கழுத்தை நெரிக்கும் காலக்கெடு மற்றும் தனிப்பட்ட லட்சியங்கள் என்று இந்த பரபரப்பு நிறைந்த உலகில் மக்கள் தங்களை பற்றி யோசிப்பதற்கே நேர பற்றாக்குறை ஏற்படுகிறது. இதில் போற போக்கில் மற்றவர்களுக்கு உதவி செய்ய முன்வருவது என்பது அரிதிலும் அரிது. அப்படி செய்யும் உதவியிலும் நாம் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி செய்கிறோமா இல்லையா, செய்தால் என்னென்ன நன்மைகளை பெறுகிறோம் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
1. பொதுநலப் பண்பு (The Joy of Altruism)
பசியுடன் இருக்கும் ஒரு அந்நியருக்கு நீங்கள் சூடான உணவை வழங்கும்போது அதை கையில் வாங்கியதும் ஒரு புன்னகை கலந்த நன்றியுணர்வு அவர்களின் முகத்தில் வெளிப்படுவதை உங்களால் காண முடியும். எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி தன்னலமற்ற இந்த செயலால் ஒரு தனித்துவமான மகிழ்ச்சியை நம்மால் அனுபவிக்க முடியும். இதை அறிவியல் ரீதியில் பார்த்தால், நாம் ஒரு கருணை செயலில் ஈடுபடும்போது வெளிப்படும் மகிழ்ச்சி நமது மூளையில் டோபமைன் மற்றும் எண்டோர்பின்களை (dopamine and endorphins) வெளியிடுகின்றன என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது!
2. ஒரு ஆரோக்கியத்தை உணர்வீர்கள்
நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும், மற்றவர்களுக்கு எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி உதவுவது உங்கள் உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். குறைந்த இரத்த அழுத்தம், குறைக்கப்பட்ட மன அழுத்தம் மற்றும் நீண்ட ஆயுட்காலம் என்று உங்கள் வாழ்வில் பல சலுகைகளை பெறுவீர்கள். அதனால் நீங்கள் எதையும் எதிர்பார்க்காமல் உதவும் போது, உங்களை அறியாமல் உங்கள் உடல் மேம்பட்ட ஆரோக்கியத்தைப் பெறுகிறது.
3. பிணைப்புகளை வலுப்படுத்துதல் (Strong Bonding)
நண்பர்கள் மற்றும் சொந்த பந்தங்களுடன் நெருங்கி பழகும் நாம், அவர்களுடன் இருக்கும் தொடர்பை இன்னும் வலுவாக்க, அந்த நட்பை உரையாடலுக்காக மட்டும் வைத்துக் கொள்ளாமல், உதவி தேவைப்படும் நேரத்தில் அதற்கு நேரம் ஒதுக்கி நண்பருக்கு உதவி செய்தாலே, உங்கள் இருவருக்கும் இடையில் இருக்கும் பிணைப்பில் ஒரு உண்மையான உயிரோட்டம் இருக்கும்.
4. எதிர்காலத்தின் விதை
தன்னலமற்ற எண்ணத்துடன் தாங்கள் செய்யும் பண உதவியை எதிர்கால மனிதகுலத்தின் முதலீடாகக் கருதுங்கள். இன்று நீங்கள் ஒருவருக்கு உதவி செய்தால், அது ஒரு எதிர்கால முதலீடு போன்றது. உங்களின் உதவும் குணம் காலப்போக்கில் அனைவரிடம் எதிரொலித்து, மற்றவர்களையும் அவ்வாறு செய்ய தூண்டுகிறது. அதாவது உங்களின் பெருந்தன்மை தொற்றாகி, காட்டுத்தீ போல் பரவும்.
எனவே, நற்பண்புகளை நாம் வெளிப்படுத்தி, நல்ல செயல்களில் மற்றவர்களையும் சேர்த்து கொண்டு, அனைவரிடமும் பரப்புவோம். நம் இதயங்கள் துடித்து கொண்டிருக்கும் வரை அனைவரின் இதயத்திலும் உதவி மனப்பான்மையை விதைக்க முயற்சி செய்வோம்.
நினைவில் கொள்ளுங்கள், மனிதனாய் பிறந்து நமக்காகவும் நம்மை சார்ந்தவர்க்காகவும் வாழ்ந்தோம் போனோம் என்பதை விட, நாம் வெளிப்படுத்திய தன்னலமற்ற நற்பண்புகளின் தாக்கங்களே நம்மை ஒரு நல்ல மனிதனாய் அனைவரிடமும் சுட்டிக்காட்டும்.