Road Accident 
வீடு / குடும்பம்

தமிழகத்துக்கு இந்த விஷயத்தில் முதல் இடமா?

முனைவர் என். பத்ரி

'இந்தியாவில் சாலை விபத்துகள்-2022' என்ற ஆண்டறிக்கையை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்நிலையில், சாலை விபத்துகளின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது தெரியவந்துள்ளது. 

இந்த அறிக்கையின்படி, 2022-ம் ஆண்டில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 4,61,312 சாலை விபத்துகள் பதிவாகியுள்ளன. இதில் 1,68,491 பேர் உயிரிழந்துள்ளனர். 4,43,366 பேர் காயமடைந்துள்ளனர். முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது விபத்துகளின் எண்ணிக்கை 11.9 சதவீதமும், இறப்புகளின் எண்ணிக்கை 9.4 சதவீதமும், காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 15.3 சதவீதமும் அதிகரித்திருப்பதைக் காட்டுகிறது. 

அதிவேகம், பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுதல், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், போக்குவரத்து விதிமுறைகளுக்கு இணங்காதது உள்ளிட்டவை இந்த விபத்துகளுக்குக் காரணங்களாக அமைந்துள்ளன.

சாலை விபத்துகளின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. 2022-ம் ஆண்டில் தமிழகத்தில் மொத்தம் 64,105 சாலை விபத்துகள் பதிவாகியுள்ளன. 2018-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் சாலை விபத்துகளின் எண்ணிக்கையில் தமிழகம் தொடர்ந்து முதல் இடத்தில் இருந்துள்ளது. 2022-ம் ஆண்டைப் பொறுத்தவரை இரண்டாவது இடத்தில் மத்தியப் பிரதேசமும், மூன்றாவது இடத்தில் கேரளாவும், நான்காவது இடத்தில் உத்தரப் பிரதேசமும் உள்ளன.

இருசக்கர வாகனத்தை 5% பேர் மட்டும் சரியாகப் பராமரிக்கிறார்கள். மீதமுள்ள 95% பேர் ஏனோ, தானோ என்று கடமைக்கு வாகனத்தைப் பராமரிக்காமல் ஓட்டிச் செல்வதால், இவர்களாலே பல விபத்துக்கள் இன்று ஏற்படுகின்றன.

வாகனத்தில் ஓட்டுநர் உரிமம், காப்பீட்டு நகல்கள், மற்ற வாகனம் சம்மந்தப்பட்ட முக்கிய தாள்களை பத்திரமாக வாகனத்திலேயே வைத்திருக்க வேண்டும். வாகனக் காவலர் எப்போது நம் வாகனத்தை மடக்கிக் கேட்டாலும் காட்டத் தயாராக இருக்க வேண்டும். இன்று ஓடும் இரு சக்கர வாகனம் அனைத்தையும் 3 மாதத்திற்கு ஒரு முறை வாகனத்தைச் சுத்தப்படுத்தி சரி செய்ய வேண்டும்.

50 வயதிற்கு மேற்பட்டவர்கள், அல்லது சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளவர்கள் வாகனம் ஓட்டுவதைத் தவிர்த்தல் நல்லது. இவர்களால் பிற பயணிகளுக்கு அதிக ஆபத்து இருக்கிறது.

சாலை விதியை மதித்து வாகனம் ஓட்டினாலே இங்கு பிரச்சனைகள் இல்லை. ஆனால் இங்கு பெரும்பாலும் சாலை விதிகளை மீறவே செய்கின்றனர். பச்சை விளக்கு எரிவதற்கு முன்னாலேயே சில அவசரக் குடுக்கைகள் உடனே செல்ல முனைவதால் பெரும் விபத்துக்கள் ஏற்படுகின்றன.

இரு சக்கர வாகனத்தை ஒட்டத் தெரியாமலேயே பலர் ஓட்டுகின்றனர். இவர்களில் பலர் நடுச்சாலையில் வாகனம் ஓட்டுகின்றனர். பின்னால் வருபவர் எவராவது வாகன எச்சரிக்கை ஒலி எழுப்பினால் அவர்களுக்குக் கூட வழி விடுவதில்லை. அவ்வாறு ஒலி கொடுத்து முன்னேறிச் செல்பவர்களை திட்டுகின்றனர். தவிர இரு பக்கக் கண்ணாடியைப் பெரும்பாலும் பார்த்து ஓட்டுவதும்  இல்லை.

18 வயதிற்குக் குறைவானவர்கள் வாகனம் ஓட்டுவது சட்டப்படி குற்றம் என சட்டம் இருந்தும் பல வீடுகளில் 18 வயது நிரம்பாத இளஞ்சிறார்கள் இரு சக்கர வாகனம் ஓட்டுவதை பெற்றோர்கள் ஊக்குவிக்கிறார்கள். இதனால் ஓட்டுநர் உரிமம் பெறாத இவர்கள் வாகனம் ஓட்டும் போது சாலையில் பிறருக்கு தொந்தரவு ஏற்படும்.

அலைபேசி பேசிக் கொண்டு வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்க வேண்டும். இதனால் பின்னால் வரும் வாகனங்கள் ஒலி எழுப்புவதைக் கேட்க முடியாமல் போகும்.

சாலையில் செல்லும் போது சமிக்ஞை விழுந்தால் உடனடியாக வண்டியை நிறுத்தாதீர்கள். அவ்வாறு செய்தால் பின்னால் வரும் வாகனம் உங்கள் மீது இடித்து விடும்.

நடுரோட்டில் வாகனம் ஓட்ட வேண்டாம். அவ்வாறு போவதால் பெரும் வாகனங்கள் செல்வது கவனம். எவரேனும் உங்களுக்குப் பின்னால் வருபவர்கள் (Horn) ஒலி எழுப்பினால் வழி விடுங்கள்.

உங்கள் வாகனத்தின் பக்கக் கண்ணாடியைப் (side mirror) பார்க்காமல் இடது, வலது புறம் திரும்பாதீர்கள். உங்களுக்கு முன்பு செல்லும் வாகனத்தை முந்த வேண்டும் என்றால் முதலில் வாகன ஒலி எழுப்பி, பின்பு வாகன வேகத்தைக் கூட்டி வலது புறமாக முந்துங்கள்.

கண்டிப்பாக தலைக்கவசம் அணிந்து  ஓட்டுங்கள்.

மது அருந்தி விட்டு வாகனத்தை ஒட்டாதீர்கள்.

பத்தே நிமிடத்தில் சுடச்சுட வெஜ் கட்லெட்டும், சோயா கட்லெட்டும் செய்வோமா?

குழந்தைகளிடம் அடிக்கடி கேள்வி கேட்கும் பெற்றோரா நீங்க? அப்போ இதை நோட் பண்ணிக்கோங்க!

குறுநாவல்: 'அம்புஷ்' அத்தியாயம் - 5

நம் கைகளையும் கொஞ்சம் கவனிப்போமா?

சுவாமி ஐயப்பன் வேட்டையனாக காட்சித்தரும் இடம் எது தெரியுமா?

SCROLL FOR NEXT