இந்தக் கணம் முதல் உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்வதை நிறுத்த உறுதியெடுங்கள். கூட்டத்திலிருந்து விலகி நில்லுங்கள். அசாதாரணமான ஒருவராக இருக்கத் தீர்மானித்து என்ன தேவையோ அதைச் செய்யுங்கள்- இப்போதே. -Epictetus. எபிக்டெட்டஸ் ஒரு கிரேக்க தத்துவ ஞானி.
மனிதர்களில் மூன்று வகை உண்டு. ஒரு விஷயத்தை செய்ய வேண்டும் என்றால் சிலர் யோசிக்காமல் உடனே முடிவெடுப்பார்கள். சிலர் சிறிது யோசித்து முடிவு எடுப்பார்கள். ஆனால் இந்த மூன்றாம் வகை மனிதர்கள் அவர்களாக எந்த முடிவுகளுமே எடுத்திருக்க மாட்டார்கள். இவர்களுக்கான முடிவை வேறு யாராவதுதான் எடுக்க வேண்டி இருக்கும். சொந்தமாக எந்த முடிவும் இவர்களுக்கு எடுக்கத் தெரியாது. அப்படியே தெரிந்திருந்தாலும் அந்த முடிவை முன்னிறுத்த மிகவும் தயங்குவார்கள். வேறு யாராவது இவர்களின் முடிவை சரி என்று வலியுறுத்தினால் மட்டுமே இவர்களால் இயங்க முடியும். ரிஸ்க் எடுப்பது புதிதில்லை என உடனடியாக முடிவெடுப்பவர்களும், பின் விளைவுகளை யோசித்து முடிவு எடுப்பவர்களும் எப்படியும் வெற்றி பெற்று விடுவார்கள்.
முடிவு தெரிந்தாலும் அடுத்தவரிடம் அந்த உரிமையை விட்டுத்தரும் மூன்றாம் நிலை மனிதர்களுக்காகவே மேற்சொன்ன மொழி பொருந்தும்.
தத்துவஞானி கூறியதுபோல் உங்களால் தகுந்த முடிவு எடுக்க முடியாது அல்லது நீங்கள் எடுக்கும் முடிவால் தவறுகள் நிகழும் என்று உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்வதை முதலில் நிறுத்த வேண்டும். எப்படி ஒரு விஷயத்தில் முடிவெடுப்பது? என்ற ஆற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டியது மிக மிக அவசியம். ஏனென்றால் முடிவெடுக்கும் திறன் இருந்தால் மட்டுமே இலக்கை நோக்கி செல்ல முடியும். முடிவெடுப்பதற்கு முன் நிறைய பேரை கலந்து ஆலோசிக்கலாம். ஆனால் இறுதி முடிவை எடுப்பது நீங்களாக மட்டுமே இருக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.
தற்போது கடைகளில் பெரிய அளவில் விற்க்கப்படும் கே எஃப் சி உணவுகள் சாண்டர்ஸின் மிக நீண்ட போராட்டத்திற்குப் பிறகு கிடைத்த வெற்றி. அதுவரை தான் கொண்ட நோக்கத்தில் மட்டுமே குறியாக இருந்து முடிவுகளை தான் மட்டுமே எடுத்து தன்னுடைய வெற்றிக்கான பாதையில் நடந்தார். நிறைய இடங்களில் முயற்சி செய்து தோற்றுப் போனவர், இறுதியில் தனது தயாரிப்பு முறையை மட்டும் தந்து அதனால் வரும் லாபத்தில் குறிப்பிட்ட சதவீதம் மட்டும் தந்தால் போதும் என்ற ஒப்பந்தத்துடன் தனது தயாரிப்பு முறையை ஒரு ரெஸ்டாரண்டுக்குத் தர அது மக்களிடம் அமோக வரவேற்பை பெற்று இன்று உலகம் முழுவதும் புகழ்பெற்று உள்ளது. லாபத்தில் குறிப்பிட்ட சதவீதம் மட்டும் தந்தால் போதும் என்று அவர் எடுத்த முடிவு அவரை மிகப்பெரிய கோடீஸ்வரராக உயர்த்தி உள்ளது.
சாண்டர்ஸ் தன்னுடைய 65 வயதில் துவங்கி கிட்டத்தட்ட 1000க்கும் மேற்பட்ட முயற்சிகளுக்குப் பிறகு வெற்றிக்கொடி நாட்டி உலகளவில் வணிகத்தில் சாதித்து தனது 90 ஆவது வயதில் மறைந்தார்.
இந்த முயற்சிகளுக்கு பின்னே இவரது கடும் உழைப்பு இருந்தாலும் தான் கொண்ட கொள்கையில் மாறாமல் தன்னுடைய தயாரிப்பு முறையை இந்த உலகம் வரவேற்கும் என்ற முடிவில் உறுதியாக அவர் நின்றதால் மட்டுமே இந்த மாபெரும் வெற்றி அவருக்கு கிடைத்ததற்கு மூலகாரணம் எனலாம்.
பிறரை சார்ந்திராமல் நமக்கான பாதை எது என்று அறிந்து அதை சார்ந்து எடுக்கும் முடிவுகளில் அசைக்க முடியாத உறுதியுடன் மூன்றாம் நிலையிலிருந்து முதல் நிலைக்கு நாமும் வருவோம்.