மனதை அலைபாயவிட்டாள் நம்மால் எந்த ஒரு காரியத்தையும் வெற்றிகரமாக செய்து முடிக்க முடியாது. முதலில் நம் எண்ணங்கள் பாசிட்டிவாக இருக்கவேண்டும் அப்படி இருந்தால் நமக்கு எல்லாமே சக்சஸ்தான்.
எண்ணங்களின் குவியலே மனம். வலிமையாகச் சிந்திக்கும்போதுதான் மனம் வலிமை பெறுகிறது என்பது பொதுவான எண்ணம்.
ஆனால் எண்ணங்களிலிருந்து விடுதலைப்பட்ட மனமே வலிமையானது.
மனம் அலைபாயும்போது, சக்தி எண்ணத்தினால் சிதறிப்போய் பலவீனமடைகிறது. மனம் ஒரே எண்ணத்தோடு இருக்கும் போது சக்தி சேமிக்கப்படுகிறது, மனம் வலிமை பெறுகிறது.ஆனால்,இரு மனதோடு அலை பாய்ந்துக் கொண்டு இருப்பவர்களால் எந்த செயலிலும் வெற்றியைத் தொடக்கூட முடியாது.
தன் 24 வது வயதில் பாரசீகத்தின் மீது போர் தொடுக்கிறான் அலெக்சாண்டர். படை மரக்கலங்களில் போய் இறங்கி ஒரு மலை மீது முகாமிட்டிருக்கிறது. அன்றிரவு கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவர்களுடைய மரக்கலங்கள் அனைத்தும் தீப்பற்றி எரிகின்றன.
வீரன் ஒருவன் ஓடி வந்து அரசே நம் மரக்கலங்கள் அனைத்தும் தீப்பற்றி எரிகின்றன என்று பதற்றத்தோடு சொல்கிறான். படையே பதறுகிறது. அலெக்சாண்டரிடம் எந்தச் சலனமும் இல்லை. வீரன் திரும்பக் கேட்கிறான் என்ன அரசே மரக்கலங்கள் எரிகின்றன என்கிறேன் நீங்கள் ஒன்றும் சொல்லாமல் இருக்கிறீர்களே என்கிறான்.
அப்போது அலெக்சாண்டர் வீரர்களை நோக்கிச் சொல்கிறான்,
''நான்தான் மரக்கலங்களை எரிக்கச் சொன்னேன்.''
வீரர்கள் அனைவரும் வியப்போடு பார்க்கிறார்கள்.
அலெக்சாண்டர் தொடர்கிறான்...
வீரர்களே, ''இந்த மரக்கலங்களைக் காணும்போது எல்லாம் உங்களுக்கு எப்போது ஊருக்குப் போவோம் என்கிற எண்ணம் வரும். அதனால் நீங்கள் இருமனதோடு போர் செய்வீர்கள்.
இருமனதோடு போர் புரிந்தால் வெற்றிபெற முடியாது.
அதனால்தான் மரக்கலங்களை எரிக்கச் சொன்னேன். இப்போது உங்களுக்கு ஒரே வாய்ப்புதான் வெற்றி அல்லது வீர மரணம்.
எது வேண்டுமோ நீங்களே தேர்ந்து எடுத்துக் கொள்ளுங்கள் என்றான். ஒரே மனதோடு, தீர்க்கமான முடிவோடு களம் இறங்கிப் போராடுபவர்கள்தான் வெற்றி என்னும் கனியை ருசிக்க முடியும்.