Water bottle  
வீடு / குடும்பம்

நாம் பயன்படுத்தும் தண்ணீர் பாட்டில்களில் 40,000-க்கும் அதிகமான பாக்டீரியாக்கள் உள்ளனவாம்! சுத்தம் செய்வது எப்படி?

மணிமேகலை பெரியசாமி

பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகம் செல்லும் அனைவரிடமும் கட்டாயம் இருக்கும் ஒரு பொருள்தான் இந்த தண்ணீர் பாட்டில். பிளாஸ்டிக், ஸ்டீல், கண்ணாடி போன்ற பலவகைகளில் விதவிதமான தண்ணீர் பாட்டில்கள் கடைகளில் கிடைக்கின்றன. அதோடு, ஆண், பெண் என ஒவ்வொருவருக்கும் பிரத்யேகமாக தண்ணீர் பாட்டில்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

நாம் பயன்படுத்தும் இந்த தண்ணீர் பாட்டில்களை, பெரும்பாலும், தண்ணீர் நிரப்பும்போது மட்டும், மேலோட்டமாக சுத்தம் செய்யும் பழக்கம் இங்கு பல பேருக்கு உண்டு. தினமும், நாம் பயன்படுத்தும் தண்ணீர் பாட்டில்களில் 40,000-க்கும் அதிகமான பாக்டீரியாக்கள் இருப்பதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன. இந்நிலையில், தண்ணீர் பாட்டில்களை முறையாக சுத்தம் செய்வது எவ்வாறு என்பது பற்றி தெரிந்து கொள்வோமா?

தண்ணீர் பாட்டிலில் உள்ள தண்ணீரை முழுவதும் காலியாக்க வேண்டும் அல்லது மீதமுள்ள தண்ணீரை அப்புறப்படுத்த வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம், பாட்டில்களில் கிருமிகளின் வளர்ச்சியைத் தடுக்க முடியும்.

சோடா உப்பு:

நாம் பயன்படுத்தும் தண்ணீர் பாட்டிலில், வெந்நீர் நிரப்பி, சிறிதளவு சோடா உப்பு சேர்த்து கலந்து, இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். பின், மறுநாள் காலையில், இந்தக் கலவையை முழுவதுமாக அகற்றிவிட்டு, மறுபடி, வெந்நீர் கொண்டு நன்கு அலசி சுத்தம் செய்யலாம். ஈரப்பதம் நீங்கும் வரை காற்றில் உலர வைத்து பின்னர் பயன்படுத்தலாம்.

பாட்டில்களை சுத்தம் செய்வதற்கென்றே பாட்டில் பிரஷ்கள் கடைகளில் கிடக்கின்றன. இவற்றைக் கொண்டு, தண்ணீர் பாட்டில்களின் இடுக்குகளில் இருக்கும் கறை அல்லது மாசுக்களை அகற்றலாம்.

சோப்பு திரவம் அல்லது பொடி:

தண்ணீர் பாட்டிலின் ஒவ்வொரு பகுதியையும் சோப்பு திரவம் அல்லது பொடி என ஏதாவது ஒன்றை வைத்து, பிரஷை பயன்படுத்தி நன்கு தேய்த்து சுத்தம் செய்ய வேண்டும். பின், பாட்டிலில் சோப்பு வாசனை நீங்கும் வரை, வெந்நீர் கொண்டு சுத்தம் செய்யலாம். பிறகு, பாட்டிலில் உள்ள ஈரப்பதம் நீங்கும் வரை காற்றில் நன்கு உலர வைக்க வேண்டும். அதுவே, கண்ணாடி பாட்டிலாக இருந்தால், சோப்பு மற்றும் தண்ணீர் கலந்து குலுக்கி, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவலாம். கண்ணாடி பாட்டிலை வெறும் கைகளைப் பயன்படுத்தி சுத்தம் செய்ய வேண்டும். பிரஷ் பயன்படுத்த வேண்டாம்.

வினிகர்:

தண்ணீர் பாட்டிலில் வெந்நீர் மற்றும் சிறிதளவு வினிகர் சேர்த்து, சிறிது நேரம் ஊறவைத்து, நன்கு குலுக்கி கழுவ வேண்டும். பின், காற்றில் ஈரப்பதம் நீங்கும் வரை பாட்டிலை நன்கு உலர வைக்க வேண்டும்.

எலுமிச்சை:

பாட்டிலில் பாதியளவு தண்ணீர் நிரப்பி, அதில் ஐஸ்கட்டி எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து நன்கு குலுக்கவும். எலுமிச்சைத் தோலில் சிறிதளவு உப்பு சேர்த்து, பாட்டிலின் வாய்ப்பகுதி மற்றும் மூடியை சுத்தம் செய்ய வேண்டும். பின், வெந்நீரில் கழுவி நன்கு உலர வைக்க வேண்டும், இவ்வாறு செய்தால், வாசனை நீங்கி தண்ணீர் பாட்டில் முழுவதும் சுத்தமாகிவிடும். அதோடு, அதில் உள்ள பாக்டீரியங்களும் இறந்துவிடும்.

நாம் பயன்படுத்தும் தண்ணீர் பாட்டில்களை இரண்டு நாட்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்து பயன்படுத்த வேண்டும் என்கின்றனர். அவ்வாறு முடியவில்லை என்றால், வாரத்திற்கு ஒரு முறையாவது சுத்தம் செய்வது ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கும். மேலும், 5 முதல் 6 மாதங்களுக்கு ஒருமுறை என தண்ணீர் பாட்டில்களை மாற்றுவது அவசியம்.

Direct-to-Cell செயற்கைக்கோள் இணைப்பு: புதிய யுகத்தின் தொடக்கம்! 

உங்கள் வீட்டில் சிறிய குழந்தைகள் இருக்கிறதா? அப்படியென்றால் இதுபோன்ற செடிகளை வளர்க்காதீர்கள்!

திருக்கண்ணபுரம் முனையதரையன் பொங்கல் பிரசாதம் உருவான வரலாறு!

கதிரியக்க மாசுக்களும் அதனால் ஏற்படும் விளைவுகளும்!

என்ன ஸ்கூட்டர் ரிப்பேருக்கு 90 ஆயிரமா? ஆத்திரத்தில் சுக்கு நூறாக உடைத்த ஸ்கூட்டியின் சொந்தக்காரர்!

SCROLL FOR NEXT