Do you know what the colored number plates of vehicles mean? https://ta.quora.com
வீடு / குடும்பம்

வாகனங்களின் வண்ண நம்பர் பிளேட்டுகள் எதைக் குறிக்கின்றன தெரியுமா?

கண்மணி தங்கராஜ்

மோட்டார் வாகனச் சட்டம், 1988ன்படி, நாம் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள், வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் (RTO) பதிவு செய்யப்பட வேண்டியது கட்டாயமாகும். இவ்வாறு பதிவு செய்யப்படாத வாகனத்தை பொதுவழிச் சாலைகளில் ஓட்டுவது சட்டவிரோதமானது. மேலும், இதுபோன்ற தவறுகளுக்கு தண்டனையாக அபராதங்கள் விதிக்கப்படுகின்றன.

அனைத்துப் பதிவு செய்யப்பட்ட வாகனங்களும் அதனுடைய பதிவு எண்ணைக் காண்பிக்கும் எண் தகடுகளைக் கொண்டிருக்க வேண்டும். அந்த வகையில் வெள்ளை, மஞ்சள், பச்சை என பல வண்ணங்களில் நம்பர் பிளேட்கள் பொருத்தப்பட்ட வாகனங்களை சாலையில் பார்க்கலாம். இந்த விதவிதமான நிறங்கள் எதைக் குறிக்கின்றன? அதற்கான காரணங்கள் என்னவாக இருக்கும்?  இந்தியாவில் உள்ள குறிப்பிட்ட சில வகையான நம்பர் பிளேட்டுகள் குறித்த தகவல்களைக் காண்போம்.

1. வெள்ளை எண் தகடு: வெள்ளை நிறத்தில் உள்ள வாகன எண் தகடானது இந்தியாவில் மிகவும் பொதுவான எண் தகடு வகையாகும். அனைத்து தனியார் அல்லது வணிகம் சாராத வாகனங்களும் (இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள்) வெள்ளை எண் தகடுகளைக் கொண்டுள்ளன. கருப்பு எழுத்துகள் உள்ள வெள்ளை உரிமத் தகடு கொண்ட வாகனம் என்றால் அது தனிப்பட்ட பயன்பாட்டிற்கு மட்டுமே. வெள்ளை பதிவு எண் பலகை கொண்ட வாகனத்தில் பொருட்களை ஏற்றிச் செல்வதோ அல்லது பயணிகளை ஏற்றிச் செல்வதோ இயலாது.

2. கருப்பு எண் தகடு: இந்தியாவில், அனைத்து சுயமாக இயக்கப்படும் வாகனங்கள் அல்லது வாடகை வாகனங்கள் மஞ்சள் எழுத்துக்களுடன் கொண்ட கருப்பு நிற எண் பலகையை வைத்திருக்க வேண்டும். இந்த வாகனங்கள் வணிக வாகனங்களாக பதிவு செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், கருப்பு நம்பர் பிளேட் காரை ஓட்டுவதற்கு வணிக ரீதியிலான வாகன ஓட்டுநர் உரிமம் எதுவும் தேவையில்லை. பெரும்பாலான வாடகை வாகனங்கள் மற்றும் சொகுசு ஹோட்டல்களுக்கான போக்குவரத்து வாகனங்களில் இந்த நம்பர் பிளேட்களை நீங்கள் காணலாம்.

3. மஞ்சள் எண் தகடு: அனைத்து ஆட்டோ ரிக்‌ஷாக்கள், டாக்சிகள், லாரிகள் மற்றும் போக்குவரத்து பேருந்துகள் மஞ்சள் நிற எண் தகடுகளை கருப்பு நிற எழுத்துடன் வைத்திருப்பதை நீங்கள் நிச்சயமாக சாலையில் கவனித்திருப்பீர்கள்! அதற்கான காரணம் அனைத்து வணிக வாகனங்களும் மஞ்சள் நிற எண் தகடு வைத்திருக்க வேண்டும். இது வெறும் நிற வேறுபாடு மட்டுமல்ல; பொதுவாகவே வணிக வாகனங்கள் தனியார் வாகனங்களை விட வித்தியாசமான வரி அமைப்பைக் கொண்டுள்ளன. அதோடு, மஞ்சள் நம்பர் பிளேட் வாகன ஓட்டுநர்கள் தங்களுடைய வணிக வாகனத்திற்கான ஓட்டுநர் உரிமத்தையும் வைத்திருக்க வேண்டியது கட்டாயமாகும்.

4. சிவப்பு எண் தகடு: இந்தியாவில் உள்ள அனைத்து புதிதாக வாங்கக்கூடிய வாகனங்கள் தற்காலிக பதிவு எண் பெறுகின்றன. அதன்படி இந்த சிவப்பு உரிமத் தகடு, தற்காலிகப் பதிவு எண்ணை வெள்ளை எழுத்துக்களில் காண்பிக்கும். RTO அஞ்சல் பதிவிலிருந்து வாகனத்திற்கான நிரந்தரப் பதிவு எண்ணைப் பெறும் வரை மட்டுமே நீங்கள் இந்த சிவப்பு எண் பலகையைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த தற்காலிக நம்பர் பிளேட் ஒரு மாத காலம் வரை மட்டுமே செல்லுபடியாகும். இருப்பினும், இந்தியாவில் சில மாநிலங்கள் சிவப்பு உரிமத் தகடு வாகனங்களை பொதுச் சாலைகளில் இயக்க அனுமதிப்பதில்லை.

5. பச்சை நிற எண் தகடு: பச்சை நிற எண் தகடுகள் மின்சார வாகனங்களுக்காகவே (EV) பிரத்தியேகமாக பயன்படுத்தப்படுகின்றன. இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட அனைத்து மின்சார வாகனங்களும் பச்சை நிற உரிமத் தகடு வைத்திருக்க வேண்டும். இருப்பினும், இது தனியார் அல்லது வணிக வாகனம் என்பதைப் பொறுத்து எழுத்து நிறத்தில் வேறுபாடு காணலாம். அதாவது அனைத்து தனியார் எலெக்ட்ரிக் வாகனங்களும் வெள்ளை எழுத்துகளுடன் பச்சை நிற நம்பர் பிளேட்டையும், வணிக வாகனங்கள் மஞ்சள் நிற எழுத்துக்களுடன் பச்சை நிற நம்பர் பிளேட்டையும் பெறுகின்றன.

6. தேசிய சின்னத்துடன் கூடிய சிவப்பு எண் தகடு: மாநில ஆளுநர்கள் பயன்படுத்தும் வாகனங்கள் சிவப்பு நிற எண் தகடுகளைக் கொண்டுள்ளன. தங்க நிறத்தில் இந்திய தேசிய சின்னத்துடன் கூடிய சிவப்பு எண் தகடு என்றால் அந்த வாகனம் இந்திய ஜனாதிபதிக்கு சொந்தமானது என்று அர்த்தம்.

வெளியே செல்லும்போது கருப்புப் பூனை குறுக்கே போய்விட்டதா? போச்சு! 

இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் அந்த நபர் யார்?

நவகிரகங்கள் நல்கும் நன்மைகளும்; வித்தியாசமான கோல நவகிரகங்களும்!

12 ரோபோக்களைப் பேசி மயக்கி கடத்திய ரோபோ… திட்டம் போட்டு செய்த சம்பவம்… கிரிமினலாக மாறிய ஏஐ!

பெற்றோர்களை தெருவில் பிச்சையெடுக்க விடும் பிள்ளைகள்! கொடுமையின் உச்சம்!

SCROLL FOR NEXT