வாழ்க்கையின் பூரணத்துவத்தை வேர் வரை உய்த்து உணரக்கூடிய கலாசாரத்தில் பிறந்தும், உலகில் நாம் கோமாளிகளாக தோற்றமளிக்கும் காரணம், அடிப்படை பிழைப்புக்குக் கூட நம்மை நம்புவதை குறைத்துக் கொண்டு கடவுளை நம்பி இருப்பதுதான். உங்கள் உடலையும், மனத்தையும் திறன்பட பயன்படுத்த பயிற்சிகள் கொடுத்தால் போதும். பல லட்சம் கோவில்கள் இருந்தும் எங்கு திரும்பினாலும் ஏன் வேதனை மிகுந்த முகங்களைக் காண்கிறோம். உண்மையையும், உபதேசத்தையும் போட்டுக் குழப்பிக் கொண்டதால் வந்த பிரச்னை இது. கடவுள் சக்தி வாய்ந்தவர். ஆனால் அவரை நம்பி உண்மையிலேயே உங்களை ஒப்படைப்பீரா? மாட்டீர்கள்.
உழைக்காமல் சாப்பிடவும், படிக்காமல் தேர்வுகளில் பாஸ் செய்யவும், உங்கள் தவறுகள் கவனிக்கப்படாமல் போகவும் கடவுளை துணைக்கும் கூப்பிடுகிறீர்கள். இதையெல்லாம் கொண்டு வா, காப்பாற்று என்று உங்கள் சேவகனாகவும், சிப்பாயாகவும் கடவுளை நியமிக்கப் பார்க்கிறீர்கள்.
ஒரு முதலாளி வேலைக்காரனை உப்பும், சர்க்கரையும் வாங்கிவர அனுப்பினார். வேலைக்காரன் சர்க்கரையை வாங்கினான். அடுத்து உப்பு வாங்கப் போனபோது இரண்டையும் கலந்து வாங்கி வராதே என்று அவன் முதலாளி கூறியது ஞாபகம் வந்தது. பையை உள்ளும் வெளியுமாக புரட்டிவிட்டால் வேறொரு பையாகுமே என புரட்டினான். சர்க்கரை தெருவில் கொட்டியது. உப்பை மட்டும் வாங்கிப் போனான். உப்பு இருக்கிறது. சர்க்கரை எங்கே என் அவர் கேட்க அவன் பையின் அந்தப் பக்கம் இருக்கிறது என்று் பையை மறுபடியும் உள்ளும் வெளியும் ஆக புரட்ட உப்பு கொட்டியது அச்சமும், கடவுள் நம்பிக்கையும் இப்படித்தான்.
இரண்டையும் குழப்பிக் கொண்டால் எதற்கும் உதவாது உண்மையில் கடவுள் மேலானவர் என்று நினைத்தால் உங்கள் வாழ்க்கை எதிர்பார்க்காதபடி நடக்கும்போது "ஆஹா, கடவுள் விருப்பப்படி நடக்கிறதே!" என்று சந்தோஷப்பட வேண்டும். மாறாக வாழ்க்கையை எப்படி நடத்தித் தரவேண்டும் என்று பிரார்த்தனை பெயரில் கடவுளுக்கு உத்தரவுதானே கொடுக்கிறோம்.
சந்தேகம் இருக்கும் மனதில் பக்தி இல்லை. பக்தி என்பது உங்கள் அடையாளங்களை இழந்து எதன் மீது பக்தி கொணடீர்களோ அதனுடன் இரண்டறக் கறைவது. உங்கள் வாழ்க்கையை நீங்களாக வாழக் கற்றுக் கொண்டீர்களானால் வாழ்க்கை மேன்மையாகிவிடும். உங்களுக்குத் தேவையானது, விரும்பியது துணை, வசதி மற்றும் குழந்தைகள் கிடைத்தாலும் எதற்காகவோ உள்ளம் ஏங்குகிறது அது என்? இந்த படைப்பின் வேர் என்ன என்று அறிந்து கொள்ளும் ஆர்வமே ஆன்மிகம். அப்போதுதான் நீங்கள் கடவுளைப் பார்க்கத் தயார்.