பிறரிடம் சில விஷயங்களை பகிரும்போது நாம் நிம்மதியாக இருந்தாலும், நாம் எதுபோன்ற விஷயங்களை யார் யாரிடம் பகிர வேண்டும், பகிரக்கூடாது என்பதில் சில வரைமுறைகள் உள்ளது. குறிப்பாக உறவினர்களிடம் சொல்லக்கூடாத விஷயங்கள் என்று சிலது உள்ளது. அவை என்னவென்று இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
1. நிதி நிலையைப் பகிராதீர்கள்: ஒருவரின் நிதிநிலை என்பது மிகவும் ரகசியமாக இருக்க வேண்டியது. உங்களுடைய நிதிநிலை பற்றி ஆலோசனை பெறலாமே தவிர, நீங்கள் தற்போது எந்த நிலையில் இருக்கிறீர்கள் என்பது பற்றி ஒருபோதும் உங்கள் உறவினர்களிடம் பகிராதீர்கள். ஒருவேளை நிதி நிலையில் நீங்கள் உயர்வாகவோ அல்லது குறைவாகவோ இருந்தால் உங்களது உறவினர்கள் உங்கள் மீது பொறாமைப்படவும் அல்லது ஏளனமாக பேசவும் வாய்ப்பு உள்ளது.
2. பிரச்சனைகளைப் பகிராதீர்கள்: என்னதான் வாழ்வில் எல்லா மனிதனுக்கும் பிரச்சனை இருக்கும் என்றாலும், அதை அனைவரிடமும் சொல்லி தெரியப்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. குறிப்பாக உங்கள் உறவினர்களிடம் உங்கள் பிரச்சனை சார்ந்து நீங்கள் அடிக்கடி சொல்லிக் கொண்டிருக்கும்போது, உங்கள் மீது தேவையில்லாத வெறுப்புகள் அவர்களுக்கு ஏற்படலாம். எனவே உங்களது பிரச்சனைகளை முடிந்தவரை நீங்களே சரி செய்து கொள்ள முயலுங்கள்.
3. உடல்நிலை பற்றி பகிர வேண்டாம்: உங்களது உறவினர்களிடம் ஒருபோதும் உங்களது உடல் நலப் பிரச்சனைகள் சார்ந்து பகிர வேண்டாம். அப்படி பகிர்வது உங்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. உங்களது உடல்நல பாதிப்பை உறவினர்களிடம் பகிர்ந்தும் அவர்கள் உதவிப்பு செய்யாத போது, நீங்கள் மேலும் வருத்தமடைவீர்கள்.
4. குடும்ப சண்டை பற்றி பகிர வேண்டாம்: உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு அல்லது சண்டை போட்டுக் கொள்வது சார்ந்த விஷயங்கள் எதையும் உறவினர்கள் மட்டுமின்றி யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். இது உங்கள் மீது ஒரு எதிர்மறையான எண்ணத்தை கொண்டு வந்து, உறவுகளுக்கு இடையே விரிசலை ஏற்படுத்தும்.
5. உங்கள் இலக்குகளை பகிராதீர்கள்: நீங்கள் உங்களுடைய இலக்குகளை அடைவதற்கு முன்பாக சொந்த பந்தங்களிடம் தெரியப்படுத்தாதீர்கள். அப்படி நீங்கள் தெரியப்படுத்தும்போது மற்றவர்களுக்கு உங்கள் மீது பொறாமை ஏற்பட்டு அவற்றை கெடுக்கும் வாய்ப்புள்ளது. எனவே இலக்குகளை ரகசியமாக முயற்சித்து அதை அடையுங்கள்.