Boiler 
வீடு / குடும்பம்

பழங்கால கிராமத்து வாட்டர் ஹீட்டர் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

ஆர்.வி.பதி

ற்காலத்தில் சுடுநீரில் குளிப்பதற்கு வீடுகளில் வாட்டர் ஹீட்டர்களைப் பயன்படுத்துகிறோம். வீட்டிலுள்ளவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சிறியதும் பெரியதுமான பல வகையான வாட்டர் ஹீட்டர்களை வாங்கி பயன்படுத்தி வருகிறோம். அக்காலத்தின் வாட்டர் ஹீட்டர் மிகவும் வித்தியாசமானது. அதைப் பயன்படுத்துவதே ஒரு கலை எனலாம். அதைப் பற்றி இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

செம்புத் தகட்டால் செய்யப்பட்ட ஒரு சாதனமே அக்கால வீடுகளில் குளிக்க சுடு தண்ணீர் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டன. இதை பாய்லர் என்று அழைப்பார்கள். இரும்பாலான மூன்று கால்களைக் கொண்ட ஒரு ஸ்டாண்ட். அதன் மேல் மூன்று அடி உயரமும் ஒன்றரை அடி அகலமும் கொண்ட செப்புத் தகட்டால் ஆன வட்ட வடிவ அமைப்பு. அதன் கீழ்ப்பகுதியில் ஒரு பித்தளைக் குழாய். மேல்பகுதியில் தண்ணீர் ஊற்ற திறந்து மூடக்கூடிய ஒரு மூடி. பாய்லரின் நடுப்பகுதியில் அரை அடி அகலமுள்ள ஒரு குழாய். கீழ்ப்பகுதியில் ஒரு வட்டவடிவ இரும்புத் தகடு கைப்பிடியோடு காணப்படும். இதுவே பாய்லரின் அமைப்பு.

மேல்பகுதியில் உள்ள வட்ட வடிவ மூடியைத் திறந்து அதில் தண்ணீரை ஊற்றுவார்கள். பின்னர் ஒரு முறத்தில் விராட்டியை நான்காக உடைத்து வைத்து அதில் மண்ணெண்ணெயை ஊற்றி பற்ற வைத்து அதை அப்படியே மேல்பகுதியில் உள்ள திறந்த குழாய் வழியாக உள்ளே போடுவார்கள். பின்னர் நான்கைந்து சாணி உருண்டையை இரண்டாக உடைத்து அதற்குள் போடுவார்கள். சற்று நேரத்தில் நன்றாக எரியத் தொடங்கும். அரை மணி நேரத்தில் பாய்லருக்குள் ஊற்றப்பட்ட தண்ணீர் கொதிக்கத் தொடங்கும்.

நன்றாகக் கொதித்ததும் மூடி வழியாக ஆவி வெளியேறும். இப்போது பக்கெட்டை வைத்து சுடுதண்ணீரைப் பிடித்து அதில் பச்சைத் தண்ணீரைக் கலந்து குளிக்கத் தொடங்குவார்கள். குளிக்கத் தொடங்கும் முன்னால் இன்னும் இரண்டு சாணி உருண்டைகளை அதற்குள் போட்டு பாய்லருக்குள் பச்சைத் தண்ணீரை உற்றி விட்டுக் குளிக்கத் தொடங்குவார்கள். ஒருவர் குளித்து முடிப்பதற்குள் மீண்டும் தண்ணீர் சூடாகி அடுத்தவர் குளிக்கத் தயாராகி விடும். இதுவே அக்கால வாட்டர் ஹீட்டர். வெயில் காலத்தில் பிரச்னை இல்லை. ஆனால், மழைக்காலத்தில் ஈரப்பதத்தினால் பாய்லர் சரியாக எரியாது. அதனுடன் பெரும் போராட்டமே நடக்கும்.

ஏதோ சாணி உருண்டை என்று சொன்னீர்களே. அது என்ன என்று நீங்கள் கேட்பது புரிகிறது. அக்காலப் பெண்மணிகள் தங்கள் ஓய்வு நேரங்களில் சாணி உருண்டைகள் தயாரிப்பார்கள். இதைத் தயாரிப்பதும் ஒரு பெரும் கலைதான். அக்காலத்தில் வீடுகளில் மாடுகளை வளர்க்கும் வழக்கம் இருந்தது. மாடு வளர்ப்பவர்களிடம் இருந்து சாணியை வாங்கி வந்து, அதை வீட்டின் நடுப்பகுதியில் உள்ள திறந்தவெளியில் கொட்டி அதோடு கரித்தூளைக் கலப்பார்கள். பின்னர் அதில் சிறிது வைக்கோலைச் சேர்த்துக் கலந்து ஒரு புதிய கலவையை உருவாக்குவார்கள். இதை ஒரு கிரிக்கெட் பந்து அளவிற்கு உருட்டிக் வெயிலில் காய வைப்பர்.

இதில் ஒரு விசேஷம் என்னவென்றால் இந்த உருண்டைகள் அனைத்தும் அளந்து செய்தாற்போல ஒரே அளவிலேயே, அதாவது கிரிக்கெட் பந்து அளவில் இருக்கும். இரண்டு மூன்று நாட்கள் வெயிலில் காயும். பின்னர் கெட்டியாகி விடும். இதுவே சாணி உருண்டை. இவற்றை ஒரு கோணியில் கட்டி அடுப்பங்கரையில் உள்ள பரண் மீது போட்டு வைப்பர்.

இது ஒரு மாதத்திற்கு மேல் பயன்படும். சாணியோடு வைக்கோலைக் கலந்து வட்ட வடிவத் தட்டு போலச் செய்து காய வைத்தால் அதுவே விராட்டி. அடுப்பெரிக்கப் பெரிதும் பயன்பட்ட ஒரு பொருள் விராட்டி. விராட்டியை அக்காலத்தில் சிலர் தயார் செய்து விற்பார்கள். அவற்றை விலை கொடுத்து வாங்கி வந்து அடுப்பெரிக்கவும் பாய்லரில் ஸ்டாட்டராகப் பயன்படுத்தவும் உபயோகிப்பர். விராட்டியும் சாணி உருண்டையும் சுற்றுச்சூழலை கெடுக்காத எரிபொருளாக அக்காலத்தில் பயன்பட்டன.

Mouni Roy Beauty Secrets: மௌனி ராய் அழகின் ரகசியம்!

நம்முடைய வாழ்க்கையில் அன்பும் அரவணைப்பும் யாருக்கு தேவை?

சூப்பர் ஹீரோ படத்தில் பாலையாவுடன் ஜோடி சேரும் உலக அழகி!

இன்னுமுமா இந்த டீ, காபி எல்லாம் குடிக்கிறீங்க? கடவுள்தான் காப்பாத்தணும்!

மனமிருந்தால் மார்க்கமுண்டு... சிகரம் தொட்ட அருணிமாவைப் போல்!

SCROLL FOR NEXT