வாகனத்தில் பெட்ரோல் தீர்ந்ததும் மீண்டும் பெட்ரோல் நிரப்புவதுபோல, மனதில் சோர்வு எழும்போது உடனே மகிழ்ச்சியான உற்சாகத்தை நிரப்ப வேண்டும். அதற்கு சில வழிகள்.
1. எந்த வாய்ப்பையும் வசப்படுத்துவதற்கு தயாராக இருங்கள். வாய்ப்புகள் கிடைக்காமல் போனால் அவற்றை உருவாக்கவும் தயங்காதீர்கள்.
2. உங்கள் இலக்கை நோக்கி எப்படி பயணம் செய்கிறீர்கள் என்று யோசித்துப் பாருங்கள். அதில் தேவைப்படும் முன்னேற்றங்களை அடையுங்கள். சின்ன சின்ன வெற்றிகளையும் கொண்டாடுங்கள்.
3. நீங்கள் எந்த துறையில் இருந்தாலும் அதுபற்றி தினமும் பத்து நிமிடங்களாவது படியுங்கள். அந்த துறையில் நிகழும் முன்னேற்றங்கள், மாற்றங்களை அறிந்து கொள்ளுங்கள். உங்கள் துறையில் சாதித்தவர்கள் பற்றி உற்சாகத்துடன் படித்து பாருங்கள்.
4. உங்கள் மீது அக்கறை காட்டும் மனிதர்களிடம் உங்கள் இலக்கு குறித்து பகிர்ந்து கொள்ளுங்கள். எப்போது முயற்சியை கைவிடுவது, எவ்வளவு காலம் தொடர்ந்து முயற்சி செய்வது என்பதைப்பற்றி தெளிவுடன் இருங்கள்.
5. எதை நினைத்தால் உங்களுக்கு அச்சமாக இருக்கிறது. அந்த அச்சத்தை வெற்றி கொள்ளுங்கள். அதுதான் உங்களை உற்சாகமாக முன்னேற வைக்கும்.
6. சில சூழல்களில் உங்களால் உண்மையாக நடக்க முடியாமல் போகலாம். ஆனாலும் உங்கள் மனதுக்கு உண்மையாக இருங்கள்.
7. நீங்கள் எந்த வேலையை செய்தாலும் அதை மகிழ்ச்சியுடன் செய்யுங்கள். உற்சாகமாக இயங்குங்கள். நகைச்சுவையாக பேசுங்கள். சுற்றி இருக்கும் எல்லோருக்கும் நேர்மறை உணர்வைப் பரப்புங்கள். அதுவே உங்களை வாழ்வில் உன்னதமான உயரத்துக்கு கொண்டு செல்லும்.
8. கடினமான மனிதர்கள் வாழ்வில் அவ்வப்போது எதிர்படுவார்கள். அவர்களை கையாள கற்றுக் கொள்ளுங்கள். இணக்கமாகவும், உற்சாகமாகவும் உழைக்கும் சூழலை உங்களை சுற்றி உருவாக்குங்கள்.
9. எல்லோருக்கும் ஏதோ ஒரு சூழலில் மனஉளைச்சல் ஏற்படும். அதை கையாள கற்றுக்கொள்ளுங்கள். தவறுகளோ, பின்னடைவுகளோ ஏற்படும்போது அதற்கு பொறுப்பேற்று கொள்ளுங்கள். உங்களை சூழ்ந்திருக்கும் எல்லா பிரச்னைகளையும், ஒரே நாளில் தீர்க்க நினைக்க வேண்டாம். சில பிரச்னைகள் காலப்போக்கில் தானாகவே சரியாகிவிடும் .
10. வருமானத்திற்காக பல வேலைகளை நீங்கள் செய்யலாம். ஆனால் உங்கள் மனம் விரும்பும் ஏதோ ஒரு வேலையை ஒரு நாளில் சில நிமிடங்களாவது செய்யுங்கள். மற்ற வேலைகளை மனமகிழ்ச்சியுடன் செய்வதற்கு அது உந்துதலாக இருக்கும்.
11. வேலை, தொழில், வியாபாரம் என எதிலும் உங்களுக்கு உதவும் ஒரு வழி காட்டியை தேடுங்கள். அவர்களின் வழிகாட்டுதலில் வலிமை பெறுங்கள்.
12. இது இப்படித்தான் இருக்கும் என்று எதைப் பற்றியும் முடிவு செய்யாதீர்கள். இதை ஏன் மாற்றக் கூடாது என்று கேள்விகள் கேட்டுக் கொள்ளுங்கள்.
13. தினசரி நடைமுறைகளை எந்திரம்போல் செயல்படாமல் மாற்றம் தேடுங்கள். எதிரில் வரும் முதியவரை, ஆபீசில் இருக்கும் செக்யூரிட்டியை, சக ஊழியர்களைப் பார்த்து புன்னகை செய்யுங்கள். அறிமுகமான நபர்களிடம் அக்கறையோடு நலம் விசாரியுங்கள்.
14. ஒரேமாதிரியான சிந்தனை மற்றும் வாழ்விலிருந்து வெளியேறி வருவதற்கான முதல் படியை உணவில் இருந்தே துவங்கலாம். இதுவரை வாங்காத காய்கறிகளை இந்த வாரம் வாங்கி வாருங்கள். அவற்றை எப்படி சமைப்பது, ருசி எப்படி இருக்கும் என எதுவும் தெரியாவிட்டாலும் பரவாயில்லை. வழக்கத்திலிருந்து மாறி புதிதாக முயற்சி செய்யலாம். மகிழ்ச்சியாக இருக்கும்.