Simple tips to keep your kitchen countertop sparkling clean https://www.renonation.sg
வீடு / குடும்பம்

உங்கள் கிச்சன் மேடை சுத்தமாக பளபளக்க எளிய ஆலோசனைகள்!

இந்திராணி தங்கவேல்

மையல் மேடையைப் பார்த்தால் எப்பொழுதும் அழகாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் சமைப்பது எளிது. யார் வந்தாலும் சங்கடப்படாமல் சமைக்கலாம். இப்படி பளிச்சென்று இருப்பதற்கு நாம் கைக்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பதை இப்பதிவில் காண்போம்.

காய்கறிகள் வெட்டும்போது மேடையின் மேல் ஒரு நியூஸ் பேப்பரை போட்டு அதன் மேல் காய்கறி வெட்டும் பலகை வைத்து காய்கறி வெட்டினால், கீழே விழும் காய்கறி கழிவுகளை எடுத்து குப்பைக் கூடையில் போட்டு விட்டு மேடையை துடைத்து விடலாம். மேடை அசுத்தமாகாது. அதை தனியாக சுத்தம் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.

அதேபோல் பூரி, சப்பாத்திக்கு தேய்க்கும்போது மேடையின் மேல் ஒரு நியூஸ் பேப்பர் போட்டு, அதன் மேல் சப்பாத்தி பலகையை வைத்து தேய்க்கவும். கீழே பேப்பரில் சிந்தும் மாவை பேப்பருடன் எடுத்து போட்டுவிட்டு துடைத்து விடலாம். மேடையும் அசுத்தமாகாது.

சாப்பிடும்பொழுது தட்டில் ஒதுக்கி வைக்கும் வேண்டாத பொருட்களை குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு பாத்திரத்தை கழுவும் இடத்தில் போட்டால் சிங்க்கில் பாத்திரம் கழுவும்போது தண்ணீர் அடைத்துக் கொள்ளாது. மேலும், பாத்திரம் துலக்கும்போது உணவு மிச்சங்கள் சேர்ந்து சிங்க் அடைத்து கொண்டால் பழைய எவர்சில்வர் டீ வடிகட்டியை சிங்க் மேற்புற ஓட்டையில் மேல் வைத்தால் உணவு துகள்கள் அதில் தங்கிவிடும். அந்த டீ வடிகட்டியில் சேரும் துகள்களை கொட்டி விட்டு தினமும் வடிகட்டியை சுத்தம் செய்து வைக்கலாம்.

பாத்திரம் கழுவும் இடத்தில் பாத்திரங்களை அப்படியே போட்டு வைக்காமல் அவ்வப்பொழுது உடனே கழுவி கவிழ்த்து விட்டு, சிங்கையும் பழைய பேப்பரால் நன்றாகத் தேய்த்து விட்டு, சுத்தம் செய்ய சோப் பவுடரோ, திரவப்பொருளோ கொண்டு கழுவி விட்டால் கிச்சன் சிங்க் முழுவதும் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். இதனால் கரப்பான் பூச்சி அதிகரிக்காது. மேடையும் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.

காஸ் அடுப்பின் பர்னரை பத்து நிமிடம் மண்ணெண்ணையில் ஊற வைத்து பிறகு பழைய டூத் பிரஸ் மூலம் சுத்தம் செய்யலாம். இதனால் கோடையில் மேடை ஓரத்தில் ஊறும் எறும்பு அதிகரிப்பது குறையும். அப்படியே எறும்பு அதிகரித்தாலும் உப்பு தூளை தூவி சுத்தம் செய்ய வேண்டும். இப்படிச் செய்வதால் கிச்சன் மேடை சுத்தமாக இருக்கும்.

கோடையில் அதிகம் எலுமிச்சை பழங்களை பிழிந்து ஜூஸ் தயாரிப்போம் மற்றும் ஊறுகாய் செய்வோம். அதன் ஆசிட் பட்டு தரை, கிச்சன் மேடை வெள்ளையாக காட்சி தரும். அதன் மீது வெண்ணையை தேய்த்தால் ஆசிட் மறைந்து மேடை சுத்தமாகும்.

குக்கரில் சாதம் வைக்கும்போது தண்ணீர் அதிகம் வைத்து விட்டால் எல்லா பக்கமும் தெறிக்கும் அபாயம் உண்டு. அதற்கு கிச்சன் வெயிட்டைச் சுற்றிலும் ஒரு துணியை  நனைத்துப் போட்டுவிட்டால் தெறிக்கும் கஞ்சியை துணி பிடித்துக் கொள்ளும். அப்பொழுது மேடையில் கஞ்சியும், பருப்பு வகைகள் தெரித்து அசுத்தமாகாது தடுக்கலாம். சுவர்களில் விழுவதும் தடுக்கப்படும். குக்கர் வெயிட்டை அவ்வப்போது சுத்தம் செய்து வைத்து விட்டால் அசுத்தம் அடைந்து பிரஷரினால் குக்கர் வெயிட் தூக்கி எறிவது நிறுத்தப்படும். இதனாலும் உணவுப் பொருள் சிதறுவது நின்று மேடை சுத்தமாகும்.

சமையலுக்குப் பயன்படுத்தும் எண்ணெய், வெண்ணெய், நெய், ஜூஸ், சாஸ் போன்ற வகைகளை ஒரு ட்ரேயில் வைத்து எடுத்து சமைத்தால் கிச்சன் மேடையில் இவை சிந்துவது நின்று சுத்தமாக இருக்கும்.

குறிப்பாக, கோடைக்காலத்தில் கிச்சன் மேடையில் உடைத்த தேங்காயை அப்படியே வைக்கக் கூடாது. உடனே எறும்பு வந்து விடும். அதைப்போல் பால் உள்ள இடத்திலும் எறும்பு வரும். அதற்கு சாம்பலுடன் மஞ்சள் பொடி கலந்து தூவினால் எறும்பு, பூச்சியும் ஓடிவிடும். சர்க்கரை டப்பாவில் கிராம்புகளை போட்டு வைத்தால் எறும்புகள் வராது. சர்க்கரை டப்பாவை பெருங்காய டப்பாவின் மேல் வைத்தாலும் எறும்புகள் வராது. காய்ந்த வெள்ளரிக்காய் தோல்களை சிறிது நேரம் போட்டு வைத்தால் எறும்புகள் வராது. பிறகு இவற்றை எல்லாம் சுத்தம் செய்து எடுத்துவிட்டு துடைத்து விட வேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக சமைக்கும்பொழுது கையை துடைக்க ஒரு துணி, ஸ்டவ்வை துடைக்க ஒரு துணி, மேடையை துடைக்க ஒரு துணி என்று தனித்தனியாக வைத்துக்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் மேடையில் பிசுபிசுப்பு இல்லாமல் இருக்கும். கைப்பிடியும் பிசுபிசுக்காது.

சமைத்தவற்றை உடனுக்குடன் அதற்கான பாத்திரங்களில் மாற்றி மூடி போட்டு ஓரமாக எடுத்து அழகாக அடுக்கி வைத்தால் மேடை சுத்தமாக இருக்கும். இதை டைனிங் டேபிளில் எடுத்து வைத்து பரிமாறுவதும் எளிதாக இருக்கும். இதுபோல் சுத்தமாக எதையும் செய்தால் கிச்சன் மேடை அழகாக மிளிரும்.

ஜப்பான் நாட்டுக் கதை - மனம் திருந்திய மன்னர்

இந்த மாதம் மீன்கள் உண்பதை தவிர்க்கவும்... எந்த மாதம்? ஏன்?

'என்னால் முடியும்' தம்பி! உன்னால்?

90-களில் இந்திய சினிமாவில் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய நடிகை! யார் யாருக்கு எத்தனை கோடி?

மஞ்சமாதா என்கிற மாளிகைபுரத்து அம்மன் வரலாறு தெரியுமா?

SCROLL FOR NEXT