The Locus Rule
The Locus Rule 
Motivation

The Locus Rule: இதை உணர்ந்தால் எதையும் சாதிக்கலாம்!

கிரி கணபதி

மனித வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு என்ன தேவை? திறமை? அதிர்ஷ்டம்? இந்தக் கேள்விக்கான பதில் சிக்கலானது என்றாலும், கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஒரு சுவாரசியமான ஆய்வு நம் கட்டுப்பாட்டு உணர்வு (Locus Of Control) எவ்வாறு நமது வெற்றியை பாதிக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது. 

கடின உழைப்பின் மூலம் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை எவ்வளவு முக்கியமானது என்பதை புரிந்து கொள்ள, 1998 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வைப் பற்றி பார்ப்போம். இந்த ஆய்வில் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்களிடம் பல்வேறு சவாலான புதிர்கள் தனித்தனியே தீர்க்கச் சொல்லப்பட்டது. அதில் கலந்து கொண்ட எல்லா மாணவர்களிடமும் அவர்கள் சிறப்பாக செயல்படுவதாகவும் மற்ற மாணவர்களை விட சிறந்து விளங்குவதாகவும் கூறினர். 

பின்னர் அந்த மாணவர்களில் பாதி பேரிடம் அவர்கள் சிறப்பாக செயல்பட்டதற்கான காரணம் அவர்களின் கடின உழைப்பு என்று கூறப்பட்டது. மீதி பேரிடம் அவர்கள் அறிவாற்றல் மிக்கவர்கள் மற்றும் திறமைசாலிகள் என்பதால் சிறப்பாக செயல்பட்டதாகக் கூறப்பட்டது. 

இப்படி சொன்ன பிறகு இரண்டு பிரிவு மாணவர்களுக்கும் மூன்று வகையான புதிர்கள் வழங்கப்பட்டன. அந்த புதிர்கள் எளிதான, நடுத்தர சிரமம் மற்றும் மிகச் சவாலானது என மூன்று விதங்களில் இருந்தது. இறுதியில் இந்த ஆய்வில் கிடைத்த முடிவுகள் மிகவும் சுவாரசியமாக இருந்தன. 

திறமைசாலிகள் என்று பாராட்டப்பட்ட குழந்தைகள் மிகவும் எளிதான புதிர்களை தீர்ப்பதற்காகவே நேரத்தை செலவிட்டனர். மிகவும் சவாலான புதிர்களை தீர்க்க அவர்கள் விருப்பம் காட்டவில்லை. புதிர்களை தீர்ப்பதற்கு குறைந்த நேரத்தையே செலவிட்டனர். இவர்களிடம் உந்துதல் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது. 

அதற்கு மாறாக கடின உழைப்பால் சாதித்ததாக கூறப்பட்ட குழந்தைகள் தொடக்கம் முதலே கடினமான புதிர்களில் அதிக கவனம் செலுத்தினர். புதிர்களை தீர்ப்பதற்கு அதிக நேரத்தையும் எடுத்துக் கொண்டனர். உங்களிடம் உந்துதல் அதிகமாக இருந்ததை ஆய்வாளர்கள் கண்காணித்தனர். 

இந்த ஆய்வு நமக்கு என்ன சொல்லித் தருகிறது என்றால், Locus Of Control எனப்படும் கட்டுப்பாட்டு உணர்வின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறது. அதாவது நமது வாழ்க்கையில் நமக்கு என்ன நடக்கிறது என்பதில் நாம் எந்த அளவுக்கு கட்டுப்பாட்டில் இருக்கிறோம் என்கிற உணர்வை இது குறிக்கிறது. 

திறமைசாலிகள் என்று பாராட்டப்பட்ட குழந்தைகள் வெளிப்புற கட்டுப்பாட்டு உணர்வு கொண்டிருந்தனர். தங்களது வெற்றிக்கு அவர்களால் கட்டுப்படுத்த முடியாத காரணியான அறிவாற்றலை அவர்கள் நம்பினார்கள். மறுபுறம் கடின உழைப்பாளிகள் என்று பாராட்டப்பட்ட குழந்தைகள், உள்புற கட்டுப்பாடு உணர்வு கொண்டிருந்தனர். தங்களது வெற்றிக்கு தங்களால் கட்டுப்படுத்த முடிந்த கடின உழைப்பே காரணம் என்பதை அவர்கள் நம்பினார்கள். எனவே கடினமாக உழைத்தால் மட்டுமே நம்மால் வெற்றிபெற முடியும் என்ற தெளிவு அவர்களிடம் இருந்தது. 

இதன் மூலமாக நமது கட்டுப்பாட்டில் இல்லாத அறிவாற்றலை நம்பி வெற்றி பெற முயலாமல், நம்மால் கட்டுப்படுத்த முடிந்த கடின உழைப்பில் நம்பிக்கை வைத்து செயல்பட்டால், யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம் என்பதை இந்த ஆய்வு நமக்கு வெட்ட வெளிச்சம் போட்டு காட்டுகிறது.  

உணவுடன் லெமன் ஜூஸ் மற்றும் கருப்பு மிளகுத் தூள் சேர்த்து உண்பதின் ரகசியம் தெரியுமா?

இந்தியப் பெருங்கடலும், ராஜேந்திர சோழனின் கடற்படையும்: ஒரு அலசல்!

உயிர் பெற்று எழுந்து பிரசாதத்தை உண்ட கல் நந்தி!

அதிகம் பேசுவதை விட, காது கொடுத்துக் கேட்பது சிறந்தது!

Burnt Out Symptoms: இது சோம்பேறித்தனத்திற்கும் மேல! 

SCROLL FOR NEXT