motivation image Image credit - pixabay.com
Motivation

விடாமல் முயலுங்கள் வெற்றி அடையுங்கள்!

ஆர்.வி.பதி

வாழ்க்கையில் வெற்றி சிலருக்கு மிகச் சுலபமாக கிடைத்துவிடுகிறது. ஆனால் சிலருக்கோ வெற்றி என்பது எட்டாக்கனியாகவே இருக்கிறது. ஒரு விஷயத்தைச் சாதிக்க வேண்டும் என்ற வெறியோடு உழைப்பவர்களில் சிலர் சாதிக்கத்தான் செய்கிறார்கள். பலர் வெற்றி கிடைக்கவில்லையே என்ற மளம் தளர்ந்து தங்கள் முயற்சியை பாதியிலேயே கைவிட்டு விடுகிறார்கள். இதனாலேயே அவர்கள் தோல்வியைத் தழுவுகிறார்கள்.

நம்முடைய வாழ்க்கையில் நாம் விரும்பும் எதையும் அடையலாம். அதற்குத் தேவை விடாமுயற்சி. நமது மனம் விநோதமானது. இதை நாம் இன்னும் உணராதவர்களாகவே இருக்கிறோம். நாம் ஒரு விஷயத்தில் வெற்றி அடைய வேண்டும் என்றால் அதற்கு மனவலிமை மிகமிக அவசியம். நாம் சாதிக்க நினைக்கும் விஷயத்தைக் குறித்து நாம் நமது மனதில் எப்போதும் அசைபோட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.

பாரத தேசத்தில் மந்திரங்கள் முக்கிய இடத்தை வகிக்கின்றன. அவை நமது எண்ணத்தை உயர்த்தி நமது மனதிற்கு வலிமையைத் தருகின்றன. முற்காலத்தில் முனிவர்கள் முதல் மன்னர்கள் வரை பலர் அசுவமேத யாகம் முதலான பலவிதமான யாகங்களைச் செய்து வெற்றி கண்டிருக்கிறார்கள். அத்தகைய யாகங்களில் மந்திரங்கள் முக்கிய பங்கு வகித்தன. ஆனால் தற்காலத்தில் நாம் வாழ்க்கையில் வெற்றியடைய நமக்கும் சில மந்திரச் சொற்கள் தேவைப்படுகின்றன. நம்பிக்கையோடு அத்தகைய வெற்றிக்கான மந்திரச் சொற்களை நாம் பயன்படுத்தக் கற்றுக் கொள்ள வேண்டும்.

“என்னால் நிச்சயம் முடியும். நான் சாதிப்பேன்” “நான் சாதிக்கப் பிறந்தவன்” “முயல்வேன் முடிப்பேன்” “இந்த உலகத்தை என் உள்ளங்கைக்குள் அடக்குவேன்” “நான் அனைவருக்கும் உதாரணமாக விளங்குவேன்”

மேலே உள்ளவை வெற்றிக்கான சில மந்திரச் சொற்கள். இவற்றை நீங்கள் உங்களுக்குள் அவ்வப்போது சொல்லிக் கொள்ளுங்கள். உங்கள் மனம் வலிமை அடைவதை நீங்கள் நிச்சயம் உணர்வீர்கள்.

சிலர் ஒன்றாகச் சேர்ந்து ஒரு தொழிலைத் தொடங்குவார்கள். எந்த ஒரு தொழிலும் தொடக்கத்திலேயே வெற்றி பெற்று பணத்தைக் கொட்டாது. பல போராட்டங்களைச் சந்தித்த பின்னரே மெல்ல மெல்ல வெற்றி கிடைக்கும். ஒரு விதையை நட்டால் அது மரமாகி பலனைத் தருவதற்கு பல வருடங்கள் ஆகிறது. நாம் அதுவரை காத்திருக்கத்தான் வேண்டும். இதை உணராமல் பங்குதாரர்களில் சிலர் நம்பிக்கையை இழந்து பயந்து பாதியிலேயே பிரிந்து சென்று விடுவார்கள். அவர்களில் சிலரோ விடாமுயற்சியோடு உழைப்பார்கள். தொடர்ந்து போராடுவார்கள். பிற்காலத்தில் அதற்கான முழுபலனையும் அனுபவிப்பார்கள். பிரிந்து சென்றவர்களுக்கோ வேதனைதான் மிஞ்சும். இதை பலருடைய வெற்றி வரலாறுகளில் படித்திருக்கிறோம்.

எந்த ஒரு செயலிலும் இறங்குவதற்கு முன்னால் நன்றாக யோசிக்க வேண்டும். இது நம்மால் முடியுமா? இதில் நாம் வெற்றி காண முடியுமா? என்ற பல கோணங்களில் யோசிக்க வேண்டும். முடியும் என்று தீர்மானித்து செயலில் இறங்கி விட்டால் அதிலிருந்து எக்காரணத்தைக் கொண்டும் பாதியில் பின்வாங்கக் கூடாது. விடா முயற்சியோடு தொடர்ந்து போராடினால் வெற்றி கிடைக்கக்கூடும். இப்படி வெற்றி பெற்றவர்களும் இருக்கிறார்கள்.

நீங்கள் சாதிக்க நினைக்கும் விஷயத்தை முனைப்போடு செய்யத் தொடங்குங்கள். உங்கள் ஓய்வு நேரங்களில் நீங்கள் சாதிக்க நினைத்த விஷயத்தை சாதித்து முடித்து விட்டதாகக் கருதி உங்கள் மனதிற்குள் கனவு காணுங்கள். அதற்காக உலகம் உங்களை தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டாடுவதாக கற்பனை செய்து பாருங்கள். உங்கள் கற்பனை ஒருநாள் நிச்சயம் பலிக்கும்.

விடாமுயற்சி, வலிமையான எண்ணம் இவை இரண்டையும் மனதில் நிறுத்தி முயற்சி செய்தால் யார் வேண்டுமானாலும் எதையும் சாதிக்க முடியும். வெற்றியும் தோல்வியும் நம் மனதில்தான் இருக்கிறது.

உங்களுக்கு வேண்டியது வெற்றிதானே? எல்லோரும் விரும்புவதும் வெற்றியைத்தானே. விடாமல் முயலுங்கள். வெற்றி அடையுங்கள்.

முகத்துக்கு நீராவி பிடிங்க… கரும்புள்ளிகள் எல்லாம் காணாமல் போகும்! 

பார்ப்பதற்கும் கவனிப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை உணர்த்திய துரோணாச்சாரியார்!

வயதாகும் வேகத்தைக் குறைக்க விபரீத முடிவெடுத்த தொழிலதிபர்!

நடிகர் முரளி அம்மாவுக்கு இப்படி ஒரு மரணமா? கனவில் கூட யாருக்கும் இப்படி நடக்கக்கூடாதப்பா!

மழைக்காலத்தில் உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ள அருந்த வேண்டிய 4 பானங்கள்!

SCROLL FOR NEXT