some suggestions for parents who engage in discussions before children
some suggestions for parents who engage in discussions before children https://tamil.boldsky.com
வீடு / குடும்பம்

குழந்தைகள் முன்பு விவாதத்தில் ஈடுபடும் பெற்றோருக்கு சில ஆலோசனைகள்!

கே.எஸ்.கிருஷ்ணவேனி

விவாகரத்து கேட்கும் பெற்றோரின் குழந்தைகளின் மனநிலை எப்படி பாதிக்கும் என்று யோசிக்கும் நாம், ஒரே வீட்டில் இருந்தாலும் தினம் தினம் சண்டை சச்சரவுடன் கழியும் வீடுகளில் இருக்கும் குழந்தைகள் மனதளவில் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை யோசிக்க வேண்டும்.

குழந்தைகளின் பார்வையில் பெற்றோர்கள் இருவருமே முக்கியம். இந்நிலையில் கணவன், மனைவி இருவரும் அடிக்கடி வாக்குவாதம் செய்வதும், சண்டை போடுவதும் குழந்தைகளை மன ரீதியாக பெரிதும் பாதிக்கும். மேலும், குழந்தைகளுக்கு பெற்றோர் மீது நம்பிக்கையின்மை ஏற்படுவதுடன், பாதுகாப்பு உணர்வு இல்லாமல் தவிப்பார்கள். இதனால் இவர்கள் தனிமையில் என்ன செய்வது என்று தெரியாமல் சில தவறான காரியங்களிலும் இறங்கத் துணிவார்கள்.

எப்பொழுது ஆணும் பெண்ணும் ஒரு திருமண பந்தத்திற்குள் வந்து விடுகிறார்களோ அப்பொழுதே இருவருக்கும் சகிப்புத்தன்மை என்பது அவசியமாகிறது. அதுவும் குழந்தைகளைப் பெற்று பெற்றோராகி விட்டால்  அவர்களுக்காகவும் வாழ்க்கையை வாழ்ந்தாக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது.

பெண்ணுரிமை, சுதந்திரம், ஆணாதிக்கம் என்று பேசிக்கொண்டு விவாகரத்து பெற்று பிரிவது குழந்தைகள் மனதில் ஆழமான காயத்தை, பாதிப்பை உண்டாக்கிவிடும். வீட்டில் எப்போது பார்த்தாலும் சண்டை சச்சரவு, கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக்கொள்வது, கோபப்படுவது, ஆத்திரப்படுவது ஆகியவை குழந்தைகளின் மனநிலையில் மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

அப்படியானால் என்ன நடந்தாலும் அடங்கிபோகச் சொல்கிறீர்களா? கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கச் சொல்கிறீர்களா? என்றால் இல்லை என்பதுதான் பதில். இருவரும் ஒன்றாக அமர்ந்து பேசி ஒரு முடிவுக்கு வரவேண்டும். அதுவும் இதனை குழந்தைகள் முன்பு செய்யாமல் இருத்தல் வேண்டும். குழந்தைகளின் எதிர்காலம் பெற்றோரின் பிரச்னைகளால் பாதிக்கப்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

குழந்தைகளின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து அவர்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கவும், படிப்பில் கவனச் சிதறல் இல்லாமல் இருக்கவும் கவனம் செலுத்த வேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும். கணவன், மனைவிக்குள் எந்தப் பிரச்னை இருந்தாலும், குழந்தைகள் மீது அன்பு, பாசம், அக்கறை என்பது ஒருபோதும் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். குழந்தைகள் வளர்ந்து தனக்கான வாழ்க்கையை அவர்கள் அமைத்துக்கொள்வது வரை பெற்றோர்கள் அவர்களுக்கு துணை நிற்க வேண்டும். குறிப்பாக, பதின் பருவத்தில் இருக்கும் குழந்தைகளைப் பாதுகாத்து நல்வழிப்படுத்த வேண்டியது பெற்றோரின் கையில்தான் உள்ளது.

குழந்தைகளுக்கு எதிரில் அடிக்கடி மோதல் ஏற்பட்டால் குழந்தைகளுக்கு இந்த உறவு முறைகளிலேயே விரக்தி ஏற்பட்டு விடும். இதனால் அவர்கள் வளர்ந்தவுடன் காதல், கல்யாணம் போன்ற விஷயங்களை வெறுக்க ஆரம்பித்து விடுவார்கள். யாரையும் நம்ப மாட்டார்கள். உண்மையான அன்பு வைத்திருப்பவர்கள் மீது கூட எப்பொழுதும் சந்தேகத்துடனேயே இருப்பார்கள். மனச்சோர்வு மற்றும் மன அழுத்தத்திற்கு உள்ளாவார்கள். படிப்பில் ஆர்வம் குறையும். மற்ற குழந்தைகளுடன் கலந்து பழகாமல் தனிமையில் இருக்க விரும்புவார்கள். இம்மாதிரியான இளைய தலைமுறைகளால் சமுதாயத்திற்கு ஒரு வளர்ச்சியோ பயனோ இருக்காது. அப்படிப்பட்ட ஒரு தலைமுறை நம்மால் உருவாக வேண்டுமா என்பதை யோசிப்பது சமூக நலனுக்கு நல்லது!

தாயாருக்காக ஆதிசங்கரர் கட்டிய திருக்கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா?

ஊருக்குப் போகப் போகிறீர்களா? இதைப் படிச்சிட்டு நிம்மதியாப் போங்க!

பாதாமி குகைகளின் ஆச்சரியத் தகவல்கள் தெரியுமா?

விருந்தோம்பலின் மறுபக்கம் மாறிவரும் கலாச்சாரம்!

ஒயிட் ஆனியனில் இருக்கும் ஒப்பற்ற நன்மைகள்!

SCROLL FOR NEXT