குழந்தைகளுக்கு உற்சாகம் தரும் விளையாட்டுகளில் ஒன்று ஊஞ்சல் ஆடுவது. ஊஞ்சல் ஆடுவதன் பின்னால் பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்கள் உள்ளன. இதற்கான வரலாறு மிகப் பழைமையான ஒன்று. குழந்தைகளை தொட்டியில் போட்டு ஆட்டும் வழக்கத்தை அடிப்படையாக கொண்ட விளையாட்டே ஊஞ்சல்.
பொழுதுபோக்கு பூங்காக்கள் தோன்றிய நவீன உலகில் ஊஞ்சலும் நவீன வடிவம் பெற்று இடம்பிடித்தது. ஆக்லாந்து நாட்டின் டோரா பார்க் பகுதியில் நவீன ஊஞ்சல்கள் 1908ம் ஆண்டு முதன் முதலாக இடம்பெற்றதாக வரலாறு கூறுகிறது. இதன் புதிய தொழில்நுட்பம் வடிவமே பொழுதுபோக்கு பூங்காக்களில் இடம்பெற்ற குடை ராட்டினம், ரங்க ராட்டினங்கள்.
ஊஞ்சலில் ஆடுவது சிறுவர்களுக்கும், பெரியவர்களுக்கும் ஏராளமான நன்மைகளை வழங்குகிறது. பொதுவாக, மன அழுத்தம் குறைந்து மகிழ்ச்சி அதிகரிக்கும். ஊஞ்சலில் ஆடுவதால் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் மறைந்து நேர்மறை எண்ணங்கள் தோன்றுகிறது. இதனால் மனதில் மகிழ்ச்சி பெருகுவதுடன் வளமான எண்ணங்களும் அமைகின்றன. திருமணங்களில் 'ஊஞ்சல் சடங்கு' இதன் அடிப்படையில்தான் நடத்தப்படுகிறது. ஊஞ்சல் ஆடுவதால் மனச்சோர்வு நீங்கி, உடல் உற்சாகம் பெறுகிறது.
நேராக அமர்ந்து கைகளை உயர்த்தி இருபக்க சங்கிலிகளையும் பிடித்துக்கொண்டு வேகமாக ஆடும்போது, முதுகுத்தண்டுக்கு இரத்த ஓட்டம் படர்ந்து மூளை சுறுசுறுப்பாகிறது.
முன்பெல்லாம் ஊருக்கு வெளியே ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி பெண்கள் ஆனந்தமாக ஆடினர். பின் படிப்படியாய் அது குறைந்து காணாமல் போய்விட்டது. கணினியில் மணிக்கணக்கில் உட்கார்ந்து முதுகுத்தண்டு வளைந்துப் போன இன்றைய பெண்கள், இந்த ஊஞ்சல் பயிற்சியை தினமும் செய்தால் முதுகுத்தண்டுவடம் பலம் பெற்று கழுத்துவலி குணமடைய வழி செய்கிறது.
இதயத்திற்கு சுத்தமான பிராண வாயுவை கொடுத்து இதயத்தை சீராக இயங்கச் செய்யும். தினமும் தோட்டத்தில் ஊஞ்சல் ஆடுபவர்களுக்கு இதய நோய் கட்டுப்படும். தோட்டங்களில் அமைந்துள்ள ஊஞ்சலில் ஆடுவது அதிக பலனைத் தரும். மரம், செடி கொடிகளிலிருந்து வரும் பிராண வாயு வேகமாக உடல் முழுவதும் பரவி இரத்தத்தை சுத்திகரிக்கும். இது இதய நோய்கள் வருவதைத் தடுக்கும். குழந்தைகள் தினமும் 15 நிமிடங்கள் ஊஞ்சலில் ஆடுவது அவர்களின் மூளைத் திறனை அதிகரிக்கும்.
சாப்பிட்டவுடன் அரை மணி நேரம் மிதமான வேகத்தில் ஊஞ்சல் ஆடுவது நல்லது. சாப்பிட்ட உணவு செரிக்க இந்த ஆட்டம் உதவும். கோபமாக இருக்கும்போது ஊஞ்சல் ஆடினால் கோபம் தணியும்.
வெளியில் சுற்றியலைந்துவிட்டு வந்து ஊஞ்சலில் உட்கார்ந்து கண்களை மூடி தலையை சற்றே மேலே உயர்த்தி, இரு கைகளையும் ஊஞ்சல் பலகையில் அழுத்தி 'ரிலாக்ஸாக' ஆடினால் களைப்பெல்லாம் பறந்து, உடலின் ஒவ்வொரு பகுதியும் ஓய்வு பெற்று நிம்மதி ஏற்படும்.
ஊஞ்சல் ஆடும்போது முக்கியமாக பின்பற்ற வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது. அதுதான் திசை மாற்றி ஆடுவது. சுமார் 10 நிமிடம் ஒரு திசையில் ஆடினால் பிறகு எதிர் திசையில் சிறிது நேரம் ஆட வேண்டும். அல்லது சில நிமிடங்கள் ஆடுவதை நிறுத்தி பின்னர் மீண்டும் ஆடலாம். இல்லாவிட்டால் தலைசுற்றல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படலாம்.
சிகிச்சை முறையிலும் மூளைத் தூண்டலுக்கான ஒரு பயிற்சியாக ஊஞ்சல் ஆட்டம் பரிசீலிக்கப்படுகிறது. உணர்ச்சி குறைபாடு கொண்ட குழந்தைகளுக்கு வழக்கமாக 15 நிமிடங்கள் ஊஞ்சல் பயிற்சி அளிக்கப்பட்டால் மூளைத் திறன் மேன்மை அடையும் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
பழங்காலத்தில் எல்லா வீடுகளிலும் வரவேற்பறையில் ஊஞ்சல் கட்டி வைத்திருப்பர். சுப காரியங்களைப் பற்றி பேசும்போது ஊஞ்சலில் உட்கார்ந்து பேசுவதும் வழக்கமாக இருந்தது. வீட்டுக்குள் வரும் தேவதைகள் ஊஞ்சலில் ஆடப் பிரியப்படுவர். ஊஞ்சலில் ஆடி நல்லது செய்வார்கள் என்பதும் நமது முன்னோர்களின் நம்பிக்கை.