Betel Leaf 
வீடு / குடும்பம்

வெற்றிலைக்கு வெற்றிலை என்று பெயர் வந்தது எப்படி? வெற்றிலைப் பயன்பாடு குறைந்து போனது ஏன்?

தேனி மு.சுப்பிரமணி

மலேசியாவில் தோன்றிய வெற்றிலை (Betel Leaf) ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். இந்தியா, இந்தோனேசியா நாடுகளில் வளர்க்கப்படுகிறது. இந்த வெற்றிலை வயிற்றுக் கோளாறு நீக்கவும், கோழை இளகவும், ஜீரண சக்தி அதிகரிக்கவும் உதவுகிறது. தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டம், கும்பக்கோணத்திலும், தேனி மாவட்டத்தில் சின்னமனூர், கூடலூர் பகுதிகளிலும், நாமக்கல் மாவட்டத்தில் பாண்டமங்கலம், வேலுர் மற்றும் பொத்தனுர் பகுதியிலும், கருர் மாவட்டத்தில் புகழுர் பகுதியிலும், திருச்சி மாவட்டத்தில் தொட்டியம் பகுதியிலும், மதுரை மாவட்டத்தில் சோழவந்தானிலும், கடலூர் மாவட்டத்தில் மானியம் ஆடூரிலும் வெற்றிலை அதிக அளவில் பயிரிடப்படுகிறது.

நெல் அறுவடை முடிந்த வயலைப் பக்குவப்படுத்தி, புரட்டாசி மாதத்தில் பட்டம் தயாரித்து, அகத்தி விதைகளைப் பயிரிடுவர். கார்த்திகை மாதத்தில் அகத்திச் செடிகள் சுமார் இரண்டு அல்லது மூன்று அடிகள் உயரத்தில் வளர்ந்திருக்கும் நிலையில், வெற்றிலைப் பயிருக்கு விதை என்று எதுவும் இல்லை என்பதால், காம்புகளை வெட்டி பதியன் போட்டுத்தான் பயிர் செய்வார்கள். சுமார் மூன்று கணுக்கள் உள்ள கொடிகளாக வெற்றிலைக் கொடிகளை வெட்டி வைத்துக் கொண்டு ஒரு கணு மண்ணில் புதையும் வகையில் நடுவர். 40 நாட்களுக்குப் பின்னர் வெற்றிலைக் கொடியை அருகிலுள்ள அகத்திச் செடியுடன் கோரையால் பிணைத்துக் கட்டுவர். வெற்றிலைக் கொடிக்கு அதிக வெயில் கூடாது. நிழல் பாங்கான பகுதி தான் அவசியம். மேலும் இலையுதிர் காலத்திலும் இலை உதிராதது அகத்தி. அதனால்தான் வெற்றிலை சாகுபடிக்கு நம் முன்னோர்கள் அகத்தியைத் தேர்வு செய்திருக்கின்றார்கள். வெற்றிலை பயிராகும் நிலப்பகுதியை வெற்றிலைக் கொடிக்கால் என்பார்கள். மிதமான தட்பவெப்பம், மண் வளம், தண்ணீர் வசதி உள்ள பகுதிகளில் வெற்றிலை பயிராகும்.

தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம் கும்கோணத்திலும் அதன் சுற்று வட்டாரத்திலுள்ள அய்யம்பேட்டை, ராஜகிரி, பண்டாரவாடை, சுவாமிமலை, ஆவூர், திருவையாறு ஆகிய ஊர்களிலும் அதிகமாக பயிராகிறது. கருகருவென கரும்பச்சை நிறத்தில் இருக்கும் வெற்றிலைகள் ஆண் வெற்றிலைகள் என்றும், இளம்பச்சை வெற்றிலைகள் பெண் வெற்றிலைகள் என்றும் வகைப்படுத்தப்படுகின்றன. வெற்றிலையில், பச்சை வெற்றிலை, வெள்ளை வெற்றிலை, கற்பூரவள்ளி என சில வகை வெற்றிலைகள், நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர், பொத்தனூர், பாண்டமங்கலம் பகுதிகளில் பயிரிடப்படுகின்றன. இவற்றுள் கற்பூரவள்ளி வெற்றிலை வடமாநிலங்களுக்கு அதிகளவில் ஏற்பமதியாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்து சமயத்தில் வெற்றிலை மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. மேலும், இந்த இலைகளை எந்த வழிபாட்டிலும் பயன்படுத்துவதற்கான நடைமுறை நீண்ட காலமாக இருந்து வருகிறது. குறிப்பாக, லட்சுமி பூசையின் போது வெற்றிலையின் பயன்பாடு இன்றியமையாததாகக் கருதப்படுகிறது. இது மங்களம் மற்றும் லாபத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது. இந்தக் காரணத்திற்காக, அது பூஜையில் சேர்க்கப்படவில்லை என்றால், பூஜை முழுமையற்றதாக கருதப்படுகிறது. வெற்றிலையின் முக்கியத்துவத்தை மேலும் அதிகரிக்க இது போன்ற பல புராணக் கதைகள் உள்ளன.

இந்து சமயத்தில், வெற்றிலை சில சமயங்களில் மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவனைக் குறிக்கும் என்று கருதப்படுகிறது. பூஜையின் போது வெற்றிலையை வழங்குவது இந்த தெய்வீக சக்திகளுக்கு மரியாதையை வெளிப்படுத்தும் ஒரு எளிய வழியாகும். மேலும் இது வழிபாட்டாளரால் பிரபஞ்ச ஒழுங்கை ஏற்றுக் கொள்வதற்கான அடையாளமாகக் கருதப்படுகிறது. பூஜையின் போது, வெற்றிலை பாக்கு மற்றும் அட்சதையினை வெற்றிலையில் வைத்துப் பிரசாதமாக வழங்குவார்கள். பல இடங்களில், கற்பூரத்தை வெற்றிலையில் வைத்துப் பூசையின் போது எரிக்கிறார்கள், இது வீட்டிற்கு நேர்மறை ஆற்றலைக் கொண்டு வரும் என்கிற தொன்ம நம்பிக்கையாகவும் இருக்கிறது.

வெற்றிலைக்கு மருத்துவ குணங்கள் நிறைய உண்டு. வெற்றிலையில், அயோடின், பொட்டாசியம், வைட்டமின் ஏ, வைட்டமின் பி1, வைட்டமின் பி2 மற்றும் நிகோடினிக் அமிலம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் அதிகமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த வெற்றிலையை ஒவ்வொரு நாளும் எடுத்து கொள்வது உடலுக்கு பல்வோறு உடல்நலப் பலன்களை தருகின்றது. அவற்றுள் சில;

  • வெற்றிலை சாப்பிடுவதால் வெளியில் உள்ள புண்களும் வயிற்றுப் புண்களும் ஆறும்.

  • வெற்றிலையைச் சாறாக அரைத்து வலி இருக்கும் மூட்டுப் பகுதியில் தினமும் தடவி வந்தால் ஒரு சில நாட்களிலேயே கவனிக்கத்தக்க மாற்றம் நிகழும்.

  • வெற்றிலையில் இயற்கையாக உள்ள வேதிப்பொருட்கள், பெருங்குடல் காற்று நீக்கியாகச் செயல்படுகிறது. தேவையற்ற ஏப்பம் போன்றவற்றைச் சரி செய்கிறது.

  • வெற்றிலையை நாள்தோறும் உண்டு வந்தால் உடல் எடை சீராக வாய்ப்புகள் அதிகம். மேலும் செரிமானத்தைச் சீர் செய்வதால் தேவையற்ற உணவுகள் வயிற்றில் தங்குவதைத் தவிர்க்கலாம்.

  • நாள்தோறும் மூன்று முறை வெற்றிலையை அரைத்து, அதன் சாற்றை விழுங்கும் பொழுது, தொண்டையில் உள்ள புண்களுக்கு விரைவாக நிவாரணம் கிடைக்கும்.

  • நாள்தோறும் இரண்டு அல்லது மூன்று வெற்றிலையைச் சாப்பிட்டு வந்தால், ஆண்களின் விறைப்புத்தன்மை பிரச்சனை விரைவில் குணமடையும்.

  • வெற்றிலையில் சிறிது கடுகு அல்லது நல்லெண்ணெய் தடவிச் சூடு செய்து அதை நெஞ்சில் வைத்தால் சளி இருமல் போன்றவை குறையும்.

  • சிறு வெற்றிலைகளைத் தண்ணீரில் போட்டு அதனுடன் சீரகம், லவங்கப் பட்டை ஆகியவை சேர்த்துச் சூடு செய்து, நாள்தோறும் ஒன்று முதல் இரண்டு வேளை குடித்து வந்தால் சுவாச கோளாறுகளிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

வெற்றிலையினால் கிடைக்கும் மருத்துவப் பயன்பாடுகளை ஒவ்வொருவரும் அடைய வேண்டும் என்பதற்காகத்தான் தாம்பூலம் எனும் முறை தமிழர்களிடையே வழக்கத்திற்கு வந்திருக்கிறது. விருந்தினர்கள் உணவருந்திய பின்னர் தாம்பூலம் தருவதும், இறை வழிபாட்டில் தாம்பூலம் இன்றியமையாத இடத்தைப் பெற்றிருக்கிறது. வெற்றிலை மற்றும் பாக்கு (கமுகு, Areca nut) சேர்ந்திருப்பதைக் குறிக்கிறது. தாம்பூலம் எனும் சொல் டிம்பெல் (Timbel) எனும் மலாய் மொழிச் சொல்லடியாகப் பிறந்தது என்கின்றனர். தாம்பூலம் தரித்தல், தாம்பூலம் போடுதல், நிச்சயத் தாம்பூலம் ஆகியவை இச்சொல் வழியாகப் பிறந்தக் கூட்டுச் சொற்களாகும்.

இந்து சமயத்தில் பெரும்பாலான சடங்குகளில் தாம்பூலம் இடம் பெறுகிறது. திருமணம் போன்ற மகிழ்ச்சியான நிகழ்வுகளுக்குத் தாம்பூலம் அளித்து அழைப்பதும், நிகழ்வுக்கு வந்தவர்களுக்கு தாம்பூலத்தை அளிப்பதும் வழக்கமாக இருக்கிறது. தாம்பூலம் மற்றும் தேங்காய் போன்றவற்றை வைத்துத் தரும் பையை தாம்பூலப் பை என்றும், தாம்பூலம் வைத்துத் தரும் குறிப்பிட்ட வடிவத் தட்டு தாம்பூலத் தட்டு (தாம்பாளத் தட்டு) என்று அழைப்பதை இங்கு நினைவில் கொள்ளலாம்.

தமிழரது மரபு வழிப்பட்ட வாழ்க்கை நெறியில் வெற்றிலைக்கும், வெற்றிலைத் தட்டத்துக்கும் தனியான ஓரிடம் உண்டு. வெற்றிலை சரி, அதென்ன வெற்றிலைத் தட்டம்?

வெற்றிலைத் தட்டம் அல்லது வெற்றிலைத் தட்டு என்பது பித்தளை உலோகத்தினாலான பாதமும், ஒரு சான் வரை உயரும் தண்டும் மேற்புறம் அகன்று விரிந்த வளைவான மேற்புறமும் கொண்ட பித்தளைப் பாத்திரம் ஆகும். இந்தியா, இலங்கை உட்பட தென்கிழக்காசிய நாடுகளில் வெற்றிலையும் வெற்றிலைத் தட்டமும் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன. தமிழர் விருந்தோம்பலிலும், வாழ்வோட்டச் சடங்குகளிலும் இவை சிறப்பான ஒர் இடத்தைப் பெறுகின்றன. தென் இந்தியாவில் வெற்றிலைக் காளாஞ்சி எனவும், இலங்கையின் வடபுறத்தில் கால் தட்டம் என்றும் வெற்றிலைத் தட்டம் அழைக்கப்படுகிறது.

திருமணக் கொண்டாட்டங்களின் போதும் மற்றும் சுக, துக்க நிகழ்வுகளின் போதும் வெற்றிலை மற்றும் வெற்றிலைத் தட்டத்தின் பயன்பாடு அதிக அளவில் இருந்திருக்கிறது. மங்கைப் பருவம் எய்திய கன்னிப் பெண்ணின் பூப்பு நீராட்டு விழாவின் போதும், மணமகனுடய, மணமகளுடய பால் அறுகு வைத்து குளிப்பாட்டும் சடங்குகளின் போதும், பால் அறுகு என்பவற்றை ஏந்தியவாறு பித்தளைத் தட்டம் முக்கியமான பார்வைக்குரிய பொருளாக மண்டபத்தில் இடம் பெற்றிருந்திருக்கிறது. வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு ஆகியன வைக்கப்படும் தட்டங்கள் பெரும்பான்மையான வீடுகளில் இருந்தன. வீட்டின் வசதிக்கேற்ப அழகான சித்திர வேலைப்பாடுகளைக் கொண்ட தட்டங்கள் பயன்பாட்டிலிருந்தன.

தற்போது, வெற்றிலை போடும் வழக்கம் குறைந்து போனதால், தட்டங்களைச் சுத்தம் செய்ய ஏற்படும் கடினம், இலகுவான வேறு உலோகங்களின் வருகையால் பித்தளையிலான வெற்றிலைத் தட்டத்தின் பயன்பாடு வெகுவாகக் குறைந்து போய்விட்டது.

இதே போன்று தமிழகம் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வழக்கமாக தாம்பூலம் தரிக்கும் வழக்கம் கொண்டவர்கள், தங்களுடன் வெற்றிலைப் பெட்டி ஒன்றை வைத்திருப்பார்கள். இதனை செல்லப் பெட்டி அல்லது வெற்றிலைச் செல்லம் (Betel container) என்றும் அழைப்பார்கள். இந்தச் செல்லப் பெட்டியானது தகரத்தாலோ, பித்தளையாலோ, வெள்ளியாலோ, பனையோலையாலோ செய்யப்பட்டதாக, அவரவர் வசதி வாய்ப்பைப் பொறுத்து இருக்கும். இந்தச் செல்லப் பெட்டியில் பாக்குகளையும், சுண்ணாம்புக் கூட்டையும் வைக்கத் தனியே ஒரு சிறிய அறை இருக்கும். அந்த அறையை மூடவும், திறக்கவும் ஒரு கதவும் இருக்கும். வெற்றிலைப் பிரியர்கள் எங்கு சென்றாலும் முதலில் இந்தச் செல்லப் பெட்டி நிறைய வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு முதலியவற்றை எடுத்து வைத்துக் கொண்டு செல்வர்.

வெற்றிலைப் பயன்படுத்தும் வழக்கம் முற்றிலுமாகக் குறைந்து போய்விட்டது என்பதால், வெற்றிலைச் செல்லம் என்றும், செல்லப் பெட்டி என்றும் அழைக்கப்பட்ட வெற்றிலைப் பெட்டி இன்று பயன்பாட்டில் இல்லாமல் போய்விட்டது. தற்போதும் பலர் தங்களுடன் ஒரு பெட்டியை எடுத்துச் செல்கிறார்கள். அந்தப் பெட்டி முழுக்க மூன்று வேளைகளுக்குமான மருந்து மாத்திரைகளால் நிறைந்திருக்கின்றன.

வெற்றிலையைப் பற்றி இவ்வளவு தெரிந்து கொண்ட நமக்கு, வெற்றிலைக்கு வெற்றிலை என்று எப்படி பெயர் வந்தது தெரியுமா? கீழ்க்காணும் ஒரு நிகழ்வைப் படித்தால், அதற்கான விடை கிடைத்துவிடும்.

ஒரு முறை ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளை தரிசிக்க ஒரு மாணவன் வந்திருந்தான். அவனிடம் பெரியவர் "என்ன படிக்கிறாய்?" என்றார். அவன் தாவரவியல் படிப்பதாகக் கூறினான்.

சுவாமிகள் தன் முன் வைத்திருந்த பழம் பாக்கு வெற்றிலைத் தட்டில் இருந்த வெற்றிலையைக் காட்டி "அதன் பெயர் என்ன?" என்று வினவினார். மாணவனும் "வெற்றிலை" என்றான்.

"அதற்கு ஏன் வெற்றிலை என்று பெயர் வந்தது?" என்று சுவாமிகள் கேட்க, மாணவன் சொல்லத் தெரியாமல் திகைத்தான்.

சுவாமிகள் கூறினார் "எல்லாக் கொடிகளும் பூ விடும், காய் காய்க்கும். ஆனால் வெற்றிலைக் கொடி பூக்ககாது, காய்க்காது. உண்ணக்கூடிய வெறும் இலை மட்டும் தான் விடும். அதனால் அது வெற்று இலை ஆயிற்று" என்றார்.

மைக்ரோ கீரைகள் பற்றி தெரியுமா உங்களுக்கு? சாகுபடி முறை இதோ!

Buddha Quotes: புத்தரின் 15 வாழ்வியல் கருத்துக்கள்!

இரவில் தாமதமாக சாப்பிடுபவரா நீங்க? அச்சச்சோ, அது ரொம்ப தப்பாச்சே!

காலம் காலமாக நின்று பேசும் மாமல்லபுரமும் மறக்கப்பட்ட மாமல்லனும்!

அந்தப் படத்தில் ரஜினியுடன் நடித்திருக்க கூடாது! – குஷ்பு வருத்தம்!

SCROLL FOR NEXT