Why do children ask so many questions?
Why do children ask so many questions? 
வீடு / குடும்பம்

குழந்தைகள் ஏன் அதிகம் கேள்வி கேட்கிறார்கள் தெரியுமா?

கிரி கணபதி

குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு வளர்ந்துவிட்டாலே அதிகமாக கேள்விகள் கேட்டுக்கொண்டே இருப்பார்கள். இது சில சமயங்களில் பெற்றோர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும். அவர்கள் கேட்கும் சில கேள்விகள் விஞ்ஞானிகளுக்கே சவால் விடும் விதமாக இருக்கும். இப்படியெல்லாம் ஏன் இவர்கள் கேள்வி கேட்கிறார்கள் என பல சமயங்களில் ஒரு பெற்றோராக நீங்கள் நினைத்திருப்பீர்கள்? அதற்கான உண்மையான காரணம் என்ன என்பதை இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாங்க.  

விலங்குகளை போல், மனித குழந்தைகள் பிறக்கும்போதே சில விஷயங்களை கற்றறிந்து பிறப்பதில்லை. தங்களைச் சுற்றி நடக்கும் விஷயங்களைப் பார்த்துதான் கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக் கொள்ளும் தன்மையை மனிதக் குழந்தைகள் பெற்றுள்ளனர். இதன் காரணமாகவே சுற்றியுள்ள விஷயங்களைக் கற்றுக்கொள்ளும் ஆர்வத்துடன் அவர்கள் பிறக்கின்றனர். மேலும் குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு தங்களை சுற்றி இருக்கும் விஷயங்கள் பற்றி அறிந்துகொள்ள தொடர்ந்து முயற்சி செய்கிறார்கள். இதுவே அவர்களை அதிகமாக கேள்வி கேட்கத் தூண்டுகிறது.

குழந்தைகள் அதிகமாக கேள்வி கேட்கும்போது அவர்களின் அறிவாற்றல் மற்றும் மொழித்திறன் வளர்கிறது. ஒவ்வொரு கேள்விபும் புதிய விஷயங்களையும், புதிய சொற்களையும் கற்றுக் கொள்ளவும், அவற்றின் அர்த்தங்களைப் புரிந்துகொண்டு அதற்கேற்றவாறு நடந்து கொள்ளும் வாய்ப்பை அவர்களுக்கு வழங்குகிறது. எனவே குழந்தைகள் கேள்வி கேட்கும் போது அவர்களுக்கு முறையாக பதில் சொல்லுங்கள். 

இப்படி கேள்விகள் கேட்பதால் அவர்களது விமர்சன சிந்தனையும் மேம்படும். அதாவது தங்களைச் சுற்றியுள்ள விஷயங்களைப் பற்றி தைரியமாக கேள்வி கேட்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு ஏற்படும். சிறுவயதில் கேள்வி கேட்கும்போதே நாம் தடுத்து நிறுத்தினால், வாழ்க்கையில் எல்லா இடங்களிலும் கேள்விகள் கேட்க அஞ்சுபவர்களாகவே உங்கள் குழந்தைகள் இருப்பர். கேள்விகள் கேட்பதன் மூலமாக தகவலை அறிந்து முடிவுகளை எடுக்கும் திறன் வளர்கிறது. 

குழந்தைகள் தைரியமாக கேள்வி கேட்பதால், அவர்களின் தன்னம்பிக்கை மற்றும் தனித்துவம் வெளிப்படுகிறது. கேள்விகள் கேட்பதை அவர்களது யோசனைகளை வெளிப்படுத்தும் வாய்ப்பாக அவர்கள் பார்க்கின்றனர். எனவே குழந்தைகளுக்கு முறையான பதில் சொல்லிப் பழகுங்கள். சில கேள்விகள் அவர்களின் வயதுக்கு ஏற்றதாக இல்லை என்றாலும், அவற்றை முழுமையாக தடுத்துவிடாமல், மேலோட்டமான பதில்களை சொல்லி அவர்களுக்கு தெளிவை ஏற்படுத்துவது அவசியம். 

அதிகமாக கேள்வி கேட்கும் குழந்தைகளால் மட்டுமே கற்கும் திறனை மேம்படுத்திக்கொள்ள முடியும். குழந்தைகளை கேள்வி கேட்க ஆதரிப்பதால் அவர்களின் கற்றலுக்கு நாம் உதவ முடியும். இது அவர்களின் அறிவுத் தேடலுக்கு தூண்டுதலாக இருக்கும். இதன் மூலமாக புதிய பாடங்களைக் கற்றுக்கொள்ளவும், அவர்களின் ஆர்வத்தை அறியவும் பெரிதும் உதவுகிறது. 

ஹைப்பர் டென்ஷனை கட்டுப்படுத்தும் 11 மூலிகைகள்!

ஆழ்வார்திருநகரியும் ஒன்பது கருட சேவையும் பற்றி தெரியுமா?

கோடைக்கால உடல் பிரச்னைகளை குணமாக்கும் பழம்பாசி சஞ்சீவி மூலிகை!

துரோகம் செய்யும் உறவுகளை சமாளிப்பது எப்படி?

இருமுனைக் கோளாறு நோயின் அறிகுறிகளைக் கண்டறிவது எப்படி?

SCROLL FOR NEXT