ஈர்ப்பு விதி என்பது மக்கள் மத்தியில் இருக்கும் ஒரு பிரபலமான நம்பிக்கை. இது நம் எண்ணங்கள் மற்றும் உணர்வுகளை வாழ்க்கையின் உண்மை நிகழ்வுகளாக மாற்றுகிறது என நம்பப்படுகிறது. நேர்மறையான எண்ணங்களில் கவனம் செலுத்துவதன் மூலம் நாம் நம் ஆசைகளை நனவாக்கி சிறந்த வாழ்க்கையை உருவாக்கிக்கொள்ள முடியும் என்கிறது ஈர்ப்பு விதி.
ஈர்ப்பு விதியை பயிற்சி செய்வது எப்படி என்பது பற்றி பல வித்தியாசமான கருத்துக்கள் இருக்கிறது. இந்தப் பதிவில் ஈர்ப்பு விதியின் அடிப்படை கருத்துகளை புரிந்துகொண்டு அதை வாழ்க்கையில் பயன்படுத்துவதற்கான எளிய வழிமுறைகளைப் பார்க்கலாம்.
ஈர்ப்பு விதியின் அடிப்படை கருத்துக்கள்:
நாம் அனைவருமே ஆற்றல் கொண்டவர்கள். நமது எண்ணங்களும் உணர்வுகளும் நமது ஆற்றல்களை வடிவமைக்கின்றன.
நாம் எதில் அதிகம் கவனம் செலுத்துகிறோமோ அதை நாம் ஈர்க்கிறோம். நாம் நேர்மறையான விஷயங்களில் கவனம் செலுத்தும் போது வாழ்க்கையில் நேர்மறையான விஷயங்கள் நடக்கும்.
நாம் எதை நம்புகிறோமோ அதுவே உண்மையாகிறது. நாம் ஒரு விஷயத்தை முழுமையாக நம்பும்போது அது நனவாகும் வாய்ப்புகள் அதிகம்.
ஈர்ப்பு விதியை பயிற்சி செய்வதற்கான வழிமுறைகள்:
முதலில் நீங்கள் என்ன சாதிக்க விரும்புகிறீர்கள் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். உங்களுடைய இலக்கு என்ன என்பதை எழுதி வைத்து செயல்படுத்த முயலுங்கள்.
எதிர்மறையான எண்ணங்களைத் தவிர்த்து நேர்மறையான எண்ணங்களில் கவனம் செலுத்தவும். குறிப்பாக உங்களுக்கு இப்போது கிடைத்துள்ள விஷயங்களுக்கு நன்றியுடன் இருங்கள். நன்றியுணர்வு உங்கள் மனநிலையை மேம்படுத்தி வாழ்க்கையில் மேலும் நல்ல விஷயங்களை ஈர்க்கும்.
ஒருவேளை நீங்கள் உங்களது இலக்குகளை அடைந்தால் எப்படி இருக்கும் என கற்பனை செய்து பாருங்கள். இது உங்கள் இலக்குகளை அடைந்ததற்கான உணர்வைக் கொடுத்து, அதிக உந்துதலுடன் செயல்பட உதவும். நீங்கள் உங்களது இலக்குகளை கட்டாயம் அடைவீர்கள் என்று உறுதியாக நம்புங்கள். அந்த நம்பிக்கையுடன் இலக்குகளை அடைய நடவடிக்கை எடுங்கள்.
இலக்கை அடைவதற்கு அதிக கவனம் செலுத்தும் அதே வேளையில், ஒருவேளை அதை அடையவில்லை என்றால் அதிகமாக கவலைப்பட வேண்டாம். ஈர்ப்பு விதி என்பது உடனடியாக வேலை செய்யாது. பொறுமையாக இருந்து விடாமுயற்சியுடன் செயல்பட்டால் நிச்சயம் அதற்கான பலனை நீங்கள் அடைய முடியும்.
ஈர்ப்பு விதி என்பது ஒரு சக்திவாய்ந்த கருவி. இது உங்கள் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களைக் கொண்டு வர உதவும். எனவே ஈர்ப்பு விதியின் அடிப்படை கருத்துகளைப் புரிந்துகொண்டு அதை உங்கள் வாழ்க்கையில் பயன்படுத்தி வெற்றியாளராக மாறுங்கள்.