பயம் என்று தனியாக எதுவும் இல்லை. இது ஒரு உணர்ச்சியே பல சமயங்களில் அப்படி ஏதேனும் நடந்துவிட்டால், என்று நாமாக கற்பனை செய்து கொண்டு அச்சப்படுகிறோம். நாம் அச்சப்படுவதாலேயே எதிர் சக்திகளுக்கு தைரியம் வந்து விடுகிறது. எனவே பயந்தாங்கொள்ளிகளைக் கண்டு அதைவிட பயந்தாங்கொள்ளி அச்சப்பட்டால் முதல் பயந்தாங்கொள்ளியும் வீரனாகி விடுவான்.
எவ்வளவு இடையூறுகள் தோன்றினாலும் நாம் எடுத்துக் கொண்ட முயற்சியை இடையில் நிறுத்தி விடாமல் தொடர்ந்து செய்து வெற்றி காண்பதைத்தான் நாம் "துணிச்சல்" "தைரியம்" என்றெல்லாம் குறிப்பிடுகிறோம்.
பயத்தை வெல்வதற்கு நீங்கள் எந்த காரியத்தை செய்ய பயப்படுகிறீர்களோ, அந்த காரியத்தை செய்ய ஆரம்பிக்க வேண்டும். உதாரணமாக நீங்கள் சிறந்த பேச்சாளராக உருவாக ஆசைப்படுகிறீர்களா? தைரியத்தை வரவழைத்துக் கொண்டு நன்கு தயார்படுத்திக் கொண்டு, பேச ஆரம்பியுங்கள். ஆரம்பத்தில் உங்களுக்கு நடுக்கம் ஏற்படக்கூடும். உங்கள் தடுமாற்றத்தை கண்டு மற்றவர்கள் கேலியாகச் சிரிக்கலாம்.
ஆனால் முயற்சியை கை விட்டு விடாதீர்கள். தொடர்ந்து பேச முயற்சி செய்யுங்கள். பல கூட்டங்களில் இப்படி தொடர்ந்து பேசி வரும்போது உங்கள் கருத்துக்களை சிறந்த முறையில் சுலபமாக எடுத்துச் சொல்லும் திறமை உங்களுக்கு கிடைத்து விட்டிருப்பதை நன்கு உணர்வீர்கள்.
பேசத் தொடங்கும் முன் உங்களிடம் இருந்த பயம் உங்களை விட்டுச் சென்று விட்டதையும் நீங்கள் காண்பீர்கள். இப்படி நீங்கள் பயப்படும் எந்த காரியத்தையும் வலுக்கட்டாயமாக தொடர்ந்து செய்து வந்தால் பயப்படும் குணம் உங்களை விட்டு அகன்று சென்று விடுவதை நீங்கள் காணலாம்.
நேர்முகத் தேர்வுக்கு சென்று அலுத்துவிட்ட ஒரு இளைஞன் அடுத்த நேர்காணலுக்கு செல்லப் போவதில்லை என்பதை தனது தந்தையிடம் சொல்லிக் கொண்டிருந்தான். அப்போது அவர் "இப்போதும் நீ எந்த வேலையிலும் இல்லை. உன்னிடம் இருக்கும் எதையும் நீ இழக்கப் போவதில்லை. உன்னிடம் இருப்பதை யாரோ பறித்துவிடப் போவதைப் போன்று ஏன் நீ பயப்பட வேண்டும். நடுங்க வேண்டும். தைரியமாக உன்னிடம் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லிவிட்டு வா!" என்றார் அவனது தந்தை.
தேர்வுக்கு போனான். அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு துணிச்சலாக பதில் சொன்னான். அதிகாரிகளுடன் சேர்ந்து சிரித்தான். நடுக்கம், பயம் எதுவும் அவனிடத்தில் இல்லை. அவனுக்கு அந்த வேலை கிடைத்துவிட்டது. சில நிமிடங்கள் தைரியமாக நடந்து கொண்டதற்கே இவ்வளவு பெரிய பலம் கிடைத்தால் வாழ்நாள் முழுவதும் சற்றும் பயமில்லாமல் செயல்படுபவன் எவ்வளவு பெறுவான் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.