உயிருக்கு பெரும் அச்சுறுத்தலைத் தரும் உடற்பிரச்னைகளில் ஹைப்பர் டென்ஷன் எனப்படும் உயர் ரத்த அழுத்தமும் ஒன்று. இந்த உயர் ரத்த அழுத்தப் பிரச்னையை நாம் உண்ணும் சில வகை உணவுகளின் மூலம் சமநிலையில் வைத்திருக்கலாம். அதுபோன்ற பத்து உணவு வகைகளை இந்தப் பதிவில் காண்போம்.
1. கம்பு: இதில் உள்ள அதிகளவு மக்னீஷியம் இதய வால்வுகளில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைத்து, சீரான ரத்த ஓட்டத்துக்கு உதவுகிறது.
2. பார்லி: இதயத் தமனியின் சுவர்கள் மற்றும் பிளேக்குகள் குவிவதால் கடினமாகி சுருங்கும் தன்மையடைவதைத் தடுத்து ரத்த ஓட்டத்தை பார்லி நீர் நார்மலாக்குகிறது.
3. கோதுமை: கோதுமையை தோலுடன் ரவையாகவோ அல்லது மாவாகவோ அரைத்து உணவாக்கி உண்ணும்போது ரத்த ஒட்டத்துக்கு இது அளிக்கும் நன்மைகள் அளப்பரியது.
4. ராகி: கவலைகளைப் போக்கி மனதை அமைதிப்படுத்தும் குணம் ராகியில் இயற்கையாகவே அமைந்துள்ளதால் உடலின் ரத்த ஓட்டம் சமன்படுகிறது.
5. ஓட்ஸ்: இதில் உள்ள அதிகளவு நார்ச்சத்து ரத்த ஓட்டம் தங்கு தடையின்றி சீராகச் செல்ல உதவுகிறது.
6. பாகற்காய்: இதில் உள்ள பொட்டாசியம் ரத்தத்திலுள்ள அதிகப்படியான சோடியத்தை உறிஞ்சும் தன்மை கொண்டுள்ளதால் ரத்த ஓட்டம் சமன்படுகிறது.
7. நெல்லிக்காய்: முழு நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி, தமனிகளை விரிவடையச் செய்து, ரத்த ஓட்டத்தை இலகுவாக்குகிறது. இதனால் அதிகப்படியான கொழுப்பும் கரைக்கப்பட்டு ரத்த ஓட்டம் சமநிலைப்படுகிறது.
8. வெள்ளரிக்காய்: இதில் இதயத்துக்கும், ரத்தத்துக்கும் நன்மை பயக்கக்கூடிய மக்னீஷியம், பொட்டாசியம், நார்ச்சத்து என அனைத்தும் ஒருசேர அடங்கியுள்ளது.
9. பிரவுன் ரைஸ்: இதில் அதிகளவு மக்னீஷியம், பொட்டாசியம் உள்ளதால் வெள்ளை அரிசிக்குப் பதில் இதை உபயோகிப்பது நன்மை பயக்கும்.
10. பாதாம் பருப்பு: நிறைவுறா கொழுப்பு (monounsaturated fat), மக்னீஷியம் இதில் நிறைந்திருப்பதால் ரத்த ஓட்டத்துக்கு நன்மை செய்கிறது.
நற்குணம் கொண்ட உணவுகளை நாடிச் சென்று உண்டு, நாளும் உடல் நலம் பெறுவோம்.