Here are some tips to make housework effortless and beautiful https://tamil.boldsky.com
வீடு / குடும்பம்

வீட்டு வேலைகளை அலுப்பின்றியும் அழகாகவும் செய்ய சில ஆலோசனைகள்!

இந்திராணி தங்கவேல்

வீட்டில் வேலை செய்யும்போது அந்தப் பணிகளை பாதுகாப்புடன் செய்வது முக்கியம். அதற்கு சில விதிகளை பின்பற்ற வேண்டும். அது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

எப்பொழுதும் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். இந்த பொருள் இந்த இடத்தில்தான் இருக்க வேண்டும் என பொருத்தமாக எதையும் செய்யுங்கள். குறிப்பாக, பாத்ரூமில் இருக்க வேண்டிய பக்கெட், மக்கு போன்றவை அங்குதான் இருக்க வேண்டும். வெளியில் வைக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தால் வீடு எப்பொழுதும் பளிச்சென்று இருக்கும்.

ஒவ்வொரு பணிக்கும் சரியான உபகரணத்தைப் பயன்படுத்துங்கள். ஒவ்வொரு சமையல் செய்யும்போதும் அதற்கான கரண்டி வகைகளைப் பயன்படுத்துங்கள். இதனால் நேரம் மிச்சமாகும். அதேபோல், பரிமாறும்பொழுதும் அதற்கான கரண்டியைப் பயன்படுத்துவது அவசியம். பெரிய பாத்திரத்தில் சிறிய கரண்டி போடுவது, சிறிய பாத்திரத்தில் பெரிய கரண்டியை போடுவது போன்றவை பரிமாறும்பொழுது கால விரயத்தை ஏற்படுத்தும். உணவு பொருள் எடை தாங்காமல் கீழே கொட்டுவதற்கும் வாய்ப்பு உண்டு.

அதேபோல், வீடு பெருக்கும் பொருள்களை அதனதன் இடத்தில் பெருக்கி விட்டு வைத்து விடுங்கள். அப்பொழுதுதான் அடுத்த நாள் எடுப்பதற்கு வசதியாக இருக்கும். தேடிக்கொண்டு அலைய வேண்டிய அவசியம் இருக்காது.

ஒவ்வொரு வேலைக்கு இடையிலும் குறிப்பிட்ட நேரம் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். அப்பொழுதுதான் அவற்றை முழுமையாக செய்ய முடியும். வீட்டு வேலைதானே என்று அலட்சியம் செய்ய வேண்டியதில்லை. நிதானமாக வேலை செய்தால் சுத்தமாக செய்யலாம். செய்த திருப்தியும் கிடைக்கும். அடிக்கடி செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.

உடல் நலம் சரி இல்லாத சூழலிலோ, மயக்கம் ஏற்படுத்தும் விதமான மருந்துகளை சாப்பிட்டு விட்டோ, தூக்க கலக்கத்திலோ கடுமையான மற்றும் ஆபத்தான வேலைகளைச் செய்யக்கூடாது. நன்கு ஓய்வு எடுத்துக்கொண்டு வேலைகளைச் செய்வது, எளிதாக முடிக்கச் செய்யும்.

வேலையில் மன அழுத்தத்தைத் தவிர்க்கவும். கவனத்துடன் செய்ய வேண்டிய வேலையை வேறு ஏதோ கவலையுடன் செய்யும்போது அது ஆபத்தை ஏற்படுத்தும்.

வேலை முடிந்த பின் கை கழுவுவது, உடைகளை சுத்தம் செய்துகொள்வது போன்றவற்றை சலிப்பு இல்லாமல் செய்யவும். அப்பொழுதுதான் சுறுசுறுப்பாகவும், சுத்தமாகவும் இருக்கிறோம் என்ற தன்னம்பிக்கை பிறக்கும். வேலை செய்வதிலும் அலுப்பு வராது. வீட்டிற்கு திடீர் விருந்தினர் வந்தாலும் அச்சமின்றி வரவேற்கலாம்.

கொடியில் காய்ந்த துணிகளை எடுத்து வந்து அப்படியே படுக்கையில் போட்டுவிட்டு அப்புறம் மடித்துக் கொள்ளலாம் என்று விட்டு வைக்காதீர்கள். அது வீட்டின் அழகையே கெடுத்து விடும். எடுத்தவுடன் மடித்து வைத்து விடுங்கள். அப்பொழுதுதான் துணியும் கசங்காது. படுக்கையும் சுத்தமாக இருக்கும். வேலைகளை முடித்துவிட்டு சட்டென்று படுத்தும் கொள்ளலாம்.

அதேபோல், பாத்திரக் கூடையில் காய்ந்த பாத்திரங்கள் இருந்தால் அதை துடைத்து வைக்க வேண்டிய இடத்தில் வைத்துவிட்டு, பிறகு ஈரமான பாத்திரங்களை கழுவிப் போடுங்கள். அப்பொழுதுதான் மழை, குளிர் காலத்தில் பாத்திரங்களும் சீக்கிரமாகக் காயும். அதை வைத்து இருக்கும் இடமும் ஈரம் இல்லாமல் இருக்கும். பூச்சி வகைகளும் அண்டாது.

பாத்திரம் கழுவும் போது கிளவுஸ், பாத்ரூம் கழுவும்போது மாஸ்க்கு என்று போட்டுக் கொண்டு செய்தால் பாதுகாப்பாக இருக்கும். கையிடுக்குகளில் புண்கள் வராது. கையில் கடினத் தன்மை ஏற்படாது. மாஸ்க் போடுவதால் பினாயில், டெட்டால், ஆசிட் போன்றவற்றின் வாசம் மூக்கிற்குள் நுழைந்து தும்மல் போன்றவற்றை ஏற்படுத்தாது பாதுகாப்பாக இருக்கும்.

இப்படி ஒவ்வொன்றிலும் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வேலை செய்தால், வேலை செய்வதும் எளிது, முடிப்பதும் எளிது. சோர்வின்றி சுறுசுறுப்பாகவும் செயல்படலாம். நன்கு பசி எடுக்கும். படுத்தால் நன்றாகத் தூக்கம் வரும். நோய் நொடி இன்றி ஆரோக்கியமாக வாழலாம்.

5 நிமிட பாடலுக்கு கோடிகளில் செலவு தேவையா? இந்திய சினிமாவின் மாயாஜாலம்! 

உடல் சூட்டையும் வலியையும் தணிக்கும் 6 வகை எண்ணெய்கள்!

திருமண வாழ்வில் முதல் ஆறு மாதங்கள் ஏன் முக்கியமானது தெரியுமா?

ஆந்திரா ஸ்பெஷல் தக்காளி பருப்பு கடையல்! 

அருவியின் மேல் கட்டப்பட்ட அழகு கட்டிடம்! ஃபாலிங்வாட்டர் வீடு!

SCROLL FOR NEXT