இந்த உலகில் உள்ள பல பேருக்கு திறமையிருந்தாலும் அதில் சிலர் மட்டுமே ஜெயிக்கிறார்கள். அது ஏன் என்று இதுவரை யோசித்ததுண்டா? அதைப்பற்றி தெளிவாக இந்தப் பதிவில் காண்போம்.
ஒரு ஊரில் இரண்டு சிற்பிகள் இருக்கிறார்கள். இரண்டு பேருக்குமே ஒரே அளவிலான திறமையுள்ளது. இரண்டு பேருமே சிற்பக்கலையில் ஆரம்ப நிலையில் உள்ளவர்கள். இவர்களுக்குள் இந்த வாக்குவாதம் ஒரு நாள் வந்தது. இந்த உலகில் பல பேர் திறமையுடன் இருந்தும் சிலரே ஜெயிக்க காரணம் என்ன? என்பதுதான் அது. இருவருமே அதற்கு வாக்குவாதம் செய்ததில் சண்டை முற்றிப் போனது.
அப்போது அந்த வழியாக வந்த முதியவர், ‘உங்களுக்குள் என்ன பிரச்னை? ஏன் இப்படி சண்டை போடுகிறீர்கள்?’ என்று கேட்டார். அதற்கு அந்த இளைஞர்களோ, ‘நாங்கள் இருவருமே திறமைசாலிகள். ஆனால், இருவரில் யார் ஜெயிப்போம் என்று தெரியவில்லை. அதுதான் சண்டையே!’ என்று அந்த முதியவரிடம் கூறுகிறார்கள்.
இதைக்கேட்ட முதியவர் சிரித்துக்கொண்டே பக்கத்திலிருக்கும் பாறையைக் காட்டி அது என்னவென்று கேட்டார்? இதைப் பார்த்த முதல் இளைஞன், ‘அதைப் பார்த்தால் தெரியலில்லையா? அது ஒரு பாறை’ என்று சொன்னான்.
இப்போது அந்த கல்லை பார்த்த இரண்டாம் இளைஞன், ‘இந்த பாறை நன்றாக உறுதியாக இருக்கிறது. இதில் ஒரு சிற்பம் செய்தால் அற்புதமாக இருக்கும்’ என்று கூறினான். ‘பாறையை பாறையாக பார்ப்பவரை விட அதில் மறைந்திருக்கும் சிற்பத்தையும் பார்ப்பவனே ஜெயிப்பான்’ என்று முதியவர் கூறினார்.
இதுவும் சரிதானே? இந்த உலகில் யாருக்கு வேண்டுமானாலும் திறமையிருக்கலாம். ஆனால், மறைந்து கிடக்கும் வாய்ப்புக்கூட யார் கண்களுக்கு தெரிகிறதோ அவர்கள்தானே ஜெயிப்பார்கள். நாமும் நம்முடைய வாழ்க்கையில் மேலோட்டமாகவே முயற்சி செய்துக்கொண்டிருந்தால், வெற்றிபெற முடியாது. நம் கண்களுக்கு தெரியாமல் மறைந்துக் கிடக்கும் வாய்ப்புகளையும் கண்டுப்பிடித்து முயற்சிக்கும்போதே வெற்றியை அடைய முடியும்.
எனவே, திறமை மட்டுமிருந்தால் போதாது. அந்த திறமையை வெளிக்காட்ட வேண்டிய வாய்ப்புகளை அடையும் விவேகமும் நம்மிடம் இருக்க வேண்டும்.