family situation Image credit - pixabay
Motivation

சூழ்நிலையை வைத்து ஒருவரின் குணத்தை எடை போடக்கூடாது. ஏன் தெரியுமா?

நான்சி மலர்

ம் அனைவருடைய குணமும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாறக்கூடியது. சில நேரங்களில் சூழ்நிலையை பொருத்து சிலர் கண்களுக்கு நாம் நல்லவராக தெரிவோம். இன்னும் சிலருக்கோ நாம் கெட்டவராக தெரிவோம். இதை தெளிவாக புரிந்துக்கொள்ள ஒரு குட்டிக் கதையை பார்ப்போம்.

ஒரு ஊரில் வாழ்ந்து வந்த மாமியார் மற்றும் மருமகள் இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்துக் கொண்டேயிருந்தது. அந்த பெண்ணின் கணவரும் அவருடைய அம்மாவிற்கே ஆதரவாக பேசினார். இதனால் கோபம் கொண்ட பெண் தன் தந்தை வீட்டிற்கு சென்று விடுகிறார்.

அந்த பெண்ணின் தந்தை ஒரு பெரிய டாக்டர். அதனால் அந்த பெண் தன் டாக்டர் தந்தையிடம் கூறுகிறாள், ‘என் மாமியாரின் தொல்லை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறது. எனவே, என் மாமியாரை கொல்வதற்கு விஷம் தாருங்கள்’ என்று தந்தையிடம் கேட்கிறாள்.  இதைக்கேட்ட தந்தைக்கு பயங்கர அதிர்ச்சி. 'அப்படி எல்லாம் பண்ணக்கூடாது. இதையெல்லாம் செய்தால் நாம் இருவரும் ஜெயிலுக்குத்தான் போக வேண்டிவரும்' என்று எவ்வளவோ எடுத்து சொல்கிறார். ஆனால், அந்த பெண் கேட்க மறுக்கிறார்.

‘இப்போது நீங்கள் விஷத்தை கொடுக்கவில்லை என்றால், நான் என் மாமியார் வீட்டிற்கு போக மாட்டேன். இங்கேயே இருந்துவிடுவேன்’ என்று கூறுகிறாள். இதனால் தந்தையும் வேறு வழியில்லாமல் அந்த விஷத்தை கொடுக்கிறார்.

‘இது ஸ்லோ பாய்ஸன் என்பதால் சமைக்கும்போது கொஞ்சம் கொஞ்சமாக சாப்பாட்டில் சேர்க்க வேண்டும். யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க உன் மாமியாரிடம் சிரித்து அன்பாக பேசி பழக வேண்டியது மிகவும் அவசியம்’ என்று தந்தை சொல்லி அனுப்புகிறார்.

இந்த பெண்ணும் தன் மாமியாரிடம் நன்றாக சிரித்து பேசி நெருக்கமாகி விடுகிறார். இப்போது இருவருக்குள்ளும் எந்த சண்டையும் வருவதில்லை. கொஞ்சம் நாள் கழித்து அந்த பெண் தன் தந்தையிடம் சென்று விஷத்திற்கு மாற்று மருந்து கேட்கிறார்.

‘என் மாமியார் இப்போது எனக்கு அம்மா மாதிரி. எனவே நீங்கள் கொடுத்த விஷத்திற்கு மாற்று மருந்துக் கொடுங்கள்’ என்று அந்த பெண் கேட்கிறார். அதற்கு தந்தை சொல்கிறார், ‘நான் எப்போது உன்னிடம் விஷம் கொடுத்தேன்? நான் உனக்கு கொடுத்தது வெறும் சர்க்கரை பவுடர்தான்’ என்று அந்த பெண்ணின் தந்தை சிரித்துக்கொண்டே சொல்கிறார்.

இந்தக் கதையில் வந்ததுப் போலத்தான் சில நேரங்களில் சிலரை நமக்கு பிடிக்காமல் போகலாம். ஆனால், அதற்கு சூழ்நிலை ஒரு காரணமாக இருக்கலாம். நாம் அனைவரிடமும் சற்று அனுசரித்து புரிந்துக்கொண்டு வாழ்ந்தால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பிடிக்காமல் போனவர்களைக்கூட காலப்போக்கில் பிடித்துப் போகலாம். முயற்சித்துப் பாருங்கள்.

இந்திய அளவில் கற்பனைக்கெட்டாத அளவில் கல்விக் கட்டணம் வசூலிக்கும் 5 கல்விக் கூடங்கள்!

வாழ்க்கையில் வெற்றி பெற பின்பற்ற வேண்டிய 10 விதிகள்!

இந்தியாவில் அமைந்திருக்கும் மிகப்பெரிய விதை வங்கி!

News 5 – (18.10.2024) ‘பாகுபலி’ திரைப்படத்தின் 3ம் பாகம் தயாரிக்கத் திட்டம்!

சிறுகதை: இருட்டை மீறி திமிறிய உருவம்!

SCROLL FOR NEXT