Motivation article Image credit - pixabay
Motivation

நிகழ்காலத்திலேயே இருந்தால் மகிழ்ச்சி நிலைக்கும்!

இந்திரா கோபாலன்

நம் மகிழ்ச்சிக்கும் தடையாக இருப்பது கடந்தகாலம் பற்றிய சிந்தனைதான். அவற்றை மூட்டையாய் முதுகில் சுமந்து இம்சைக்கு ஆளாகிறோம். மனிதன் மகிழ்ச்சியுடன் வாழ மறதியை இயற்கை நமக்கு வரமாக அளித்திருக்கிறது. நாம் நம்மைச் சுற்றி உள்ளவர்களிடம் ஏற்படுத்திக் கொள்ளும் இணக்கமே நம் மகிழ்ச்சியை மெருகேற்றும். வன்மம் நிறைந்த மனதுடன் இருப்பவர்கள்  மாநகராட்சி குப்பைகளை கொட்டும் இடத்தில்  இருப்பதை போன்ற  நிலையில் இருப்பார்கள்‌.

நம் உலகமே சுருங்கிவிட்ட நிலையில் கடந்த காலத்தை ஊதி பெரிதாக்கி தவிக்கிற மனநிலையில் ஆனந்தமாக ஓடிவரும் குழந்தையை அணைக்க கூட முடிவதில்லை.

மன்னர் ஒருவரின் அரண்மனை ஒட்டி ஒரு பிச்சைக்காரன்  வாழ்ந்து வந்தான். அரண்மனை கதவில் மன்னன் ஒரு விருந்து அளிக்கப் போவதாக அறிவிப்பை பார்த்தான். அதில் யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம் என்ற நிபந்தனை இருந்தது. தன் கந்தல் ஆடைகளை பிச்சைக்காரன் பார்த்தான்.  திடீரென ஒரு எண்ணம் உதயமானது.  காவலரிடம்  ராஜாவைப் பார்க்க வேண்டும் என்றான். அனுமதி கிடைத்ததும் உள்ளே சென்றான்.

எதற்காக என்ன பார்க்க வந்தாய்  என்று அரசர் கேட்டதற்கு,

"நீங்கள் அளிக்கும் விருந்தில் கலந்து கொள்ள என்னிடம் நல்ல உடைகள் இல்லை. உங்கள் பழைய உடை தந்தால் அணிந்து விருந்துக்கு வருவேன்" என்றான். உள்ளுக்குள் அவனுக்கு நடுக்கம். ஆனால் ராஜாவோ புதிய உடை தந்து அணியச்செய்தார்.

மேலும் இந்த உடையை நீ வாழ்நாள் முழுவதும் அணியலாம். துவைக்கவோ தூய்மைபடுத்தவோ தேவையில்லை என்றார்.

பிச்சைக்காரன் நன்றி தெரிவித்து கிளம்பும்போது தன் பழைய ஆடைகள் மூலையில் இருந்ததைப் பார்த்து ஒருவேளை இந்த புதிய உடை கிழிந்தால் வேண்டியிருக்கும்  என அதையும் சுமந்தான். அதை எங்கேயும் வைக்க முடியவில்லை. மன்னர் அளித்த விருந்தில் ருசியாக சாப்பிட முடியவில்லை. அவனுடைய பழைய துணியின் மீதே கவனம் இருந்ததது. அதை சுமந்தே அலைந்தான். அரசர் சொன்னமாதிரி அவர் கொடுத்த உடை அழுக்காகவோ கசங்கவோ கிழியவோ இல்லை. ஆனாலும் பழைய துணி மீது பிடிப்பு அதிகமானது. இவனை எல்லோரும் கந்தல் பொதி கிழவன் என்றே அழைத்தார்கள். இறக்கும் தருவாயில்  அவனை பார்க்க அரசர் வந்தார்.  கந்தல் மூட்டையைப் பார்த்து சோகமானார்.

அரசர் சொன்னது பிச்சைக்காரனுக்கு நினைவு வந்தது.  அந்த பழைய மூட்டை அவனுடைய வாள்நாளின் மொத்த மகிழ்ச்சியையுமே பறித்துவிட்டது. அந்த யாசகன் மட்டுமல்ல, நம் எல்லோரிடமும் அப்படியொரு மூட்டை கோபம் கவலை சோகம் பகைமை  என பல பெயர்களில் இருக்கிறது. அவற்றைப் பாதுகாப்பதில் வீசுகின்ற மகிழ்ச்சித் தென்றலை நாம் நுகர முடியாமல் இருக்கிறோம்.

அரண்மனைகளில் கூட இன்றும் பலர் பிச்சைக்காரர்களாகவே வாழ்கிறார்கள்.  அநாதை ஆசிரமங்களில் சிலர் அரசர்களாக வாழ்கிறார்கள். வீணான கடந்த காலத்தை அசை போடுவதால்  நிகழ்காலத்தின் நிமிடங்களும் களவாடப்படுகின்றன. கண்ணீரில் மூழ்கியவர்களை கரை சேர்க்க எந்த கப்பலும் உருவாகவில்லை. மரம் துளிர் விடும்போது சருகுகளை உதிர்த்து விடத் தயாராக இருப்பதால், பசுமையைப் பொன்னாடையாகப் போர்த்தி  மகிழ்ச்சிக்காற்றை விசிறி விடுகிறது.  இயற்கை எப்போதும்   நிகழ்காலத்திலேயே இருக்கிறது. அதேபோன்று நாமும் இருந்தால் மகிழ்ச்சி நிலைக்கும்.

மணக்கும் சுக்குட்டிக் கீரை மசியலும் புடலங்காய் பொரியலும்!

உங்கள் வீட்டு நாய் ஆரோக்கியமாக இருக்க என்னென்ன உணவுகள் கொடுக்கலாம்? கால்நடை மருத்துவர் டாக்டர். பிரியா விளக்கம்!

சிறுநீரகக் கல் இவ்வளவு ஆபத்தானதா? அச்சச்சோ! 

குளிர் காலத்துக்கு ஏற்ற ஆரோக்கியமான மொறு மொறு பக்கோடா வகைகள்!

சின்ன விஷயங்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தின் அவசியம் தெரியுமா?

SCROLL FOR NEXT