பிடிவாதம் என்பது ஒரு நபர் தன்னுடைய மனதையும் முடிவையும் மாற்றிக் கொள்ள மறுக்கும் பண்பு. சிலர் எவ்வளவோ எடுத்துச் சொன்னாலும் தங்கள் முடிவை மாற்றிக்கொள்ளாமல் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்றே சாதிப்பார்கள். இந்த பிடிவாத குணம் நம் மனநலத்தில் நன்மை தீமைகள் இரண்டையும் கொண்டுள்ளது. பிடிவாதமாக இருப்பவர்கள் எந்த மாற்றத்தையும் எதிர்க்கவேண்டும் என்ற கொள்கையுடன் இருப்பார்கள்.
பிடிவாதத்திற்கான காரணங்கள்:
பிடிவாதமாக இருப்பதற்கு பல காரணங்கள் உண்டு. முக்கியமான காரணம் பாதுகாப்பின்மையே. யாராவது ஏதாவது சொன்னால் உடனே ஏற்றுக் கொண்டால் நம்மை பலவீனமாக கருதிவிடுவார்கள் என்ற எண்ணம் ஒரு காரணம். இவர்கள் எதையும் லேசில் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். நீ சொல்லி நான் என்ன கேட்பது என்ற குணம் ஒரு காரணமாகும். மற்றவர் சொல்வதை கேட்பது தனது கட்டுப்பாட்டை இழக்க நேரிடுமோ என்ற பயமும், எண்ணமும் காரணமாகும். சிலர் தங்கள் ஆதிக்கத்தை காட்டவும் எந்தவிதமான மாற்றத்தை மறுக்கவும் செய்வார்கள்.
பிடிவாதம் எந்த சூழ்நிலையிலும் மக்களை தற்காத்துக்கொள்ள வழிவகுக்கிறது. எந்த ஒரு சூழ்நிலையையும் அவர்கள் தங்கள் சுய உணர்வுக்கு அச்சுறுத்தலாக பார்ப்பதே ஒரு காரணமாகும். அதனால் அவர்கள் ஒரு வலுவான சுய அடையாளத்தை நிறுவ வேண்டியது முக்கியம் என்றெண்ணி பிடிவாத குணத்தை விடாமல் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு அவர்களின் கடந்த கால அனுபவங்கள் முக்கிய காரணமாக இருக்கலாம். பிடிவாதத்தின் பின்னணியில் உணர்ச்சிகளுக்கும் முக்கிய பங்கு உள்ளது. பயம், கோபம், பதட்டம் போன்ற உணர்ச்சிகள் அவர்களை அச்சுறுத்தும் பொழுது அதன் விளைவாக அவர்கள் பிடிவாதமாக மாறத்தொடங்குகின்றார்கள்.
தோல்வி பயம் முக்கியமாக பிடிவாதத்திற்கு காரணமாக அமையலாம். ஏதேனும் செய்யப்போய் அதில் தோல்வி ஏற்பட்டால் என்ன செய்வது என்ற பயத்தில் அதாவது தோல்வி பயத்தில் எந்த முயற்சியும் எடுப்பதை தவிர்க்க நினைக்கலாம். இதன் விளைவாக அவர்கள் தங்கள் வாழ்க்கையில் வாய்ப்புகளை இழக்க வேண்டி வரும். தோல்வியை எதிர்கொள்ளும் பொழுது வலியோ, ஏமாற்றமோ ஏற்பட்டு அதன் மூலம் பிடிவாதம் என்ற குணத்தை வளர்த்துக் கொள்ளலாம். எதிர்பார்ப்புகள் நிறைவேறாத பொழுது பிடிவாத குணம் அதிகரிக்கும்.
பிடிவாதத்தை தளர்த்த என்ன செய்யலாம்?
ஒரு பிடிவாதமான நபருக்கு வாழ்க்கையில் வெற்றி பெற நெகிழ்வுத்தன்மை மற்றும் திறந்த மனப்பான்மை மிகவும் அவசியம். புதிய யோசனைகளைப் பெறவும், மற்றவர்களுடைய கருத்துக்களை அலசி பார்த்து ஏற்றுக்கொள்ளும் மனப்போக்கும் ஏற்பட அவர்களை ஊக்குவிக்கலாம். எளிதில் அடையக்கூடிய தெளிவான இலக்குகளை அமைத்துக் கொண்டு அதை நோக்கி செல்வதற்கு அவர்களை ஊக்குவிக்கலாம். இவை அவர்களின் பிடிவாதத்தை தளர்த்தச் செய்யும்.
மற்றவர்களின் யோசனைகளை உடனடியாக நிராகரிக்காமல் அவர்கள் சொல்வதை கேட்கும்படி அவர்களுக்கு எடுத்துக் கூறலாம். இதன் மூலம் அவர்கள் வெவ்வேறு கண்ணோட்டங்களை புரிந்து கொள்ளவும், சிறந்த உறவுகளை வளர்த்துக் கொள்ளவும் உதவும்.
எந்த ஒரு செயலுக்கும் விடாமுயற்சியும், பொறுமையும் முக்கியம் என்பதை அவர்களுக்கு நினைவூட்டலாம். ஊக்கத்தை வழங்கக் கூடிய நல்ல நண்பர்களையும், வழிகாட்டிகளையும் உருவாக்கிக் கொண்டு உற்சாகமாக வலம் வரலாம் என்பதை நினைவுபடுத்துங்கள். அத்துடன் எந்த ஒரு சிறிய வெற்றியையும் கொண்டாடப் பழகினால் அது அவர்களுக்கு நேர்மறையான நடத்தை மாற்றங்களை ஏற்படுத்தி வாழ்க்கையை சுவாரசியமாக்கும்.
பிடிவாத குணத்தை போக்கி வாழ்வை சுவாரஸ்யமாக்குவோமா?