Knowledge
Knowledge Img Credit: Freepik
Motivation

அறிவை மழுங்க அடிப்பது எது தெரியுமா? 

இந்திராணி தங்கவேல்

சிலர் சின்ன சின்ன விஷயத்துக்கு கூட பொறுமை இல்லாமல் ஆத்திரப்படுவார்கள். அவர்களிடம் நாம் எதையும் பேச முடியாது. நல்லதை கூறினால் கூட சரியாகப் புரிந்து கொள்ள மாட்டார்கள். அப்படிப்பட்டவர்களை சமாளிப்பது பெரிய விஷயமாக மாறிவிடும். அது போல் நடந்த ஒரு நிகழ்வை இப்பதிவில் காண்போம். 

வயது முதிர்ந்த ஒருவர் நீண்ட நாட்களாக உடல் நலம் இன்றி இருந்தார். பிறகு உடல் நலம் தேறி குப்பை கூடையை வெளியில் வைக்க வந்த பொழுது, குப்பை எடுக்கும் பெண்மணி அவரைப் பார்த்து ஐயா! நன்றாக இருக்கிறீர்களா? என்று நலம் விசாரித்தார். பெரியவருக்கு கோபம் வந்து "இந்தாம்மா நீ எல்லாம் நலம் விசாரிக்க வில்லை என்று இங்கு யார் அழுதார்கள். வந்தியா குப்பை எடுத்துட்டு போனியா என்று இருக்கணும் தெரியுதா? " என்று விரட்டினார். அந்தப் பெண்மணிக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. அமைதியாக குப்பையை  எடுத்துக் கொண்டு போய்விட்டார்.

அடுத்த நாள் குப்பை எடுக்க வரும் பொழுது அந்த பெரியவர் நின்று கொண்டிருந்தார் என்றாலும், குப்பையை மட்டும் எடுத்துக்கொண்டு நகர்ந்துவிட்டார். இதைக் கண்ட பெரியவருக்கு வந்ததே ஆத்திரம் "நல்லா இருக்கியான்னு கூட ஒரு வார்த்தை கேட்க மாட்டியா? நீ எல்லாம் என்ன மனித ஜன்மமோ" என்று திட்டினார். இதைப் பார்த்ததும் எனக்கு ஒரு கதை ஞாபகத்திற்கு வந்தது. அது இதோ:

வெயில் கொடுமையை தாங்கிக்கொள்ள முடியாமல் பாலைவனத்தில் சென்று கொண்டிருந்தது ஒரு ஒட்டகம். அப்போது ஓர் இடத்தில் சப்பாத்திக்கள்ளி வளர்ந்து நிற்பதை பார்த்தது. அப்பாடா இந்த இடத்தில் நிழல் இருக்கிறது. நாம் சற்று நேரம் ஒதுங்கி நிற்கலாம் என்று கள்ளிச் செடியின் அருகே சென்றது ஒட்டகம்.

ஒட்டகமே! இந்த பக்கமாக நீ வந்து நெடுநாட்கள் ஆகிவிட்டது. நலமாக இருக்கின்றாயா? என்று கேட்டது கள்ளிச்செடி.

பாலைவனத்தில் வளரும் கள்ளிச் செடியே நீயா என்னைப் பார்த்து நலம் விசாரிக்கின்றாய்? என்னை நலம் விசாரிக்கின்ற அளவுக்கு நீ என்ன பெரியவனா? என்று கேட்டது ஒட்டகம்.

நலம் விசாரிக்க பெரியவன் என்ன? சின்னவன் என்ன?எல்லாம் ஒன்றுதான் என்றது கள்ளிச்செடி.

 அதனைக் கேட்ட ஒட்டகம் ஆத்திரமடைந்தது. உடனே தன் அருகில் உயரமாக வளர்ந்து இருந்த கள்ளிச்செடியை முறித்து எறிந்தது .

மறு நிமிடம் ஒட்டகம் நின்ற இடமும் வெயிலாக இருந்தது. அதனால் வெயிலின் கொடுமையை தாங்க முடியாமல் தவித்தது. ஐயோ ஆத்திரத்தில் அறிவிழந்து விட்டேனே என்று வருந்தியது.

ஆத்திரக்காரர்களுக்கு அறிவு இருக்காது. ஆத்திரக்காரருக்கு புத்தி மட்டு என்றெல்லாம் படித்திருக்கிறோம் அல்லவா? ஆதலால் ஆத்திரத்தை  தூக்கி தூரப் போட்டுவிட்டு அறிவுபூர்வமாக சிந்திப்போமாக! 

வெந்நீரால் அபிஷேகம் செய்யப்படும் அதிசய சிவன் கோயில்!

சிறுகதை - ஸ்கூட்டர் ராணி!

மேல் நோக்கிச் செல்லும் அதிசய அருவிகள்!

அறிவிற்கு விருந்தாகும் டொராணோவின் 2 அருங்காட்சியகங்கள்!

Food for Hair Growth: முடி வளர Diet-ல் இவற்றை சேர்த்துக்கொள்ளுங்கள்!

SCROLL FOR NEXT