Family problems 
வீடு / குடும்பம்

வீட்டில் உண்டாகும் பிரச்னைகளுக்கு அடிப்படைக் காரணம் இதுதாங்க!

பொ.பாலாஜிகணேஷ்

வீட்டில் கணவன் - மனைவி பிரச்னை, அப்பா - அம்மா பிரச்னை, மகன் - மகளுடன் பிரச்னை என ஒவ்வொரு பிரச்னையும் விதவிதமாக இருக்கும். ஆனால், இந்த பிரச்னைகளுக்கு எல்லாம் அடிப்படைக் காரணம் என்ன? அது யாரால் ஏற்படுகிறது என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.

நாம் எப்பொழுது நம் வாழ்க்கையை மற்றவர் வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பார்ப்பதை நிறுத்துகிறோமோ அன்று நிச்சயம் நமது பிரச்னைகள் குறைந்து விட்டது போலத் தோன்றும். பிரச்னை இல்லாத குடும்பம் இருக்க முடியாது. ஆனால், அவை எல்லையைக் கடக்கும் பொழுதுதான் பிரச்னை பெரிய இடியாக அந்தக் குடும்பத்தைத் தாக்கி சின்னாபின்னமாக்கி விடுகின்றது. பிரச்னைகள் பலவிதம். கணவன், மனைவிக்குள் பிரச்னை, குழந்தைகளால் வரும் பிரச்னை, குடும்பத்தாரால் வரும் பிரச்னை, சில நேரங்களில் நண்பர்களால் கூட பிரச்னைகள் வரும்.

ஆனால், கல்யாணமாகி ஒருசில மாதமானாலும் சரி, பல வருடங்கள் ஆகியிருந்தாலும் சரி பிரச்னை ஏற்பட்டு கணவனும் மனைவியும் சண்டை போட்டுக் கொண்டு பிரிந்துப்போகும் நிலைமை தற்காலத்தில் ஒரு நோயைப் போன்று பரவி வருவதைக் அதிகமாகக் காண முடிகின்றது.

இது போன்ற பிரச்னையை மனைவியை விட கணவன் மனது வைத்தால் நிச்சயமாக நிறுத்த முடியும். எவ்வளவு பெரிய குடும்பப் பிரச்னையையும் அவர்கள் நினைத்தால் தவிடு பொடியாக்க முடியும். ஆனால், பெரும்பான்மையான ஆண்கள் ஏனோ அதைச் செய்ய முற்படுவதில்லை. கணவனால்தான் பெரும்பான்மையான குடும்பங்கள் பிரியக் காரணமாக இருக்க முடியுமே ஒழிய, நிச்சயம் ஒரு மனைவியாக இருக்க முடியாது.

வீணாக அவர்கள் மீது வீண்பழியைச் சுமத்தி தப்பிப்பதும் ஆண்களாகத்தான் இருக்க முடியும். இதோடு மட்டுமல்லாமல், குடும்பங்களில் பொதுவாக ஏற்படும் பிரச்னைகள் பெரிதாவதற்கும் காரணம் ஆண்கள்தானே ஒழிய, பெண்களால் அல்ல. இதனை ஆண்கள் எப்போது உணர்வார்கள் என்றால், அவர்களுக்கு வயதாகும்போதுதான் மனைவியின் அருமை புரியும். ‘அடடா, நாம் எத்தனை சந்தோஷத்தை இழந்து விட்டோமென்று அவர்களுக்குப் புரியும். கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்து என்ன பிரயோஜனம்? வீட்டில் கணவனுக்குப் பிடித்ததை பார்த்துப் பார்த்து மனைவியானவள் செய்து கொடுக்கிறாள்.

குழந்தை பிறந்தவுடன் குழந்தையும் கவனித்து கொண்டு வீட்டையும் கவனித்துக் கொள்கிறாள். அதற்கு எத்தனை எத்தனை பொறுமையும் அன்பும் நிதானமும் தேவை. அத்தகைய குணங்கள் கொண்டவள் மனைவி. இத்தகைய குணங்கள் கொண்ட மனைவியால் வீட்டில் பிரச்னைகள் வர வாய்ப்பே இல்லை.

அனைவரின் எண்ணங்களும் ஒன்றுபோல் இருந்தால், வாழ்க்கை சலித்து விடும். ஆகவே, மற்றவரின் மாற்று எண்ணங்களை ஒப்புக்கொள்கிறோமோ இல்லையோ மதிக்கத் தெரிந்துகொண்டால் பல பிரச்னைகள் இல்லாமல் போய் விடும். இதில் ஆண்களும் சரி, பெண்களும் சரி இருவருமே மாற்றத்தை உணர வேண்டியவர்கள்தான்.

மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு உதவும் 5 Stoic கொள்கைகள்! 

சருமப் பராமரிப்பில் இந்தத் தவறுகள் மட்டும் வேண்டாமே! 

சாளக்கிராம கல் உருவான வரலாறு தெரியுமா?

புகைப்பழக்கத்தை விட்டதும் இதய ஆரோக்கியம் சீராக எத்தனை ஆண்டுகள் ஆகும் தெரியுமா?

மருதாணியில் மறைந்திருக்கும் மருத்துவ உண்மைகள்!

SCROLL FOR NEXT