என் பேரனுடன் சதுரங்கம் விளையாடிக் கொண்டிருந்தேன்.
ஏற்கெனவே இந்த விளையாட்டின் மீது எனக்கு பிரமிப்பு உண்டு. வெறும் 64 கட்டங்கள், எதிரெதிரான இரு தரப்புகளுக்குத் தலா 16 காய்கள். போர் அம்சங்களாக எட்டு சிப்பாய்கள், இரண்டு குதிரைகள், இரண்டு யானைகள், இரண்டு மந்திரிகள், ஒரு ராஜா, ஒரு ராணி என்று கறுப்பு-வெள்ளை களத்தில் நடக்கும் மூளைப் போர்.
சிப்பாய்களின் கூக்குரல், அவர்கள் எறியும் ஈட்டிகள் காற்றைக் கிழிக்கும் ஒலி, பறக்கின்றனவோ என்று வியக்க வைக்கும் குதிரைகளின் குளம்பு ஒலி, தடதடவென்று மிதமான ஓட்டமாக மதர்ப்புடன் முன்னேறும் யானைகளால் உருவான பூமி அதிரும் சப்தம், படைகளுக்கும், அரசன், அரசிக்கும் வியூகம் அமைத்து போர் நுணுக்கத்தைச் சுட்டிக் காட்டும் மந்திரிகளின் ஆலோசனைக் குரல் மற்றும் எதிர்களின் நகர்தலை ஒட்டி பதுங்கவோ, பாயவோ செய்யும் அரசி, அதில் மன்னனைக் காக்க வேண்டிய கவலை மிகுந்த பொறுப்பு, இறுதிக் கட்டம் என்று வருமானால் அதற்குத் தன்னைத் தயார் செய்து கொள்ளும் அரசன்…. என்றெல்லாம் மனதுக்குள் ஆரவாரம் கொந்தளித்தாலும், முற்றிலும் அமைதியான போர் விளையாட்டு இது.
இரு தரப்பிலும் தத்தமது படையினரை ஆட்டுவித்து போர் ஆட்டத்தில் வெற்றிபெறத் துடிக்கும் போட்டியாளர் இருவர், மனதை முன்னிருத்தாத, மூளைக்கு மட்டுமே முக்கியத்துவம் தரும் தியான யோக உறுதி நிலை.
குறைந்த பட்ச சதவிகிதம்கூட திறன் பயிற்சி பெற்றவன் நான் இல்லை என்றாலும், சும்மாவானும் சதுரங்கம் ஆடுவேன். குறிப்பாக பேரப் பிள்ளைகளோடு ஆடும்போது வயது முதிர்வு மற்றும் பயிற்சி காரணமாக அவர்களைவிட திறமையாக ஆட முடியும் என்ற கர்வம் மேலெழும். அதே சமயம், பிள்ளைகள் மனசு ஒடிந்து விடக்கூடாதே என்ற ஆதங்கமும் தோன்றும். அதற்காக கவனிக்காதது போல, ஏமாந்தது போல, வேண்டுமென்றே நகர்த்தலில் தவறு செய்வேன். பளிச்சென்று என் காயை வெட்டி வீழ்த்தும் பேரன் சந்தோஷக் கூக்குரலிடுவான். எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும்…..
‘‘அப்பா, என்ன பண்றீங்க?’’ என் மகள் கேட்டாள். அவளுடைய பையனுடன்தான் என் சதுரங்க விளையாட்டு. அதை கொஞ்ச நேரமாக அவளும் கவனித்துக் கொண்டிருக்கிறாள் போலிருக்கிறது.
‘‘என்னம்மா?‘‘ என்று கேட்டபடி நிமிர்ந்த நான், ‘‘உன் பையன் என்னமா விளையாடறான், சூப்பர்ப்,‘‘ என்று பாராட்டவும் செய்தேன்.
‘‘இப்படி விளையாடி அவனைக் கெடுக்காதீங்கப்பா,‘‘ என்று பளிச்சென்று மகள் கூறியபோது திடுக்கிட்டேன்.
‘‘தெரிந்தே தோற்பதிலும், அந்தச் சலுகையில் அவன் வெற்றி பெறுவதும் உங்களுக்கு வேண்டுமானால் சந்தோஷம் கொடுக்கலாம்; ஆனால் அது அவனுடைய வளர்ச்சியைக் கெடுக்கும்….‘‘
‘‘இல்லேம்மா, தோத்துட்டா பாவம், அவன் மனசு சங்கடப்படும்…‘‘
‘‘படட்டுமே. சலுகையால் பெறும் வெற்றி அவனை சோம்பேறியாக்கிவிடும் அப்பா. அவனே திக்கித் திணறி, தடுமாறி, மேலே வரட்டும். அதோடு இப்படி விட்டுக் கொடுப்பது உங்களுடைய திறமையை நீங்களே அவமதிக்கிறார்போலவும் ஆகும், புரிகிறதா? கொஞ்சமும் தளர்த்திக் கொள்ளாமல் விளையாடும் உங்களை வெற்றி கொள்கிறானா, அல்லது தாக்குப் பிடிக்கிறானா அல்லது டிரா செய்கிறானா, அப்போதிலிருந்துதான் அவன் வளர ஆரம்பிப்பான்…. மன்னித்துக் கொள்ளுங்கள், நீங்கள் என் அப்பாவானாலும் இவன் என் பையன், அந்த சுயநலத்தில்தான் சொல்கிறேன்…‘‘
எனக்குப் புரிந்தது. இவன் நடக்க ஆரம்பித்த மழலைப் பருவத்தில், இவனைத் தூக்கிக் கொண்டபோது கை வலித்தது; கீழே விட்டபோது மனசு வலித்தது. மறுபடியும் தூக்கிக் கொள்வேன். அப்போதும் மகள் என்னை எச்சரிப்பாள்: ‘கீழே விடுங்கள் அவனை, நடக்கட்டும். விழுந்து எழட்டும், விழும்போது பதறிப் போய்த் தூக்காதீர்கள்; ஆனால் அவன் தானாக எழும்போது கைதட்டுங்கள்….‘ என்பாள்.
என் முகம் வாடியிருக்க வேண்டும். ‘‘வருத்தமா அப்பா?" (‘கோபமா?‘ என்று கேட்கவில்லை!) எனக்கும் என் தங்கைக்கும், எங்களுடைய சின்ன வயதில் நீங்கள் என்ன சலுகைகள் கொடுத்தீர்கள்? யோசித்துப் பாருங்கள்? அலுவலகம், வேலை, சம்பாத்தியம், வாகனம் வாங்குவது, வீடு கட்டுவது என்ற சிந்தனை ஓட்டத்தில் எத்தனை முறை எங்களுக்காக நின்றிருக்கிறீர்கள்? அக்கம்-பக்கம், நட்பு, உறவு, பள்ளிக்கூடம், கல்லூரி என்று எல்லா காலகட்டங்களிலும், பல சம்பவங்களில் எங்களைத்தான் யோசிக்க விட்டீர்கள், சுதந்திரமாகச் செயல்பட அனுமதித்தீர்கள். இது உங்களுடைய அலட்சியம் இல்லை. ஆனால் எங்களை நாங்களே உறுதியாக வளர்த்துக் கொள்வதற்கான மறைமுக ஆதரவு. அதைத்தான் இப்போது உங்கள் பேரனிடமும் காட்டுங்கள் என்று சொல்கிறேன். மகள் பாசத்தைவிட பேரன் பாசம் மிகவும் நெகிழ்வானதுதான். ஆனால் அது அவனுடைய ஆக்கபூர்வமான வளர்ச்சிக்கு வழிகாட்டுவதாக அமைந்தால்தான் அவனுக்குச் சிறப்பு, உங்களுக்கும் எனக்கும் பெருமை!‘‘
மெல்லச் சிரித்த நான், என் தவறை உணர்த்திய அவளைப் பாராட்டும் வகையில் அணைத்துக் கொண்டேன்.