-ம. வசந்தி
"நாலு பேர் என்ன சொல்வார்கள்!"
"நாலு பேருக்கு முன்னால் தலை நிமிர்ந்து நடக்க வேண்டாமா!"
"நாலு பேர் மதிக்க வேண்டாமா!"
இந்த "நாலு பேர்" தான் யார்?
நாம் வசிக்கும் சமூகம்தான். நம் வாழ்க்கையில் நன்றாக இருந்தால் பொறாமை கொள்கிறவர்கள். நாம் வீழ்ந்தால் கேலி செய்கிறவர்கள், அசம்பாவிதம் ஏதாவது நடந்தால் தூற்றுபவர்கள் தான் இந்த "நாலு பேர்". இவர்களை திருப்தி படுத்துவதே நம் வாழ்க்கையாக கொண்டுவிட்டால் நமக்கு வாழ்க்கையில் திருப்தியிராது. மகிழ்ச்சியிராது. அர்த்தம் இராது.
இந்த நாலு பேரை திருப்திப்படுத்துவது என்பது கழுதையை சுமந்து கொண்டு செல்வது போலத்தான். நாம் வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும், அக்கறை கொள்ளாத இந்த "நாலு பேருக்கு" நாம் கொடுக்கிற மதிப்பு நாம் நேசிக்கும் நம் குடும்பத்தாருக்கு கொடுப்பதை விட அதிகம். நான்கு பேர் மதிக்க வேண்டும் என தகுதிக்கு மீறி ஆடம்பரப் பொருட்களை வாங்குவது, தமக்கு விருப்பமான ஒரு காரியத்தை செய்ய வேண்டுமாயினும், "ஐயோ, நாலு பேர் என்ன சொல்வார்கள்!" என்று அஞ்சி செய்யாமல் தவிப்பது,,ஏன் இறந்தவர்களுக்காக போலி அழுகை அழுவது கூட இந்த "நாலு பேருக்காக" என்றாகி விட்டது.
எனக்குத் தெரிந்த பெண்மணி ஒருவர் ஒருநாள் பிழிய பிழிய அழுது கொண்டிருந்தார். சக தோழிகள் எல்லாரும் அவளுக்கு ஆறுதல் அளித்து கொண்டிருந்தனர். அவளுக்கு வேண்டியவர் யாருக்காவது உடல் நலம் குன்றி விட்டதா? நெருங்கிய உறவினர் யாராவது இறந்து விட்டனரா? எதுவும் இல்லை. பின்னே என்ன கஷ்டம் அவளுக்கு ?
அவளுடைய மகன் மெட்ரிகுலேஷன் பரீட்சையில் தோற்றுவிட்டான். தோற்றுப் போனதால் மகனின் ஒரு வருட படிப்பு வீணாகி விட்டதே என்ற வருத்தத்தில் அவள் அழவில்லை. பின் அவள் ஏன் அழுதால் தெரியுமா? அவளுக்கு அவமானமாக இருந்தது. மகன் தோற்றுப் போனது. "எல்லாருக்கும் என்ன பதில் சொல்வேன்! எப்படி முகத்தை காண்பிப்பேன்!" என்றுதான் அவள் கவலைப்பட்டால்.
வெற்றியும் தோல்வியும் வாழ்க்கையில் இயல்பு. அதை தைரியமாக சந்திப்பதை விடுத்து இப்படி கலங்கி நிற்பது தவறு என்பது ஒருபுறம் இருக்க "நான்கு பேர்" சிரிப்பார்களே, கேலி செய்வார்களே என்று எண்ணி அவமான உணர்ச்சி பெறுவது மகா அபத்தம். நான்கு பேருக்காக உண்மையில் கவலைப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் ஒழுக்கமான உடை, ஒழுக்கமான நடத்தை, மிதமான இனிமையான பேச்சு இவைகளுக்காக மட்டும்தான் நாலு பேருக்காக வருத்தப்பட வேண்டும்.
புகழுக்கு பின்னால் ஓடுகிறவனுக்கு அது எட்டாத உயரத்தில் பறக்கிறது. புகழை எதிர்பாராமல் தன் கடமையை அன்போடு செய்கிறவனை புகழ் வந்தடைகின்றது. நாலு பேர் புகழும் படியாக நடக்க வேண்டும் என்பது நாலு பேர் மெச்சும் படியான போலி வாழ்க்கை வாழ வேண்டும் என்பதல்ல: சிந்தித்து தெளியும் அறிவு ,பன்னலநோக்கு, மனிதாபிமான சிந்தனை போன்ற நற்குணங்களை பெற்றிருந்தாலே நான்கு பேர் மெச்சும்படியான வாழ்க்கை வாழலாம்.