தொழில்நுட்பம் பெருகிவிட்ட இந்த நவீன யுகத்தில் யாரும் யாரோடும் நின்று பொறுமையாக பேசிக்கொள்ள அவகாசம் இல்லை. ஆனாலும், நமக்கு நாமே தினமும் பேசிக்கொள்வது அவசியம். அதிலும் சில கேள்விகளை ஒரு மனிதன் தனக்குத்தானே கேட்டுக் கொள்வது மிக முக்கியம். அவை என்ன என்பதைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.
குழந்தையாக இருக்கும்போது தாய் தன் குழந்தைக்கு சோறு ஊட்டி தாலாட்டு பாடி தூங்க வைப்பாள். அதன் ஒவ்வொரு தேவைகளையும் பார்த்து பார்த்து கவனிப்பாள். வளர வளர அந்தக் குழந்தை தன்னுடைய தேவைகளை தானே நிறைவேற்றிக் கொள்ளும். ஒரு மனிதன் தனது இறுதி காலம் வரை தனக்குத்தானே கேட்டுக்கொள்ள வேண்டிய சில கேள்விகள் இருக்கின்றன.
1. நான் சரியான நேரத்தில் உணவு உண்கிறேனா?
நாம் நன்றாக செயல்பட உடல் உறுதியாக இருப்பது அவசியம். அதற்கு நன்றாக தன்னை ஒருவர் பேணி காத்துக்கொள்ள வேண்டும். இதில் முக்கியமானது சரியான நேரத்தில் உண்ணும் பழக்கம். வேலைப்பளுவின் காரணமாக சாப்பிடும் நேரத்தை தள்ளிப்போட்டு அல்லது தவிர்த்தல் என்பது நம் உடலுக்கு நாமே செய்யக்கூடிய பெரிய தீங்காகும். எனவே, சரியான நேரத்தில் உணவு உண்கிறோமா என்று ஒருவர் தன்னை தானே கேட்டுக் கொண்டு அதன்படி நடக்க வேண்டும்.
2. போதிய அளவு தூங்குகிறேனா?
உணவு ஒரு மனிதனுக்கு எவ்வளவு முக்கியமோ அதுபோல ஓய்வும் அவசியம். அதுவும் போதுமான ஓய்வு இருக்க வேண்டும். பகல் நேர தூக்கத்தை தவிர்த்து விட்டு இரவில் ஏழு மணி நேரமாவது ஒரு மனிதன் உறங்க வேண்டும். உடற் புலன்களுக்கு மட்டுமல்ல, மூளைக்கும் ஓய்வு கொடுத்து நன்றாக தூங்கும்போது அடுத்த நாளுக்குரிய சுறுசுறுப்பும் எனர்ஜியும் ஒரு மனிதனுக்கு கிடைக்கும்.
3. நன்றாக உணர்கிறேனா?
உடலுக்கு உணவு வலுவூட்டுவது போல உள்ளத்திற்கு நல்ல உணர்வுகள் வலு சேர்க்கும். உணர்வுகள்தான் ஒரு மனிதனை ஆளுகின்றன. அது சரியாக இருந்தால் மட்டுமே அவனால் சிறப்பாகவும் நன்றாகவும் செயல்பட முடியும். எனவே, உணர்வுகளில் கவனம் வைக்க வேண்டும். பொறாமை, கோபம், ஆத்திரம், வஞ்சம் போன்ற உணர்வுகள் அடிக்கடி தலை தூக்கினால் அது அவனது வாழ்க்கைப் பாதையையே மாற்றிவிடும். அன்பு, நேர்மை, பெருந்தன்மை, பிறரை நேசிக்கும் பாங்கு போன்ற நல்ல உணர்வுகள் உள்ளத்தில் எப்போதும் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். எதிர்மறை எண்ணங்கள், உணர்வுகள் தலைதூக்கினால் அவற்றைக் களைந்து நல்ல எண்ணங்களை விதைப்பது மிகவும் அவசியம்.
4. அடிக்கடி என்ன நினைக்கிறேன்?
'நீ எதுவாக நினைக்கிறாயோ அதுவாகவே நீ ஆகிறாய்' என்றார் விவேகானந்தர். ஒரு மனிதனின் வாழ்வுக்கும் தாழ்வுக்கும் அவனது எண்ணமே காரணம். தன்னைப் பற்றி அவன் என்ன நினைக்கிறானோ, எப்படி சிந்திக்கிறானோ, எப்படி கற்பனையில் உருவகப்படுத்தி வைக்கிறானோ அதன்படியே அவன் உருமாறுகிறான். பாரதியின் வார்த்தைக்கேற்ப எப்போதும் நல்லவே எண்ணுதல் வேண்டும்.
5. யாரிடம் நான் நன்றாகப் பேச முடியும்?
ஒரு மனிதனின் நலம் விரும்பிகள் பலர் இருக்கலாம், உறவு நட்பு சுற்றம் என்று. ஆனால், 'உனக்கு நீயே நண்பன் நீயே பகைவன்' என்று கீதையில் கிருஷ்ணன் கூறியது போல ஒருவருக்கு தான்தான் மிகப்பெரிய ஆதாரம். கோழையாய் இருக்கும் ஒரு மனிதன் பலசாலியாக மாற பிறரின் வார்த்தைகள் உதவலாம். ஆனால், சம்பந்தப்பட்ட அந்த நபர் தன்னை நம்ப வேண்டும். தைரியத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். கோழைத்தனத்தை உதறி எறிய வேண்டும். தனக்குத்தானே பேசித் தன் குறைகளை சரி செய்து கொள்ளவும் முடியும். எனவே, ஒருவர் தனக்குத்தானே அதிகமாக பேசிக்கொள்ளலாம் தன்னை வளர்த்துக் கொள்வதற்காகவே.
6. நான் என்னிடமும் பிறரிடமும் எப்படி நடந்து கொள்கிறேன்?
'உன்னை நேசிப்பது போல பிறரை நேசி' என்கிறது பைபிள். தன்னை நேசிக்கும் ஒரு மனிதன்தான் பிறரையும் நேசிக்க முடியும். சிறிய தவறு செய்து விட்டால் தன்னை தண்டித்துக் கொள்வதற்கு பதிலாக மன்னித்துக் கொள்ள வேண்டும். மீண்டும் அந்தத் தவறை செய்யாமல் இருக்க வேண்டும். தன்னை நேசிக்கவும் அக்கறை கொள்ளவும் வேண்டும். அதேபோல பிறரையும் மனதார நேசித்து அன்பு செலுத்த வேண்டும். தன்னிடம் அன்பு கொண்ட ஒரு மனிதன் நல்ல மனிதனாக உருமாறுகிறான். பிறரிடம் அன்பாக இருப்பவன் ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்குகிறான்.