Are you upset that others reject you?  Image Credits: Vecteezy
Motivation

மற்றவர்கள் உங்களை நிராகரிப்பதற்காக வருத்தப்படுறீங்களா?

நான்சி மலர்

ம்முடைய வாழ்க்கையில் பலமுறை நாம் நிராகரிப்பதை எதிர்க்கொண்டிருப்போம். அந்த நிராகரிப்பு வேலை சம்பந்தமாகவோ, நட்பு அல்லது காதல் சம்பந்தமாகவோ இருக்கலாம். சிலர் நம்மை வேண்டாம் என்று ரிஜெக்ட் செய்துவிட்டு போயிருக்கலாம். 'நம்முடைய மதிப்பை உணராமல் நம்மை நிராகரித்துவிட்டு போகிறார்களே!' என்று அதை நினைத்து நாம் வருத்தப்பட்டிருக்கலாம். இருப்பினும், நிராகரிப்பு என்பது ஒரு நல்ல விஷயம்தான். ஏன் என்பதை இந்தக் கதையை முழுமையாக படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்.

ஒரு ஊரில் வயதான பாட்டி வாழ்ந்து வந்தாராம். ஒருகாலத்தில் நல்ல வசதி வாய்ப்புடன் வாழ்ந்தவர்தான் அந்த பாட்டி. ஆனால், அவரின் கணவரின் மரணத்திற்கு பிறகு அவருடைய நிலை தலைக்கீழாக மாறிவிட்டது. அவரை கவனிக்கவும் ஆளில்லை, அவரின் உடல் நிலையும் சரியில்லை என்பதால் தன்னுடைய ஜீவனத்தை நடத்தவே மிகவும் கஷ்டப்பட வேண்டியிருந்தது. எனவே, அந்த வயதான பெண்மணி தன்னுடைய வீட்டில் இருக்கும் பொருட்கள், பண்ட பாத்திரங்களை விற்று அதில் வரும் காசை வைத்து தன்னுடைய வாழ்க்கையை நகர்த்த ஆரம்பிக்கிறார்.

இப்படி அந்த பாட்டி விற்ற பாத்திரங்களை அதிகமாக வாங்கிய வியாபாரியின் பெயர் தாமிரதாசன். இந்த தாமிரதாசன்  நன்றாக பேரம் பேச தெரிந்தவன். கிராமம் கிராமமாக போய் மக்களிடமிருக்கும் பாத்திரத்தை வாங்கி அதை சரிசெய்து நல்ல விலைக்கு விற்பதே அவனது தொழிலாகும்.

இப்படி போய்க்கொண்டிருக்க பாட்டியிடம் இருந்த அனைத்து பாத்திரங்களுமே தீர்ந்துப் போய்விட்டது ஒரு கிண்ணத்தை தவிர. எந்த பாத்திரத்தை விற்றாலும், அந்த கிண்ணத்தை விற்க அந்த பாட்டிக்கு எப்போதுமே மனம் வந்ததில்லை. ஏனெனில், அவருடைய கணவர் உயிருடன் இருந்தபோது, 'இந்த கிண்ணம் மிகவும் விஷேசமானது. என் தாத்தாவிடமிருந்து எனக்கு வந்தது' என்று சொல்லிக் கொண்டேயிருப்பாராம்.

ஆனால், இப்போது வேறு வழியில்லை அந்த கிண்ணத்தை விற்றுதான் ஆகவேண்டும் என்ற நிலை. வழக்கம்போல தாமிரதாசனிடம் அந்த கிண்ணத்தை விற்க பாட்டி முற்பட அதை வாங்கி பார்த்த தாமிரதாசன் இந்த கிண்ணத்திற்கு இரண்டு பொற்காசுகள் தரலாம். அவ்வளவுதான் என்று கூற பாட்டியின் முகம் சுருங்கிவிட்டது. 'இது என் கணவரின் தாத்தா காலத்து கிண்ணம். இதனுடைய மதிப்பு அதிகம். குறைந்தது எனக்கு பத்து பொற்காசுகள் கொடுத்தால்தான் இந்த கிண்ணத்தை தருவேன்!' என்று கராராக கூறிவிட்டார். இதைக் கேட்ட தாமிரதாசன், 'இந்த கிண்ணம் எல்லாம் அவ்வளவு விலை போகாது' என்று கூறிவிட்டு சென்று விடுகிறான். 'எப்படியிருந்தாலும் பாட்டி தன்னிடம் தானே வர வேண்டும்' என்பது தாமிரதாசனின் எண்ணம்.

பாட்டி மிகவும் மனம் நொந்துக்கொள்கிறார். தாமிரதாசனிடமே அவன் கேட்ட விலைக்கே கிண்ணத்தை கொடுத்திருக்கலாமோ? இனி யார் வந்து இந்த கிண்ணத்தை வாங்குவார்கள் என்பது பாட்டியின் எண்ணம்.

அன்னைக்கு அந்த ஊருக்கு புதிதாக ஒரு பாத்திர வியாபாரி வருகிறார். அவர் பெயர் சந்திரதாசன். இவர் மிகவும் நேர்மையான மனிதர். அவர் பாத்திரத்தை கேட்டு பாட்டி வீட்டிற்கு வருகிறார். அப்போது பாட்டி தன்னிடமிருக்கும் கிண்ணத்தை காட்டி, 'இதை நல்ல விலைக்கு எடுத்துக்கொள்ளுங்கள்' என்று கூறுகிறார். அந்த பாத்திரத்தை வாங்கிப் பார்த்த சாந்திரதாசன் ஆச்சர்யமடைகிறான். இந்த கிண்ணம் சாதாரண கிண்ணமேயில்லை. இது தங்கத்தால் செய்யப்பட்ட கிண்ணம் என்று கூறுகிறார். அந்த கிண்ணத்தின் மதிப்பு 400 பொற்காசுகள் போகும் என்று கூறுகிறார். இரண்டு பொற்காசுகள் கூட போகாது என்று ஒருவர் சொல்லிவிட்டு போன அந்த கிண்ணத்தை மதிப்பு தெரிந்த ஒருவரிடம் நாணூறு பொற்காசுகளுக்கு விற்கிறார் அந்த பாட்டி.

இதுபோலத்தான் நம்முடைய மதிப்பை உணராமல் சிலர் நம்மை ரிஜெக்ட் செய்யலாம். அப்போது, 'நம் மதிப்பை மற்றவர்கள் உணர்ந்து கொள்ளவில்லையே!' என்று சங்கடப்படாதீர்கள். சரியான நேரம் வரும் பொழுது, சரியான நபரின் கண்களில் படும்பொழுது அவர்கள் நம் மதிப்பை உணர்ந்துக்கொள்வார்கள். அதுவரை துவண்டு போகாமல் உழைத்துக் கொண்டேயிருங்கள்.

திப்பு சுல்தானை ஆங்கிலேயரிடமிருந்து காத்த திண்டுக்கல் மலைக்கோட்டை பெருமை தெரியுமா?

இவள் இருட்டில் மட்டுமே வருவாள்! 

புரதம் நிறைந்த சோயா கீமா செய்யலாம் வாங்க! 

மாதச் சம்பளம் வாங்குபவர்கள் செய்யும் 6 நிதித் தவறுகள்! 

ஆரஞ்சு Vs சாத்துக்குடி: எது சிறந்தது?

SCROLL FOR NEXT