Success story 
Motivation

முதலிடம் பெற்றால் வெற்றி அடைந்ததாக அர்த்தமா?

ம.வசந்தி

வெற்றியைக் குறிக்க எப்போதுமே சிகரம் அல்லது வானம் எட்டுவது என்று பேசுகிறோம். படிக்கிறோம். எவரெஸ்ட் சிகரத்தை எட்டுவது எல்லோருக்கும் சாத்தியமல்ல. அதற்கென பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே அந்தச் சாதனையைப் புரிய முடியும். ஆனாலும் பெரும்பாலான சமயங்களில் அவன் வெற்றிச் சிகரத்தை எட்டி விட்டான், தொட்டுவிட்டான் என்றுதான் சொல்கிறோம்.

சிகரம் தொட்டால்தான் வெற்றி என்றாலோ எல்லாவற்றிலும் முதலிடம் பெற்றால்தான் வெற்றி அடைந்ததாக அர்த்தமா என்று கேட்டால் அப்படியல்ல என்றுதான் பதில் கிடைக்கும். முதலிடம் என்பது ஒரு சாதனைதானே தவிர, அதுதான் வெற்றி என்ற எண்ணத்தை இளைஞர்கள் வளர்த்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

ஒரு துறையில் 90 சதவிதம் பெற்றாலே வெற்றி, மற்றொரு துறையில் 85 சதவீதம் பெற்றாலே வெற்றி என்று துறைக்குத் துறை வெற்றியின் மதிப்பு மாறுபடுகிறது.

ஒலிம்பிக் போட்டிகளில் நமது வீரர்கள் வெண்கலப் பதக்கத்தை வென்றாலே, அது பெரிய சாதனையாகக் கருதப்படுகிறதல்லவா அது போலத்தான், நமது வெற்றிகளும்.

ஒரு அமெரிக்க நகைச்சுவை எழுத்தாளர் இப்படிக் கூறினார்:

எலி பந்தயத்தில் கலந்து கொள்வதிலும் ஒரு பிரச்னை இருக்கிறது. வெற்றி பெற்றாலும் எலியாகத்தான் இருக்க வேண்டும்.

கல்லூரிப் படிப்பில் முதலிடம் பெற்று பதக்கங்கள் வென்ற மாணவர்களுக்கு இணையாக சராசரியாகப் படித்த மாணவரும் வாழ்க்கையில் முன்னேற்றம் காண்கின்றனர்  இதற்கு எல்லாத் துறைகளிலும் பல உதாரண புருஷர்கள் இருப்பார்கள்.

தேர்வில் வென்ற பிறகு மதிப்பெண்களை மறந்து விட வேண்டும். பெற்ற கல்வியை மட்டும் மறக்கமால் இதயத்தில் நிறுத்தி வைத்திருக்க வேண்டும். தொடர்ந்து படிக்க வேண்டும். பெற்ற பட்டத்துக்கான தகுதிகளை மேலும் வளர்த்துக்கொள்ள முயற்சிக்க வேண்டும்.

முதலிடம் கிடைக்கவில்லையே என்று ஏங்கிக் கலங்குவதை முதலில் நிறுத்த வேண்டும். தன்னம்பிக்கையை கைவிடாமல் மேலும் மேலும் முயற்சித்தால் உங்கள் திறமைகளை மேலும் உயர்த்திக்கொள்ள முடியும்.

வாழ்க்கைப் பாதையில், சராசரியாக வெற்றி பெற்றவர்களுக்கும் பல வாய்ப்புகள் காத்துக் கிடக்கின்றன. தங்களுடைய திறமைக்கேற்ற வாய்ப்புகளை கைப்பற்றிக் கொண்டு, அதிலே சாதனை பெற முயற்சி செய்பவர்கள் புதிய புதிய உச்சங்களைத் தொடமுடியும்.

மேலும், அடுத்திருப்பவரை தோற்கடிக்காமல் பெரும் வெற்றிதான் உண்மையான வெற்றி என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

நல்ல புரிதலும், ஆர்வமும் இருந்தால் போதும், உங்களுடைய வெற்றி உறுதியாகிவிடும். உங்கள் முடிவுகளை நீங்களே தீர்மானிப்பதுதான் நிலையான வெற்றி. இதில் முதலிடம் மூன்றாவது இடம் என்றெல்லாம் ஒன்றும் கிடையாது. எந்தச்செயல் உங்களுக்குத் தன்னம்பிக்கையை அளிக்கிறதோ அதுதான் வெற்றி!

யாரெல்லாம் பற்களுக்கு க்ளிப் பயன்படுத்த வேண்டும் தெரியுமா?

தாழ்வு மனப்பான்மையை தூக்கிப் போடுங்கள்!

உங்களுக்கு கிவி பழம் பிடிக்குமா? அட, இத தெரிஞ்சுக்கிட்டு சாப்பிடுங்கப்பா! 

அந்த ஒரு வார்த்தைதான் 728 படங்கள் நடித்ததற்கு காரணம் - நடிகர் குமரிமுத்து வாழ்க்கையை திருப்பிப்போட்ட சம்பவம்!

முதலில் கற்றுக் கொள்வோம் பின்பு பெற்றுக் கொள்வோம்!

SCROLL FOR NEXT