Put aside the rubbish arguments
Put aside the rubbish arguments https://tamil.lifeberrys.com
வீடு / குடும்பம்

குப்பை வாதங்களை ஒதுக்கித் தள்ளுங்கள்!

பொ.பாலாஜிகணேஷ்

ம்மில் பலர் வீண் வாதங்களில் ஈடுபடுவதைப் பார்த்திருக்கிறோம். ஏன் சில சமயங்களில் நாம் கூட அதில் ஈடுபடுவோம். அதுவா? இதுவா? அவரா? இவரா? நான் சொல்வதுதான் சரி. இல்லை… இல்லை நான் சொல்வதுதான் சரி என்று இப்படி ஏதாவது தமக்கு சம்பந்தம் இருக்கிறதோ, இல்லையோ ஏதாவது செயலைப் பற்றி ஓயாமல் வாதம் செய்து கொண்டு பொழுதையும் வீணடித்து, வம்பையும் விலைக்கு வாங்கி வருவோர் பலர் நம்மிடையே இருந்து கொண்டு இருக்கிறார்கள்.

ரயில் பயணங்களிலும், வேறு பல பொது இடங்களிலும் பலர் இந்த வீண் வாதத்தில் ஈடுபட்டு கசப்பான விளைவுகளைச் சந்திக்கின்றனர். சில நேரங்களில் தீவிரமாக வாதம் செய்து, பேச்சு முற்றி, கடைசியில் அடிதடியில் போய், ஏன் கொலையில் கூட முடிவதை நாம் அன்றாடம் செய்தித்தாள்களில் பார்க்கின்றோம்.

இந்த விவாதப் பேய் உங்களை உணர்ச்சிவசப்பட வைத்து, சிந்தனை செய்து முடிவு எடுக்கும் திறனை மழுங்கடித்து, தகாத விளைவுகளை ஏற்படுத்தும் என்பது திண்ணம். இதனால்தான் பல பொது இடங்களில், ‘இங்கு அரசியல் பேசாதீர்கள்’ என்று எழுதி வைத்து இருப்பதைப் பார்த்து இருக்கின்றோம்.

ஒருவர் தனது மனதில் ஒரு தீர்மானமான நிலைப்பாட்டை கொண்டவராக இருந்தால் அதனை எப்பாடுபட்டாவது நிலைநிறுத்தத்தான் பார்ப்பார். எவ்வளவு செய்திகளையும், காரணங்களையும் முன்வைத்து மணிக்கணக்காக விவாதம் செய்தாலும், அவர் தனது நிலையில் இருந்து மாற மாட்டார். கடைசியில் கசப்பு உணர்வுதான் மிஞ்சும். பின் ஏன் இந்த வீண் வாதம்? இதில் உளவியல் சார்ந்த உண்மை ஒன்றும் உள்ளது.

ஒருவர் தனது மனத்தளவில் கொண்டுள்ள வாதத்தினுள் தன்னையே (தற்குறிப்பேற்றி) உருவகப்படுத்திக் கொள்கிறார் (Personification). அதனால் அந்த வாதத்தில் அவருடைய நிலையை யாராவது எதிர்த்து வாதாடினால், அவர் தன்னையே எதிர்ப்பதாக எண்ணி உணர்ச்சி வசப்படுவார். அதில் அவருடைய ஈகோ உணர்ச்சிகள் எழுச்சி பெறுவதால், சம நோக்கில் எந்தவிதமான வாதங்களையும் மனதில் வாங்கி சீர்தூக்கும் மன நிலையை இழந்து விடுவார்.

ஆகையால்தான், வாதப்பிரதி வாதங்களை தவிருங்கள் என்ற அறிவுரையை நமக்கு போதித்து இருக்கிறார்கள். ‘வாதத்தில் வென்றாரே தோற்றார், ஏனெனில், அதில் விஞ்சிய மனக்கசப்பைக் காண்' என்கிறார் ஒரு மனோதத்துவ அறிஞர்.

சில நேரங்களில் மற்றவர்களுடன் ஏதாவது பொருள் பறறிய வாதங்கள் செய்ய வேண்டிய சூழ்நிலை அமைந்தால் அது ஆக்கபூர்வமான வாதமாக இருத்தல் வேண்டும். மேலும் அந்த வாதம், எடுத்துக்கொண்ட பொருளைப் பற்றி இருக்க வேண்டுமே அல்லாமல், அதில் ஈடுபடும் தனி நபர் பற்றியதாக இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

நம் குடும்பத்திலோ அல்லது நண்பர்களுடனோ ஒரு சாதாரண உரையாடல், பேச்சு தடித்தனால் கடும் வாதமாக மாறும் சூழ்நிலை ஏற்பட்டால், அதில் ஒருவர் சிறிது நேரம் அந்த இடத்தை விட்டு வெளியே வருவது நலம். அல்லது ஏதாவது நகைச்சுவைகளைச் சொல்லி அங்கு தோன்றும் இறுக்கமான சூழ்நிலையை திசை திருப்பி, மனங்கள் முறுக்கிக் கொண்டு நிற்பதை தவிர்க்க முயல வேண்டும். பல குடும்பங்களில் தம்பதிகள் வாழ்நாள் முழுவதும் ஏதாவது ஒரு செயலுக்காக வாதம் செய்துகொண்டே இருப்பர். பேரன், பேத்தி எடுத்த பிறகும் கூட ஓயாமல், தான் செய்ததுதான் சரி என்று இருவரும் வாதிட்டுக்கொண்டே இருப்பார்கள். அவ்வாறு நெருங்கிய உறவுக்குள் ஏற்படும் வாதங்களை சரியான அணுகுமுறையால் முடிவுக்குக் கொண்டு வரவில்லையெனில், சில நேரங்களில் உறவுகள் நாடைவில் முறிந்து விட ஏதுவாகும்.

சில சமயம் உடல் நிலை, மன அழுத்தம், வெளியே கொண்ட கோபம் போன்ற காரணங்களால் பேச்சு தடிக்கும். அப்போது சரியான காரணத்தை உணர்ந்து மற்றவர் தணிந்து போக வேண்டும். ஒன்றுக்குமே ஆகாத குப்பை வாதங்களைத் தவிருங்கள். தவிர்க்க இயலாவிட்டால், மற்றவருக்கு இடம் கொடுத்து அவருடைய வாதத்தையும் தடுக்காமல் கேட்டு, பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளுங்கள்.

முக்கியமாக, நம் கருத்தை அது எவ்வளவுதான் உண்மை மற்றும் பொருள் செறிந்ததாக இருந்தாலும், ஏனையோர் முழு மனத்துடன் (முழுவதையும்) எற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். ஏனெனில், அது இயற்கைக்கு எதிரான நிகழ்வு! அவரவர்க்கு தான் சொல்வதுதான் பெரிது.

அவரவர் வழியே சிறிது சென்றுதான் அவர்களை நம் வழிக்குத் திருப்ப முயற்சிக்க வேண்டும். நாம் நினப்பது போல் இவ்வுலகம் சுழல்வது இல்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

நாகை அருகே 14 இலங்கை மீனவர்கள் கைது!

நேற்றைய சராசரிகள் இன்றைய சக்கரவர்த்திகள்!

உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க ஆய்வுகள் கூறும் தகவல்கள்!

முக்தி துவாரகா! (பால்கா மந்திர்)

மனம் வறண்டு போகும்போது மழை நீரில் மீன் பிடித்தால்?

SCROLL FOR NEXT