motivational article! Image credit - pixabay
Motivation

இளைஞர்களை நேசிப்பதை காட்டிலும் இளமையை நேசிப்பவர்களே அதிகம்!

ம.வசந்தி

'முதுமை' என்பதும் ' முதிர்ச்சி' என்பதையும் முதலில் சரிவர புரிந்துகொண்டால் இளமை என்பதை சரிவரப் புரிந்துகொள்ள இயலும், முதுமை அடைந்தவர்கள் எல்லாரும் முதிர்ச்சி அடைந்தவர்கள் என்று சொல்ல முடியாது.

முதுமை உடலோடு தொடர்புடையது. முதிர்ச்சி மனத்தோடு தொடர்புடையது. யார் தன்னுடைய வயதுக்கேற்ற முதிர்ச்சியோடு வாழ்கிறார்களோ அவர்கள்தான் இளமையுடன் இருப்பவர்கள். இளமை என்பது புத்துணர்ச்சியுடன் திகழ்வது.

புதியன நிகழ்த்தும் உந்து சக்தியுடன் இருப்பது, அயர்ச்சியடையா உள்ளத்துடன் வாழ்வது - பிரபஞ்சத்தைப் பார்க்கும்போதெல்லாம் தானும் புதிதாகப் பிறந்தது போலக் கருதிக்கொள்வது.

அதனால்தான் 25 வயதிலேயே முதுமையடைந்தவர்களும் நம்மிடையே இருக்கிறார்கள். 75 வயதிலும் இளமையுடனிருப்பவர்களும் நம்மிடையே வாழ்கிறார்கள்.

புறத்தோற்றத்தைச் சரி செய்வதால் மட்டுமே இளமை விளைகிறது என எண்ணுவது நமது கடிகார முள்ளை 6 மணிக்கு வைத்து விடியும் என்று எதிர்பார்ப்பதைப் போல கறுப்புத் தலைக்கடியில் இருக்கும் கிழட்டு முகங்கள் இன்றும் முதுமையாகவே காட்சியளிக்கின்றன.

புருவத்தை வரையும் பென்சில்கள் நரைத்த மீசையை மறைக்க அதிகமாகத் தமிழகத்தில்தான் பயன்படுத்தப் படுகின்றன.

வயதாவது இயற்கை. நாம் பிறந்தவுடனேயே முதுமையடைய ஆரம்பித்து விடுகிறோம். ஒவ்வொரு நாள் நம் வயதில் கூடிக் கொண்டே போகிறது. நாம் முதுமையை நோக்கி நகர்கிறோமே தவிர இளமையை நோக்கி அல்ல. 

முதுமையை நோக்கிய பயமும், மரணத்தை நோக்கிய பயமும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவை. அதனால்தான் புத்தர்கூட முதலில் பார்த்தது ஒரு முதியவரை. அதற்குப் பிறகுதான் அவர் பிணத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இளமை என்பது வயதாகாமல் இருப்பதல்ல. ஆகிய வயதை ஏற்றுக்கொள்கின்ற மனப்பக்குவம்தான் அது.

எப்போது நாம் ஏற்றுக்கொள்கிறோமோ அப்போது முதுமையிலும் ஓர் அழகு ஒளிர்கிறது. அந்தந்த வயதுக்கு ஏற்றபடி தோற்றமளிப்பதும், அந்தந்த வயதுக்கு ஏற்ற இயல்பான குணங்களுடனும் நடப்பதும்தான் நல்லது.

இருபது வயதில் அறுபது போலப் பேசுவது எவ்வளவு அபத்தமோ அதே போன்று 60 வயதில் இருபது போலத் தோற்றமளிப்பதும் தவறுதான்.

இன்னும் சொல்லப்போனால் அப்படி யாரேனும் தோற்ற மளித்தால் ஏதோ கோளாறு நடந்திருக்கிறது என்று புலன் விசாரணை நடத்த வேண்டும்.

இயற்கை தனது முதுமையை அப்படியே ஏற்றுக் கொள்கிறது. அது இருத்தலோடு ஒருபோதும் எதிர்ப்புக் காட்டுவதில்லை.

பழுத்த இலைகளை மவுனமாக மரம் கழற்றிவிடுகிறது. உதிர்ந்த மலர்களுக்காகச் செடி ஒரு நிமிடம் கூட துக்கம் அனுஷ்டிப்பதில்லை, நதி கடலில் கலக்கும்போது நடந்து வந்த பாதையை எண்ணிப் பெருமூச்சு விடுவதில்லை. உதிர்ந்த சிறகுகளுக்காகப் பறவைகள் பதற்றப்படுவதில்லை.

முதுமை என்பது இயல்பாக நடப்பதால்தான் இயற்கை தன்னை புதுப்பித்துக் கொண்டே இருக்க முடிகிறது.

குழந்தைகளுக்கு அதிகமாக பவுடர் பூசுகிறீர்களா? தாய்மார்களே உஷார்!

மூலவர்கள் இருவர்; உத்ஸவர்கள் ஐவர்: எந்தக் கோயிலில் தெரியுமா?

வெண்டைக்காயை சுவையாக சமைக்க சில டிப்ஸ்!

ஸ்வெட்டர்களின் சுவாரஸ்யமான வரலாறு பற்றி தெரியுமா?

மாயன்களின் வரலாறு என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT