ய முடியும்.