அதிகாரம், சக்தி, படைபலம், வெற்றி எல்லாவற்றிற்கும் அடிப்படை நிதி பலம். பணவரவு செலவு குறித்துச் சிந்திப்பதாலும் வருமானத்தை அதிகரிக்கும் செயல்களை கையாள்வதாலும் மட்டுமே ஒருவர் பண பலம் பெற்றவராக திகழ முடியாது. வருவாயைச் சரியாக பயன்படுத்தவும் இருக்கும் நிதியை சிறப்புற நிர்வகிக்கவும், நேர்மையாக பொருள் ஈட்டவும், சில பழக்கங்களைக் கையாள்வது மிகவும் அவசியம். நிதியைச் சரியாகக் கையாளும் பழக்கம் இருக்கும் போதே 'நிதி சுதந்திரத்தை' நீங்கள் அடைய முடியும்.
பணபலம் படைத்தவராகவும், செல்வந்தராகவும் வலம் வர நிறைய பொருள் ஈட்ட வேண்டும் என்று பலர் எண்ணுகின்றனர் இந்தக் கூற்று முற்றிலும் உண்மையானதல்ல. நிறைய சம்பாதிக்கின்றவர்கள் கூட வறுமையில் இருப்பதைக் காண்கின்றோம். நிதியைக் கையாளும் சில நல்ல பழக்கங்களை வாடிக்கையாக்குவதாலேயே வெற்றிப் பயணத்தை நிதியின்மை பிரச்சனை இல்லாமல் தொடர முடியும்.
வருமானத்தை விட குறைவாக செலவு செய்வதை பழக்கமாக வேண்டும். உங்களின் முதல் செலவு சேமிப்பாக இருக்கட்டும்
சேமிக்கும் பழக்கம் சிறு வயதில் துவங்கி வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டும். வருவாய் தரக்கூடிய முதலீடுகளில் பணத்தை செலவிடுவதை பழக்கமாக வேண்டும்.
தேவையற்ற செலவினங்களை கண்டுணர்ந்து அச்செலவுகள் செய்வதை தவிர்க்க வேண்டும். காப்பீடு செய்வதை பழக்கமாக வேண்டும். திடீர் பணக்காரர் ஆகும் எண்ணத்தை கைவிடுங்கள். நேர்மையான உழைப்பின் மூலமே பொருள் ஈட்டுவது பழக்கமாக வேண்டும்.
மற்றவர்களின் கடனுக்கு ஜாமீன் கொடுக்கும் பழக்கத்தை கைவிடுங்கள். மற்றவர்களைப்போல் வாழ வேண்டும் பணம் செலவிட வேண்டும் என்று எண்ணாதீர்கள். உங்கள் தேவை அறிந்து மட்டும் செலவு செய்வதை பழக்கமாக்குங்கள். உங்களுக்கு இருப்பதைக் கண்டு நிறைவு காணுங்கள். உயர்ந்தவர்களும் தாழ்ந்தவர்களும் உலகில் என்றும் இருக்கத்தான் செய்வார்கள். இருப்பதைப் போற்றும் பழக்கத்தை கடைபிடியுங்கள்.
வரவு செலவு குறித்து திட்டம் தீட்டுங்கள். வரவு அதிகரிக்கவும், செலவைக் குறைக்கவும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுங்கள். கடன் வாங்கி செலவு செய்யும் பழக்கத்தை கைவிடுங்கள். அவசர காலத்திற்கு உதவும் நிதி குறித்து திட்டமிடுங்கள். எப்போதும் கையில் பணம் இருக்கும் பழக்கங்களை கடைப்பிடியுங்கள்.
சிறு சிறு செலவுகள் குறித்து கவனமாக இருக்கவேண்டும். ஒரு சிறிய ஓட்டை கூட பெரிய கப்பலை மூழ்கடித்துவிடும். நிதியை கையாள்வது என்பது வெறும் வருவாய் கூட்டும் நடவடிக்கை அல்ல. நிதி மேலாண்மை பழக்கங்கள் சிறப்பாக இருப்பதன் மூலமாகவே நிதிநிலைமை சீர் பட்டு நிலைக்கும். மகிழ்வான வாழ்வு வாழ போதிய நிதி கூடவே இருக்க வேண்டியது இன்றைய காலகட்டத்தில் இன்றியமையாதது.