motivation article Image credit - pxiabay
Motivation

தவறுதலாக செயலாற்றுவதை விட, செயலாற்றாமல் இருப்பது மோசமானது!

ம.வசந்தி

வறுதலாக செயல்களை செய்து கொண்டே இருப்பதை விட செயலினை செய்யாமல் இருப்பதே மேலானது என்று பலர் கூறுவதை கேட்டிருக்கின்றோம். முடிவுகள் எடுப்பதை தள்ளிப் போடுவதையும் பார்த்திருக்கின்றோம். இத்தகைய மனப்பான்மை உடையவர்கள் இடர்களை கண்டு அஞ்சுகின்றனர். தோல்விகளை எதிர்கொள்ள தயங்குகின்றனர். தங்களின் திறன்கள் மீது நம்பிக்கை இல்லாமலேயே காலத்தை கடத்துகின்றனர். சிறந்த குழு அங்கத்தினர்களாக இருக்க முடியாது. வெற்றி கிடைப்பதை விரும்புவதை விடவும் தோல்வியை தவிர்க்கவே இவர்கள் விரும்புவதால், இவர்களால் கடின செயல்களைச் செய்ய முடிவதில்லை. பெருவெற்றிகளும் இவர்களிடம் வந்து சேர்வதில்லை.

ஆக்கபூர்வமானவர்கள் தோல்விகளை கண்டு அஞ்சி செயல்படாமல் இருப்பதில்லை. தம்முடைய பல கண்டுபிடிப்புகளால் நிலையான பெயர் ஈட்டி உள்ள தாமஸ் ஆல்வா எடிசன் தன்னுடைய ஒவ்வொரு கண்டுபிடிப்பிற்கு பின்னும் நூற்றுக்கணக்கான தோல்விகள் இருந்ததை தெளிவுபடுத்தியுள்ளார். தோல்விகளை கண்டு மனம் கலங்கி செயல் புரியாமல் அவர் இருந்திருந்தால் அவரது கண்டுபிடிப்புகள் வெளிவராமலேயே இருந்திருக்கும். ஆக்கபூர்வ மானவர்களே அதிக தோல்விகளையும் சந்திக்கின்றனர். இதனால் தவறுதலாக செயல்களை செய்வதை விடவும் எந்த முயற்சியும் எடுக்காது செயல்படாமல் ஒதுங்கி இருப்பது மோசமானது.

செயலாற்றாமல் இருப்பது வளர்ச்சியின் பாதையை மூடிவிடும். புது புது திறன்களைப் பெற்று முன் செல்வதை தடுத்துவிடும். மற்றவர்கள் முன் செல்லும்போது செயலாற்றாது இருப்பவர்கள் பின் தங்கி விடுகின்றனர். மிக வேகமாக மாறிக்கொண்டே இருக்கும் இன்றைய உலகில் வெற்றியையும் தோல்வியையும் தீர்மானிப்பது நம் செயல் திறனே. செயலாற்றாது இருக்கும்போது செயல்திறன் என்ன என்று கூட தெரியாது இருந்து விடுகிறோம். இது நம் திறன்களின் கூர்மைக் குன்ற காரணமாவதுடன் புது திறன்களும், புது திட்டங்களும், புது முயற்சிகளும் நம் செயல்பாட்டில் வராமல் தடுத்து விடும்.

செயலாற்றும்போது புதிய சக்தி பிறக்கிறது. இந்த சக்தி இன்னும் பல செயல்கள் தொடர காரணமாக மாறுகிறது. ஒன்றும் செய்யாது இருப்பவர்கள் தங்களின் செயல் வல்லமையை உணராது இருக்கின்றனர். அதிக வேலை செய்வது சோர்வையும் மன அழுத்தத்தையும் தரலாம். அதே நேரத்தில் அந்த வேலையில் முன்னேற்றம் ஏற்படுகிறது. அடுத்த நாள் வேலையை துவங்கும்போது ஒரு முன்னேற்ற படியிலேயே துவங்குவீர்கள். வேலையை செய்யாது, செயல்படாது இருக்கும்போது மனஅழுத்தம் ஏற்படுகிறது. இந்த அழுத்தம் மோசமானது. காரணம் நிலையில் முன்னேறாமலேயே மன அழுத்தத்தை அனுபவிப்பீர்கள்.

நேர்மறையாக செயலாற்றும்போது நம் முடிவுகளுக்கு நாம் பொறுப்பு எடுக்கின்றோம். நம் பிரச்னைகளுக்கு தீர்வு காண முயற்சி செய்கின்றோம். நம் நாட்கள் வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கும். நம்ம மீதான தன்னம்பிக்கையும் துணிவும் வளர காரணமாக இருக்கும். கடின செயல்களை செய்யும்போது கடின முடிவுகளை எடுக்கும் போதும் நேர்மறையாக செயலாற்றுவது எளிதானதல்ல. ஆனால் செயல்படாமல் இருப்பது இன்னும் மோசமானது. செயல்படாதபோது கடின காரியங்களில் வீரியம் இன்னும் பெரிதாகும். நம் செயலாற்றாமைக்கு காரணம் கண்டுபிடிக்கும் முயற்சியிலேயே நேரம் செலவிட துவங்குகிறோம். இது முற்றிலும் தவிர்க்க கூடியது தவிர்க்கப்பட வேண்டியதும் கூட.

எல்லா கோணங்களில் இருந்தும் ஆராய்ந்து திட்டமிட்டு துணியுடன் செயலாற்றுவதை பழக்கமாக்குங்கள் வெற்றியாளராக வலம் வருவீர்கள்.

குளிர்கால சரும பராமரிப்பு - 5 பொருட்கள் போதுமே!

டென்னிஸ் உலகை ஆண்ட ரபேல் நடாலின் வெற்றிக் கதை!

செல்லப்பிராணி வளர்ப்பு முறையும் மழைக்கால பராமரிப்பு மற்றும் நன்மைகள்!

Book Review - The Thirteenth Child - by Erin A. Craig (2024)

சென்னையில் அதிகரித்து வரும் காற்று மாசு!

SCROLL FOR NEXT